info@thehandofjesus.com

கட்டுரைகள்

                                                           அன்பு

ஆவியின் கனிகளிலே தலை சிறந்து விளங்குவது அன்பு ஆகும். அன்பு என்பது மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டிய உள்ளார்ந்த இயல்பு, மனிதனின் தவிர்க்க முடியாத பண்பு, அதுமாத்திரமல்ல, மனுக்குலத்தின் மகிமைக்கே காரணமாய் அமையும் ஒரு சிறப்பான ஒழுகலாறும் அன்பின் பால் நிகழ்வதே. 
அன்பு மெய்யானதாக இருக்க வேண்டும். எமது இதயமானது உள்ளார உணரும் போது தான் அன்பு துளிர்க்கிறது. இவ்வாறு அன்புணர்ச்சியின் தீவீர நிலையில் தான் பாசம், நேசம், வாஞ்சை, நட்பு, இரக்கம், கருணை என்ற பண்புகள் எல்லாமே உருவாகின்றன.

அன்பு, இதுதான், இன்ன வகையானது தான் என்று பிறருக்கு வார்த்தைகளால் எடுத்துரைக்கும் தன்மையுடையது அல்ல. ஒருவர் இன்னொருவரிடத்தோ, பிறரிடத்தோ, மற்றுயிர்களிடத்தோ  கொள்ளும் அன்புணர்வானது உன்னதம் சார்ந்தது. இதயத்தை நெகிழ்வித்துப் பிரவகிப்பதே இந்த அன்பு. வேதாகமத்தில் 1கொரிந்தியர்: 13ம் அதிகாரத்திலே அன்பைப்பற்றி மிகவும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.”நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும் அன்பு எனக்கிராவிட்டால் சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்”.
மேலும் அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்பானது ஒரு போதும் அநியாயத்தில் சந்தோஷப்படாது. சத்தியத்திலே சந்தோஷப்படும்.

அன்பு தடையின்றி யாரிடத்தேயும் யார் மேலும் தோன்றக்கூடியது. அன்பு எனும் இயல்பு அனைத்து உயிர்களிலும் உள்ளதெனினும், மனதினால் மகிமை பொருந்திய மனிதனிடத்து இதன் ஆற்றல் பெருகி நிற்கும். உன்னதமான அன்பு உலகத்தையே உறைய வைக்கக் கூடியது. ஒரு மனிதனிடத்தில் அன்பு இல்லாவிடில் அவன் வாழ்வே அர்த்தமற்ற போலியான வாழ்வாகிவிடும். ஒருவரையொருவர் நன்கு கவனித்துக் கொள்ளுதல், உதவி செய்யும் பொருட்டு அவர் மீது அக்கறை செலுத்துதல், புரிந்து கொண்டு அடுத்தவரை மதித்து நடத்தல், அவருக்காக இரங்குதல் போன்ற நற்செய்கைகள் எல்லாம் அன்பில் பொதிந்திருக்கும் உணர்வுகளாகும். கடமைக்காக ஒருவரிடத்தில் அன்பு கொள்வது உண்மையான அன்பு அல்ல. இதய பூர்வமாக நேசிப்பது தான் உண்மையான அன்பு. நாம் ஒருவரிலொருவர் அன்பாய் இருக்க வேண்டும். ஏனென்றால் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் எவனுமே தேவனை அறிய முடியாது. இதனை 1யோவான்4:7-8 ல் “அன்பில்லாதவன் தேவனை அறியான் தேவன் அன்பாகவே இருக்கிறார்” எனும் வார்த்தையூடாகவே அறியலாம்.

அன்பு என்ற பதமானது வரைவிலக்கணங்களுக்கே அப்பாற்பட்ட ஒரு உள்ளார்ந்த உணர்வாகும். அன்பின் மூலம் ஆற்றப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தை கொண்டுவந்தே தீரும். அமைதியையும் அநுக்கிரகத்தையும் கொண்டு வராத அன்புச் செயல்கள் உலகத்திலே எதுவுமில்லை. மனிதனுடைய அன்பைப் பார்க்கிலும் தேவனுடைய அன்பே பெரியது. அவர் நம்மீது அன்பு வைத்ததனால் தான் எமக்காக தன்னுயிரையே பலியாக்கி எம்மை மீட்டுக்கொண்டார். நாம் தேவனிடத்தில் அன்பு கூர்ந்து நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு அவருடைய பிள்ளையாக மாறும் போது தான் எமக்கும் தேவனுக்கும் இடையில் புதிதாக அன்பு துளிர்க்கின்றது.

நாம் தேவனிடத்தில் அன்பு கூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்பு கூர்ந்து நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரப் பலியாகத் தம்முடைய ஓரே குமாரனை அனுப்பினதாலே அன்பு உண்டாயிருக்கிறது. தேவனைப் போல எம்மீது அன்பு வைக்க இந்த உலகத்திலே எவருமில்லை. அவருடைய அன்பு பெரியது. உண்மையான வாழ்வு, உண்மையான ஞானம், உண்மையான அன்பு இம் மூன்றுமே ஓன்றோடோன்று மிகவும் நெருக்கமாக இணைந்தவையாகும். அன்பானது அச்சத்தை ஓட்டும் தன்மையுடையது. அன்பிலே பயமில்லை. பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும். பயமானது வேதனையுள்ளது. பயப்படுகிறவன் அன்பிலே பூரணப்பட்டவனல்ல, அன்பு எதையுமே எதிர்பாராது.

அன்பிலே பலவகையுண்டு. ஒரு பிள்ளை மீது தாய்க்கிருக்கும் அன்பானது பாசமாகும். தந்தை மகளிடத்தில் வைத்திருக்கும் அன்பு வாஞ்சையாகும். துன்பத்தில் உதவிடும் நண்பர்கள் தொடர்பினால் ஏற்படும் அன்பானது நட்பு எனப்படுகிறது. ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்களுக்கிடையே ஏற்படும் அன்பு சகோதரப் பாசமாகும். எம்மை சிருஷ்டித்த ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து நம்மீது காட்டும் அன்பு கருணை ஆகும். ஏழைமீது மற்றவர் காட்டும் அன்பு இரக்கம் எனப்படும். இவ்வாறாக இதயங்கள் ஒன்றுபடுதலே இந்த எல்லாவித உறவுகளுக்கும் அடிப்படையாக அமைகிறது.

அன்பானது சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் சகிக்கும், அன்புக்கு பொறாமையில்லை, அன்பு தன்னைபுகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதை செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அன்பு ஒரு போதும் அழியாது. அது என்றுமே நிலைத்து நிற்கும். மேலும் தேவனிடத்தில் அன்பு கூருகிறேனென்று ஒருவன் சொல்லியும் அவன் தன் சகோதரனிடத்தில் அன்பு கூறாமல் அவனைப் பகைத்தால் அவன் பெய்யன் என வேதம் கூறுகிறது. தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூறாமல் இருக்கிறவன் தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூறுவான்? தேவனிடத்தில் அன்பு கூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்பு கூற வேண்டும். இயேசுவை விசுவாசிக்கிற எவனும் தேவனாலே பிறந்திருக்கிறான், பிறப்பித்தவரிடத்தில் அன்பு கூறுகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்பு கூறுகிறான். நாம் தேவனிடத்தில் அன்பு கூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும் போது தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்பு கூறுகிறோம்.

விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம் மூன்றுமே நிலைத்திருக்கின்றது. இவைகளில் அன்பே பெரியது. எனவே எப்படி நோக்கினாலும் அன்பு என்ற உளமார்ந்த இயல்பு, கிளர்ச்சி, உணர்ச்சி, பண்பு தான் பல வடிவங்களாக இந்த உலகையே இயக்கி வருகின்றது. நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்கின்ற நல்ல விழுமியங்கள் எம் ஒவ்வொருவரிடத்திலுமுள்ள அன்பின் அடிப்படையிலே தான் உருவாகின்றன என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து வாழ வேண்டும். மற்றவரை நேசிக்கின்ற மனப்பாங்கும், சகிப்பும் உள்ளார்ந்த சிந்தனையும் அன்புள்ளவர்களிடத்தே தான் குடிகொள்ளும்.

அன்பு தான் இன்ப ஊற்று, அன்பு தான் உலக மகாசக்தி. நாம் அன்பு செய்வதை மற்றவர்கள் உணரும் போது தான் உள்ளமானது நெகிழ்வடைகின்றது அங்கே உண்மை தொனிக்கிறது. முடிவுகாண முடியாத இந்த உறவில் பொறாமைக்கு இடமேயில்லை. நிறைவான கிறிஸ்தவர்களாகிய நாம் தெரிந்துணர வேண்டிய விடயமொன்று உள்ளது. அதாவது அன்புக்கு என்றுமே ஒரு அற்புதமான கருத்து உண்டு. “நம்மை நேசிப்பது போல் பிறரையும் நேசிக்க வேண்டும்” என்பதே ஆகும்.

ஆகவே கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம்மை நேசிப்பது போல் பிறரையும் நேசித்து அன்பு படைத்தவர்களாக திகழ்ந்து பயனுள்ள வாழ்க்கை வாழ்வோம்.

பெயர்:- ஜெ.தர்சிகா
சபை  :- அப்போஸ்தல திருச்சபை
முகவரி:- றெட்பானா, வள்ளுவர்புரம், விசுவமடு