info@thehandofjesus.com

கட்டுரை

கடந்த காலத்தை விட்டுவிட்டு புதியதை தழுவுதல்.

கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. இந்த வாரம் ஏசாயா 43:18-19ல் உள்ள வேத வசனமொன்றை தியானிக்கலாம்.

‘’ முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுது அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்திரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்’’.

கடந்த காலமென்பது பசுமையான நல்ல நினைவுகள் மற்றும் வலிமிக்க சோகமான நினைவுகள் இரண்டையும் குறிக்கும். மேலும் கடந்த கால தவறுகள், வருத்தங்கள் அல்லது தோல்விகளால் நாம் அடிக்கடி சிக்கிக் கொள்ளுகிறோம். கடந்தகால காயங்களில் வாழ்வது மனித இயல்பு, அவ்வாறு செய்யும்போது, நமது கடந்தகால காயங்களில் நம் அடையாளத்தை வடிவமைத்து, நமது வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். இருப்பினும், இயேசுக்கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக, கர்த்தரை மகிமைப்படுத்தும்படியாக அழைக்கப்பட்டிருக்கிறோம். கடந்தகால செயல்கள் நம்மை வரையறுக்காது. இயேசுவின் மூலம் ஆவி புதுப்பிக்கப்படுகிறது.
2கொரிந்தியர் 5:17 கூறுவதுபோல், “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின எல்லாம் புதிதாயின”.

ஏசாயா 43: 18-19ல் உள்ள வார்த்தைகள் இஸ்ரவேலர் சிறையிரிப்பில் பாடுகளோடு இருந்தவேளை, கர்த்தர் அவர்களுக்கு நம்பிக்கையளித்து அவர்கள் மனதை உற்சகப்படுத்தும்படியாக பேசினார். ஜனங்களைப் பார்த்து முந்தினவைகளை, பூர்வமானவைகளை நினைக்க வேண்டாம். இனி நடக்கப்போவைதை தான் செய்யப்போகும் காரியத்தை எண்ணும்படி கேட்கிறார்.
இதில் மூன்று விடயங்கள் உள்ளது.

1. கடந்தகாலத்தை விட்டுவிடுதல்.
2. கர்த்தரின் புதிய கிரியைகளை ஏற்றுக்கொள்வது.
3. விசுவாசத்தோடு வாழ்க்கையை தொடர்வது.

கடந்தகாலத்தை விட்டுவிடுதல்.

ஏசாயா 43:18ல் ‘’ முந்தையவைகளை நினைக்கவேண்டாம்” என்ற கர்த்தரின் கட்டளை நினைவுகளை அழிப்பது பற்றியல்ல. ஆனால் கடந்த கால அனுபவமானது நம்முடைய நிகழ்கால ஓட்டத்தை தடுத்து நிறுத்த அனுமதிக்காது, கடந்தகால தவறுகள், வருத்தங்கள் மற்றும் தோல்விகளை பற்றி சிந்திப்பது நிகழ்காலத்தை முழுமையாக அனுபவிப்பதிலிருந்தும் எதிர்காலத்தில் கடவுளை விசுவாசிக்கவும் தடுக்கிறது. இஸ்ரவேலரின் கடந்தகால வாழ்க்கையை மையப்படுத்தி எதிர்காலத்தை வரையறுக்கவில்லையென்பதை கர்த்தர் நினைவூட்டினார். எங்களுக்கும் இது பொருந்தும், ஆகவே குற்ற உணர்ச்சி, ஏமாற்றங்களுக்கு இடம்கொடுக்காது, கர்த்தரின் வாக்குறுதி தெளிவாக செல்கிறது, எல்லாவற்றையும் புதிதாக்குகிறார், அவர் நமக்காக முன்குறிக்கப்பட்ட காரியங்களை நிறைவேற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம்.

கர்த்தரின் புதிய கிரியைகளை ஏற்றுக்கொள்வது.

மனவிரக்தி மற்றும் பாடுகளோடு ஜீவிக்கிறபோதுகூட கர்த்தர் புதிய காரியத்தைக் நமக்கு செய்ய அழைக்கிறார். நம்முடைய சூழ்நிலைக்கு அப்பால் அவருடைய தெய்வீக கிரியைகளை உணர அழைக்கப்பட்டிருக்கிறோம். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், கடவுள் நமக்கு புதிய வாழ்க்கையை வழங்கியிருக்கிறார். பாவிகளாயிருந்த நம்மை பரிசுத்தவான்களாகவும், பாடுகளிலிருந்து மீட்டும், காணாமல் போயிருந்த நம் கண்டுபிடித்துமிருக்கிறார்.  இது கர்த்தர் நமக்கு செய்த புதிய கிரியை: நம்மை புதிய சிருஷ்டியாக்கி புதிய வாழ்வுக்குள் பிரவேசிக்க வைக்கிறார்.

விசுவாசத்தோடு வாழ்க்கையை தொடர்வது.

நான் வனாந்திரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேனென கர்த்தர் வாக்களித்துள்ளார். இதை இஸ்ரவேலர் அனுபவரீதியாக கண்டனர். நாற்பதாண்டுகள் ஒன்றுமேயற்ற வனாந்திரத்தில் மன்னாவையும் ஆகாரத்தையும் கொடுத்து பாதுகாத்து போஷித்து வழிநடத்தினார். 
அதுபோலவே கர்த்தர் நம்மையும் போஷித்து பாதுகாத்து வழிநடத்துவாரென வாக்களித்துள்ளார். சாத்தியமற்ற காரியங்களையும் கர்த்தர் சாத்தியப்படுத்துவாரென விசுவாசிக்க வேண்டும். கர்த்தரின் வல்லமை அவருடையை வழிகள் ஆச்சரியமானவை. அவரை விசுவாசித்து வாழ்க்கையை தொடர வேண்டும்.

கர்த்தரின் வல்லமை.

கர்த்தரின் வல்லமையானது கடந்தகாலத்து விட்டுவிட்டு, அவரின் கிரியைகளை ஏற்று, விசுவாசித்து முன்னோக்கி செல்ல உதவுகிறது. இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் நாம் மன்னிக்கப்பட்டு, கடந்த கால தவறுகளுக்கு கட்டுப்படாமல், நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ வாய்ப்பளிக்கிறது. 

எரேமியா 29:11 ல் நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. “உனக்காக நான் வைத்திருக்கும் திட்டங்களை நான் அறிவேன்” என கர்த்தர் சொன்னதோடு தீமைக்கல்ல ஆசிர்வாதமான எதிர்காலத்தை கொடுக்க திட்டமிட்டுள்ளதாக வாக்களித்துள்ளார்.

கிறிஸ்தவர்களை துன்புறுத்திய சவுலை பவுலாக்கி தேவராஜ்ஜியம் கட்ட பயன்படுத்தினார். அவருடைய பழைய வாழ்வை விட்டுவிட்டு, இயேசுக்கிறிஸ்துவின் அழைப்பையேற்று புதிய அத்தியாயத்துள் நுழைந்து கர்த்தரின் நாமத்தை மகிமைப்படுத்தினார்.

PAST என்ற வார்த்தையின் சுருக்கத்தை நினைவில் கொள்ளுங்கள்.

P- (PERCEIVE) உணர்தல்; கர்த்தர் செய்யும் காரியங்களை ஆவியில் உணர்தல்.
A- (ABANDOM) கைவிடுதல்: கடந்தகால நினைவுகள் சுமைகளை கைவிடுதல்.
S- (SEE) பார்க்கவும்: கஷ்ரமான காலங்களில் கர்த்தர் உருவாக்கும் பாதைகள் வழிகளை பார்த்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
T- (TRUST) நம்பிக்கை: ஆச்சரியமான புதிய வழிகளை திறக்கும் கர்த்தரின் வல்லமையில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

வரப்போகும் புதிய ஆண்டில் (2025), கடந்த காலத்தை விட்டுவிட்டு கர்த்தரின் வார்த்தையை ஏற்று, கடவுள் நமக்காக ஆயத்தம் செய்துள்ள விசுவாச வாழ்க்கையை தழுவுவோம். நாம் விசுவாசித்து கர்த்தர் முன்குறித்து வைத்தனவற்றை சுதந்தரித்து முன்னேறூவோமாக.

எழுதியவர்: பி. அபி.