info@thehandofjesus.com

கட்டுரை

புதிய ஆண்டில் புதிய சாத்தியாங்கள்: கர்த்தரை விசுவாசித்து சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டும்.

கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. 2024ம் ஆண்டில் நம்மை போஷித்து பாதுகாத்து வழிநடத்திய நல்ல தேவன் நம்மோடு ஜீவிக்கிறார். அதே தேவனை 2025ம் ஆண்டிலும் எங்கள் இதயத்தில் வாழ்ந்து வழிநடத்த அனுமதிப்போமாக. 

சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னாநவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கி ஓடுகிறேன். பிலி 3:13-14. 

“புத்தாண்டு” என்ற சொற்றோடர் புதிய தொடக்கம், புதிய பயணங்கள், புதிய மாற்றங்கள் மற்றும் ஆண்டின் பிற்பகுதிக்கான இலக்கை நிர்ணயித்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது. இது நம் வாழ்க்கையை மீளமைக்கவும், மறுசீரமைக்கவும், மற்றும் மறுவடிவமைக்கவும்படியாக புதிய வாய்ப்பை வழங்குகிறது. முந்தைய ஆண்டிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து அந்தத் தவறுகளை மீண்டும் செய்யாமல் சிறப்பாக மாற்ற முனைகிறோம். கிறிஸ்துவுடனான நமது பயணம் தொடர் வளர்ச்சியாக மாற்றமாக அறியப்படுகிறது. 

அப்போஸ்தலன் பவுல் பிலிப்பியர்களுக்கு கடந்த காலத்தை விட்டுச் செல்லும்போது தனது சொந்த அனுபவத்தை எதிர்பார்ப்புடன் பகிர்ந்துகொள்ளும்படியாக எழுதுகிறார். இந்த ஆண்டில் புதிய சவாலான சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்நோக்குவது என்பதற்கான சக்திவாய்ந்த நுண்ணறிவை அவர் தருகிறார்.

கடந்த காலத்தை விட்டுவிடுதல்:

2024ம் ஆண்டின் இறுதி வாரத்தில் ஒரு பிரசங்கத்தில் இவ்வேதவாசனத்தை கேட்டேன். கடந்த ஆண்டு வெற்றி, போராட்டங்கள், படிப்பினைகள் மற்றும் நினைவுகளால் நிரம்பியுள்ளதென்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். ஆனால் பிலிப்பியர் 3:13ல் “கடந்த காலத்தை விட்டுவிடுதல்” என கூறுகிறது. வேத வசனத்தை விசுவாசித்து, புத்தாண்டில் பாரப்படுத்தும் விடயங்களை விட்டுவிட்டு தெய்வீக அழைப்பை பின் தொடர வேண்டும். கடந்தகால தோல்விகள், பாடுகள், பாவங்கள் இன்று கர்த்தர் நமக்கு முன் திறந்து வைத்திருக்கும் வாய்ப்புகளை பறிக்க அனுமதிக்க முடியாது.

இலக்கை நோக்கி ஓட வேண்டும்.

பிலிப்பியர் 3:14ல் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கி ஓடுகிறேனென பவுல் எழுதுகிறார். கர்த்தர் நமக்கு தீர்மானித்திருக்கும் இலக்குகளை மட்டும் நோக்கி ஓட வேண்டும். கர்த்தரின் நாம மகிமைக்காக பிறர் ஆசீர்வாதமான வாழ்வுக்காக உழைக்க வேண்டும். 2025ம் ஆண்டிற்கான கேள்வி? 2025ல் நான் எதைச் சாதிக்க வேண்டும்? என்பதை அல்லது 2025ல் கடவுள் என் மூலம் எதைச் செய்ய சித்தமாயிருக்கிறார் என்பதாக இருக்க வேண்டும்.

கர்த்தரை சார்ந்து விசுவாசித்து புதிய ஆண்டை ஆரம்பித்தல்.

உலகத்தை சூழ்நிலையை பார்க்கும்பொழுது புதிய ஆண்டானது அச்சுறுத்தலாகவும் நிச்சயமற்ற தன்மையாலும் நிரம்பியுள்ளது. கடந்தாண்டு (2024) வாழ்வனுபவம் சோர்வடையச் செய்திருக்கலாம். ஆனால் கர்த்தர் புதிய தொடக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளார். எரேமியா 29:11ல் நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே என கர்த்தர் சொல்லுகிறார். உங்களுக்கு தீங்கு விளையாத, ஆசீர்வாதமான, சமாதானமான நம்பிக்கையுள்ள எதிர்காலத்தை தர கர்த்தர் திட்டமிட்டுள்ளார்.

இந்த ஆண்டில் நாம் நுழையும்பொழுது பின்னானதை மறந்து கர்த்தர் நியமித்திருக்கும் இலக்கை நோக்கி ஓடுவோமாக. அவர் செய்யப்போகும் புதிய மகிமையான காரியங்களுக்கு எங்களை ஒப்புக்கொடுப்போமாக.
இந்தாண்டு உங்கள் அனைவருக்கும் ஆசீர்வாதமான ஆண்டாக அமையட்டும்.

ஜெபம்.
அப்பா பிதாவே இந்த புதிய (2025) ஆண்டு தொடங்கும்போது உங்கள் சத்தம் கேட்டு சித்தம் செய்ய பெலன் தாருமென ஜெபித்துக்கொள்ளுகிறேன்.

எழுதியவர்: த. அபி