info@thehandofjesus.com

கட்டுரை

யோவான் 14: 1-3, உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

இயேசுவானவர் இதைச் சொன்னவேளையிலிருந்த சூழலை பார்க்க வேண்டும். அன்று இரவு இயேசுவானவர் கைது செய்யப்படப்போகிறார். எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளை சீஷர்களுக்கு தெரிவித்தார். அவர் கைது செய்யப்பட்டு, பாடுகள் அனுபவித்து சிலுவையில் அறையப்படபோவதையும் மற்றும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து பரலோகம் போகப்போவதையும் கேட்கும் சீஷர்களுக்கு அதிர்ச்சியும் போராட்டமாகவும் இருக்குமென்பதை அறிந்தும், அவர்களை கவலைப்பட வேண்டாம் நம்பிக்கையாயிருங்களென திடப்படுத்தினார். இயேசுவானவர் “சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்லுகிறேன், என் சமாதானத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன்” என உறுதியளித்திருக்கிறார். ஆகவே கலங்காதும் பயப்படாதுமிருங்கள்.

இங்கே இயேசுவானவர் யாரிடம், எதை, ஏன் பேசினாரென்பதை தியானிக்கலாம்.

இயேசுவானவர் யாரிடம் பேசினார்?

அந்த நேரம் அவர் தம் சீஷர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அடுத்து வரவிருக்கும் நிகழ்வுகள் வாழ்க்கையை மாற்றும் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் இன்றியமையாத பகுதியாகும். இந்த சீஷர்கள் சுமார் 3 ஆண்டுகள் அவருடன் இருந்தார்கள். அவர்கள் கற்பனை பண்ணியிராத கடுமையான திடீர் மாற்றங்களை எதிர்கொள்ளப்போகிறார்கள்.

யோவான் 14:1-3 வேதவாக்கியம் எதைப்பற்றி பேசுகிறது?

பிதாவாகிய தேவனையும், கர்த்தராகிய தன்னையும் நம்பும்படி, இயேசுவானவர் தம் சீஷர்களுக்கு உறுதியளித்தார். சீஷர்களை விட்டு பரமேறிப்போவது அவர்களுக்கு மிகுந்த கவலையைக் கொடுக்கும், ஆனால் அவர் தனது இரண்டாவது வருகைக்கு அவர்களை தயார்படுத்துவதால், அவர்களின் இருதயம் கலங்குவதை அனுமதிக்க வேண்டாமென அவர் கேட்டுக்கொண்டார். ‘’நான் வந்து உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன்” எனச் சொன்னதானது: தம்முடைய சீஷர்கள்மீது வைத்திருந்த அளவிடாத அன்பையும் மற்றும் சரியான நேரத்தில் அவர் திரும்பி வருவார் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

இயேசுவானவர் ஏன் இவ்வாறு கூறினார்?

அவர் தம்முடைய சீஷர்களுக்கும் அதேவேளை நமக்கும் சொல்லுகிறார்; வேதத்தை வாசிப்பவர்கள், கர்த்தரை விசுவாசிப்பவர்கள் பாடுகளின்போது நெருக்கடியான கடினமான சூழ்நிலையின்போது கர்த்தர்மீது நம்பிக்கை வைக்கும்படி ஊக்குவிக்கிறார். நாம் இயேசுவை நம்பி விசுவாசிப்பது மட்டுமல்லாது, இயேசுக்கிறிஸ்துவோடு ஐக்கியம் கொள்வது அவசியம். இயேசுவானவர் இப்பூமியை விட்டு புறப்பட முன்னர் சீஷர்களின் பாதுகாப்பை உணர அனுமதிக்கும் வகையில், பரலோகத்தில் ஒர் இடத்தை வாக்களித்தார். அவர் நித்திய வாழ்வை வாக்களித்தார். சரியான வேளைவரும்வரை பொறுமையாயிருந்து நித்திய வாழ்வை சுதந்தரித்துக்கொள்ளுங்கள். இயேசுக்கிறிஸ்து எப்படி வாழ்ந்தாரே அப்படியே வாழுங்கள். இயேசுவானவர் நித்திய வாழ்வுக்கு நம்மை தயார்படுத்தியதோடு அதை சுதந்தரித்து வாழ்வதற்கான வாக்குறுதியை யோவான் 14:1-3 தருகிறது. ஆகவே நீங்கள் முழு நம்பிக்கையோடு இருங்கள். இயேசுக்கிறிஸ்து வந்து உங்களை அழைத்துச் செல்லுவார்.  

எழுதியவர்: பி. அபி.