info@thehandofjesus.com

எங்களை பற்றி

தேவனுக்கு பிரியமான சகோதரரே,
 

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அளவிட முடியாத அன்பினாலும், கிருபையினாலும் பிரசவித்த இவ்விணையத்தளத்தினூடாக உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவையே நாடுங்கள். (கொலேசெயர் 3:2)
இரட்சிக்கப்பட்ட ஒருவர் மேற்குறிப்பிட்ட வேத வசனத்தின்படியே வாழ பிரியப்படுவார். உலக சினேகம் கொள்ளாது, நம்மை உண்டாக்கியவரும், நமக்காக தம் ஜீவனையே கிரயமாக செலுத்தி நம்மை மீட்டுக்கொண்டவருமான அவருக்கு நன்றியுள்ளவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும் வாழ்வதோடு நின்றுவிடாது, அவருடைய உள்ளத்தின் வாஞ்சையை நிறைவேற்றுகிற பிள்ளைகளாக, அவருடைய இராஜ்ஜியம் கட்டப்பட அவருக்கு (இயேசுக்கிறிஸ்துவுக்கு) பணி செய்வதே எமது ஊழியத்தின் பிரதான தரிசனமாகும். அப்பணியின் ஒரு பகுதியே இவ்விணையத்தளமாகும்.

1.வேதாகம கல்வி

எமது பிள்ளைகளும், பின்வரும் சந்ததியினரும் தேவனுக்கு பயந்து அவரைச் சார்ந்து அவருக்குப் பிரியமாக வாழ வேண்டும்.
அனுதினமும் வேதத்தை கற்று பக்திவிருத்தியடைய வேண்டுமென்பதே எமது பேரவா.
தினமும் வேதத்தை வாசித்து பின்னர் இத்தளத்தில் தினசரி தியானம் என்ற பகுதியின் கீழிருக்கும் வேதபாடங்களை தினசரி தியானிப்பதினூடாக வேதம்படிப்பதை வழக்கமாக்கிக் கொள்வதோடு, வேத அறிவையும் வளர்த்து, தேவ உறவில் நிலைத்து நிற்கலாம். இவ்வனுபவமானது சந்ததி சந்ததியாக தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்படும் பட்சத்தில் பக்கிவைராக்கியமுள்ள, தேவனுக்கு பிரியமான சந்ததியை உருவாக்கவும் முடியும்.
எனவே பெற்றோர்களே, வேதப்படிப்பானது அன்றாட வாழ்க்கையில் அத்தியாவாசியமானதொன்றாக கருதி உங்கள் பிள்ளைகளுக்கு பொருத்தமான பாடத்தை தெரிவு செய்து படிக்க வையுங்கள்.
பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான். (நீதிமொழிகள் 22:6)

2. பிறருக்கு உதவுதல்.

கிறிஸ்தவமானது ஒருபக்கம் தேவனுக்குப் பிரியமாக வாழ்வதோடு மறுபக்கம் பிறருக்கு உபயோகமாக வாழ்வதேயாகும். இவ்விரண்டும் சமநிலையில் பயணிப்பதினூடாகவே வெற்றியுள்ள கிறிஸ்தவ ஜீவியத்தை அனுபவிக்க முடியும்.

எவரிடமும் பணம் பெற்றுக்கொள்ளாது, எனது செந்த வருமானதைக் கொண்டு செய்த முக்கியமான நற்கிரியைகள் சிலவற்றை “எங்கள் சேவை” எனும் பகுதியில் பதிவிடுகிறேன். அப்பதிவுகளை பார்க்கும் நீங்களும் நற்கிரியைகள் செய்ய ஆர்வப்படுவீர்களென நம்புகிறேன்.  
என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்பு கூரக்கடவோம். (1யோவான் 3:18) இவ்வேத வசனத்தின்படி வாழ பிரயாசப்படுவோம்.
தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.
சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். (ரோமர் 2:6-7)
மேற்குறிப்பிட்ட சத்திய வசனத்துக்கமைய உங்கள் வாழ்கை அமையட்டும்.

3.ஆவிக்குரிய வளர்ச்சி.

தாலந்துகள் திறமைகளுடைய பல தேவப்பிள்ளைகள் சபைகளில் இருக்கிறார்கள்.
சபைகளில் எல்லோருக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. சகோதரர்கள் உங்கள் ஆக்கங்களை எழுதி அல்லது ஒலிப்பதிவு செய்து அனுப்பினால், தகுதியானவற்றை முடிந்தளவு வெளிக் கொண்டுவர பிரியப்படுகிறோம். ஆக்கங்களை அனுப்பிவையுங்கள்.
ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள். (1தெசலோனிக்கேயர் 5:11)
வேதாகம கல்வி, பிறருக்கு உதவுதல், ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவுதல்.
இம்மூன்றையும் மையப்படுத்தியே இவ்விணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாமனைவரும் இணைந்து செயற்பட்டு இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துவோமாக.
இயேசுவின் கரம் ஊழியமாவது 2012ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியை ஆரம்பித்து இன்று இலங்கையின் அனைத்து பாகங்களுக்கும் பணிசெய்ய கர்த்தர் உதவி செய்தார்.
இத்தனையாண்டுகாலமும் கர்த்தர் ஒரு குடும்பத்தை போஷித்து அதிலிருந்து கிடைக்கும் ஆதாயத்திலிருந்தும், அர்ப்பணிப்பு தியாகம் நிறைந்த பல சகோதரர்களின் ஒருமனப்பட்ட செயற்பாட்டாலுமே இயங்கிக் கொண்டிருக்கிறோம். இறுதிவரையும் இந்நிலையிலிருந்து வழுவாது, தேவனுக்கு பிரியமான பணிவிடைகாரனாக ஓட்டத்தை ஓடி முடிக்க தினமும் எங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
நன்றி

பணிவிடைக்காறன்
த. பிரபாகாரன்.

>