info@thehandofjesus.com

கட்டுரைகள்

                                     யோபுவும் தேவனுக்குப் பயப்படுதலும்

“கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடக்கிற மனுஷன்  எவனோ, அவன் பாக்கியவான்.
 சங்கீதம் 128:1

தற்காலத்தில் மக்கள் இயற்கைக்குப் பயப்படுகிறார்கள், செய்வினை சூனியத்திற்குப் பயப்படுகிறார்கள், பொல்லாத மனிதர்களுக்கு பயப்படுகிறார்கள், பேய்கள் அசுத்த ஆவிகளுக்குப் பயப்படுகிறார்கள், பேரழிவான ஆயுதங்களுக்கு பயப்படுகிறார்கள், கொடிய நோய்களுக்குப் பயப்படுகிறார்கள், எதிகாலத்தை குறித்துப் பயப்படுகிறார்கள் ஆனால் தன்னை உருவாக்கிய தேவனுக்கு பயப்படுவதற்கு தயங்குகிறார்கள். 
பரிசுத்த வேதாகமத்தில் பல பரிசுத்தவான்கள் தம்மைப் படைத்த தேவனுக்கு பயந்து நடந்தமையால் பல ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டனர் என்பதனை நாம் வேதாகமத்தை தியானிக்கும் போது அறிந்து கொள்கிறோம்.

அவர்களில் ஒருவரான யோபுவும் காணப்படுகிறார். ஊத்ஸ் தேசத்திலே அக்காலத்திலே இருந்த செல்வந்தர்களில் யோபு மிக முக்கியமானவர். அவரிடத்தில் பல வேலையாட்களும், ஒட்டகங்களும், ஆடுகள், மாடுகள், கழுதைகள், உள்ளிட்ட சொத்துக்களும் பெருமளவிலான நிலவுடமைகளும் காணப்பட்டது. அக்காலத்தில் ஊத்ஸ் தேசத்தில் வாழ்ந்தவர்கள் மத்தியில் மதிப்புக்கும், அதிகாரத்திற்கும், கனத்திற்கும் உரியவராக யோபு காணப்பட்டார். அத்துடன் யோபு கிழக்கத்திய புத்திரர் எல்லாரிலும் பெரியவராயிருந்தார். இத்தகைய செல்வ சீமானாக யோபு இருந்தாலும் தேவனுக்கு பயப்படும் பயம் யோபுவுக்கு அதிகமாக இருந்தது. தன்னுடைய பிள்ளைகள் விருந்து செய்யும் நாட்களில் பாவம் செய்திருப்பார்கள் எனப் பயந்து தன்னுடைய ஒவ்வொரு பிள்ளைகளின் எண்ணிக்கையின்படியும் ஒவ்வொரு பிள்ளைகளுக்காகவும் கடவுளிடம் வேண்டுதல் செய்வார். இதனை யோபு வழக்கமாக செய்து வந்தார் எனக் கூறப்படுகின்றது. ஆனால் அப்படிப்பட்ட யோபுவின் வாழ்க்கையில் தேவனின் அனுமதியுடன் சாத்தான் சோதனையை ஏற்படுத்தினான். யோபுவிடமிருந்த செல்வங்களாகிய ஆடுகள், மாடுகள், வேலையாட்கள், நிலவுடமைகள், ஒட்டகங்கள், கழுதைகள் உள்ளிட்ட அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டது. அத்துடன் தன்னுடைய பிள்ளைகளையும் யோபு இழந்தான். யோபுவின் உடலிலும் தலைமுதல் கால்வரை வியாதி ஏற்பட்டது. இவ்வாறு யோபு  உடல் ரீதியாகவும், உலக ரீதியாகவும் தன்னிடமிருந்த செல்வம், பெலன், மதிப்பு, கனம் எல்லாவற்றையும் இழந்தான். யோபுவின் மனைவி கூட யோபுவை புரிந்து கொள்ளாமல் பேசினாள். அத்துடன் யோபுவின் நண்பர்களும் யோபுவை குறை கூறினார்கள். ஆனால் இத்தனை இழப்புக்கள், வேதனைகள் வந்தாலும் தேவனைத்தூசியாது தேவனுக்கு பயந்து நடந்தான்.

ஆனால் தற்காலத்தில் எங்களைப் போல கடவுளை அறிந்த பிள்ளைகளும் வாழ்கையில் வேதனைகள், பாடுகள், கண்ணீர், வியாதி, அவமானம், இழப்பு, வரும் போது கடவுளைத் தூசித்து கடவுளை விட்டு பின்மாற்றமாக செல்கின்றனர் (செல்கின்றோம்). யோபின் நிலை உங்களின் நிலையிலும் மோசமும் துன்பகரமானது. ஆனால் அந்த நிலையிலும் யோபு உறுதியாக தேவனுக்கு பயந்து வாழ்ந்தமையால் யோபுவின் பின்நிலமையை கர்த்தர் இரட்டத்தனையாக ஆசீர்வதித்தார். இழந்த அனைத்திலும் இரட்டிப்பான ஆசீர்வாதத்தை யோபு கண்டார். ஆகவே பாடுகள், துன்பங்கள் மிகுந்த இவ்வுலகில்  நாங்களும் பாடுகள், வேதனைகள், துன்பங்களில் தேவனைத் தூசியாது தேவனை விசுவாசித்து அவருக்கு பயந்து வாழ்ந்தால் அவர் நமக்கு பல ஆசீர்வாதங்களைத் தருவார் என்பதே எமது விசுவாச ஓட்டத்தில் அடிப்படையான உண்மை.

நாங்கள் உலக காரியங்களுக்கு பயந்து கடவுளை மறுதலித்து வாழ்ந்தால் நித்திய வாழ்வை நாம் பெறுவது கடினமான விடயம். கிறிஸ்த்தவ வாழ்கை என்பது மலர்விரித்த பஞ்சனை வீதியால் நடப்பதல்ல. பாடுகள், உபத்திரவங்கள், இழப்புகள், அவமானங்கள் மத்தியிலும் வாழ்வது தான்.
கர்த்தர் அனைத்தையும் காண்கிறார் என்ற விசுவாசத்துடன் நாங்கள் அவருக்கு பயந்து நடந்தால் போதும் தேவன் எங்கள் வாழ்வையும் ஆசீர்வாதமாக மாற்றி நித்திய வாழ்வைத் தருவார்.

எழுத்துருவாக்கம்:- s.நேசன்
சபை:- கல்வாரி தேவ அன்பின் சபை
இடம்:- மூங்கிலாறு உடையார்கட்டு