info@thehandofjesus.com

கட்டுரை

தீர்க்கமான முடிவைத் தீர்மானியுங்கள்.

தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,
இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 2 பேதுரு 1:3-4

கர்த்தரை பின்பற்றுவதென்பது, அவர் அழைத்த அழைப்பையேற்று வாழ்ந்து முடிப்பதாக அர்த்தப்படாது. கிறிஸ்தவ வாழ்வை உற்சாகத்தோடு ஆரம்பிக்கும் ஒருவர் அதே உற்சாகத்தோடு ஓடி முடிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் நன்றாக தொடங்கும் அனைவரும் நன்றாக முடிப்பதில்லை. வாழ்க்கையில் பல தடைகள், தோல்விகள், சவால்களை எதிர்கொள்ளுகிறோம். அவை தேவனோடு இருக்கும் உறவை விரிசலாக்குகிறது அல்லது இழக்கச் செய்கிறது. வேத வார்த்தையானது விசுவாசத்தில் உறுதியாக இருக்கும்படி ஊக்குவிக்கிறது.

மேலே வாசித்த வேதப்பகுதியானது பல தேசங்களில் சிதறிக்கிடந்த விசுவாசிகளுக்கு பேதுருவால் எழுதப்பட்ட நிருபத்தில் குறிப்பிடப்பட்டதாகும்.
இவ்வேத வசனங்கள் இறுதிவரை முன்னேற ஊக்கமளிக்கிறது. இங்கே நான்கு முக்கிய விடயங்களை கற்றுக்கொள்ளுகிறோம். 
1. கர்த்தரின் முன்னேற்பாட்டின் வல்லமை. 2. கர்த்தரைப் பற்றிய அறிவின் அவசியம். 3. கர்த்தரின் மகிமையிலும், நன்மையிலும் வாழ்வது. 4. கர்த்தரின் மாறாத உண்மையான வாக்குறுதி. 

கர்த்தரின் முன்னேற்பாட்டின் வல்லமை.

கர்த்தரின் தெய்வீக வல்லமை ஏற்கனவே ஒரு தெய்வீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் நமக்குக் கொடுத்துள்ளதென்பதை பேதுரு நமக்கு நினைவூட்டுகிறார். பாடுகள், சோதனைகளை நாம் எதிர்கொள்ளும்போது அதைரியப்படுகிறோம் சேர்வடைகிறோம். ஆனால் இயேசுக்கிறிஸ்து அச்சூழ்நிலைகளை எதிர்கொள்ள சமாளிக்க தேவையான அனைத்து வளங்களை, மனித தயவை முன்னேற்பாடாக ஆயத்தப்படுத்தி வைத்துள்ளார். கடவுளின் வல்லமையை நாம் சம்பாதிக்கும் ஒன்றல்ல, மாறாக இயேசுக்கிறிஸ்துவின் கிருபையின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.

கர்த்தரைப் பற்றிய அறிவின் அவசியம்.

பேதுரு கர்த்தரின் வல்லமையோடு “அவரைப் பற்றிய அறிவுடன்” இணைக்கிறார். கர்த்தரின் வல்லமையை பயன்படுத்துவதற்கு அவரைப் பற்றி அறிந்திருப்பது அவசியமானதாகும். கர்த்தர் யார்? அவர் என்ன செய்திருக்கிறார் என்பது பற்றிய நமது சொந்த புரிதலில் நாம் வளரும்போது, நம்மில் செயல்படும் அவரது வல்லமையைப் பற்றி நாம் மேலும் மேலும் அறிந்திடமுடியும்.  

 

கடவுளின் மகிமையிலும், நன்மையிலும் வாழ்வது.

கர்த்தர் நம்மை “அவரது சொந்த மகிமையாலும் நன்மையாலும்” அழைப்பதாக பேதுரு எழுதியுள்ளார். நமது அழைப்பை சுயபெலத்தில் வாழ்வதற்கு பயன்படுத்தாது மாறாக நம்மைச் சுற்றியுள்ள உலகிற்கு கடவுளின் மகிமையையும் நன்மையையும் பிரதிபலிப்பதாகும். இந்த அழைப்பின் அழகு என்னவென்றால் கடவுளின் நன்மை தொடர்ச்சியான ஊக்கத்தின் மூலமாகும். மேலும் பயணம் கடினமாக உணர்ந்தாலும்கூட அது தொடர்ந்து முன்னேற ஒரு காரணத்தை வழங்குகிறது.

கர்த்தரின் மாறாத உண்மையான வாக்குறுதி. 

கர்த்தர் நம்மைத் தயார்படுத்தாத எதற்கும் அவர் அழைப்பதில்லை. கிறிஸ்தவ ஜீவியத்தில் நாம் தனியாக இல்லை, கர்த்தரின் உண்மையான வாக்குறுதியானது அவரோடு நிலைத்திருக்கவும் வளரவும் தேவையான அனைத்தையும் உறுதி செய்கிறது.

உங்களுக்கு எதிராக, விரோதமாக அணிவகுத்து நிற்கும் உலகம், மாம்சம், பிசாசாகிய மூன்று சக்திகளை எழ அனுமதிக்கார். கர்த்தர் அழைத்த அழைப்பில் உறுதியாக இருந்து ஓட்டத்தை நிறைவுசெய்ய வேண்டும்.

கேள்வி:

நீங்கள் எப்படி உறுதியாக இருந்து ஓட்டத்தை ஓடி முடிக்கமுடியும்?

பதில்:

தம்முடைய சொந்த மகிமையாலும் நன்மையாலும் நம்மை அழைத்தவரைப் பற்றிய நமது அறிவின் மூலம், அவருடைய தெய்வீக வல்லமை நமக்கு ஒரு தெய்வீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் தருகிறது. இதன் மூலம் அவர் நமக்கு மிகவும் பெரியதும், விலைமதிப்பற்றதுமான வாக்குறுதிகளை அளித்துள்ளார். கர்த்தரின் வல்லமை வாக்குத்தத்ததின் மூலம் தீய ஆசைகளை களைத்து உலகின் சீர்கேட்டுக்கு தப்பி தெய்வீக இயல்பில் பங்கேற்கலாம்.

எழுதியவர்: பி. அபி