ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

ஆமானின் ஆவி


பரிசுத்த வேதாகமத்தில் ரூத், எஸ்தர் என இரண்டு பெண்களின் பெயரைத் தலைப்பாக கொண்ட நூலில், 

ரூத் புத்தகமானது ஒரு குடும்பத்தை மையாமாக கொண்ட கதை, அதில் ரூத் தனது வாழ்கையை முதன்மைப்படுத்தாது, விதவை மாமியாரின் மீது கொண்ட அன்பு, கரிசனையை மையமாக கொண்ட வாழ்க்கை வரலாறாக உள்ளது.

எஸ்தர் புத்தகமானது யூத இனத்தை மிகப்பெரும் அழிவிலிருந்து பாதுகாத்த துணிகரமான சரித்திரத்தை உள்ளடக்கியது. அகஸ்வோரு, மொர்தெகாய், எஸ்தர், ஆமான் என்ற நான்கு முக்கிய நபர்களை உள்ளடக்கிய வரலாற்று நூலாகும். இதில் ஆவிக்குரிய பிள்ளைகளாக மொர்தெகாயும் எஸ்தரும் இருப்பதோடு, மறுபக்கத்தில் மாம்சத்திற்குரிய பிள்ளைகளாக அகஸ்வோரும், ஆமானும் இருக்கிறார்கள். 

இது நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்குமான யுத்தமாகும். இது ஜீவனின் அதிபதியின் பிள்ளைக்கும் உலகத்தின் அதிபதியின் பிள்ளைக்குமான யுத்தமாகும். 

இந்த யுத்தத்தில் யார் ஜெயிக்கிறார்களேன்று பார்ப்போமா. 

யூத மக்களை காப்பற்றுவதற்காக மோசே சிறுவயதில் இருந்து அரண்மனையில் வளர்க்கப்பட்டவர். யூத மக்களைக் காப்பாற்ற எஸ்தர் வலிபவயதில் அரண்மைனைக்கு அனுப்பப்படுகிறார். தேவனின் வழிகளோ ஆச்சரியமானவை. 

மாம்சத்துக்குரிய மனிதன் சுயநலவாதியாய் இருப்பதோடு பூமிக்குரியனவற்றையே சிந்திப்பான். முதலாவது தனது நலனிலும், இரண்டாவதாக குடும்ப நலனில் அக்கறைப்படுவதோடு. தோவையேற்படும் போது மட்டும் பிறரைக்குறித்து அக்கறைப்படுவான். சுயநலவாதிகளாய் இருப்பவர்களிடமிருந்து அன்பு, இரக்கம், நீதி, தயவு போன்ற தெய்வீக குணத்தை காணமுடியாது. 

அவர்கள் தமது செழிப்பு, சுகபோகவாழ்க்கை, சிற்றின்பங்களிலேயே அதிக நாட்டம் கொண்டவர்களாயிருப்பார்கள். 

ஆவிக்குரிய மனிதன் முதலில் தேவனுக்குரியதையும் அடுத்து பிறருக்குரியதையும் கடைசியில் தனக்கானதை தேடுபவனாகவும், சிந்திப்பவனாகவும் இருப்பான். இவர்கள் அன்பு, இரக்கம், நீதி, தயவு போன்ற தெய்வீக சுபாவத்தைக் கொண்டவர்களாயிருப்பார்கள். அக்கிரமம் நிறைந்த இந்த பூமியில் எளியோரும், வறியோரும் பெருகியிருப்பதால், அந்த மக்களின் தேவைகளையும், குறைகளையும் நிவர்த்தி செய்யவே ஆசைப்படுவார்கள். பாடுகள் துயரங்களிலிருக்கும் மக்களை மீட்பதற்காகவே செயலாற்றுவார்கள்.

எஸ்தர் புத்தகத்தில் வரும் அகஸ்வோரு ராஜா இந்தியா முதல் எதியோப்பியா வரை நூற்றியிருபத்தேழு நாடுகளை ஆண்ட பேரரசன். இந்தியா என்றவுடன் இன்றிருக்கும் இந்தியா அல்ல, அன்று பாகிஸ்தான், பங்ளாதேஷ், பர்மா, இலங்கை பேன்ற நாடுகளை உள்ளடக்கிய பெரிய நிலப்பரப்பை குறிக்கும். ஆசியா ஐரோப்பிய ஆபிரிக்க கண்டத்தை உள்ளடக்கிய நாடுகளை ஆண்ட பேரரசராக அகஸ்வோரு இருந்தார். இந்த அகஸ்வோரின் காலத்தின் முன் தானியேல் புத்தகம் எழுதப்பட்டது. தானியேல் 6:1ல் தரியு ராஜா நூற்றிருபது தேசாதிபதிகளை ஏற்படுத்துவை வாசிக்கலாம். இந்த நாட்களின் பின்னர் ஏழு புதிய நாட்டை இவர்கள் கைப்பற்றியிருக்கிறார்கள்.

அவர் அரசாட்சியின் மூன்றவது வருஷம், தனது ராஜ்ஜியத்தின் மேன்மையையும் செழிப்பையும், உலகுக்கு வெளிப்படுத்தும் முகமாக ஆறுமாதங்களுக்கு தன்னுடைய ஆளுக்கைக்கு கீழுள்ள நாடுகளின் தலைவர்கள், செல்வந்தர், முக்கியஸ்தருக்கு விருந்துபசாரம் செய்தார். அன்றைய நாட்கள் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்தபடியால். ஒவ்வொருபகுதில் இருந்தும் வந்து போவதற்கு பல நாட்கள் பல வாரங்கள் பலமாதங்கள் எடுத்திருக்கும். 

தன்னுடைய ராஜ்ஜியத்தின் மேன்மையைக் காண்பித்த அகஸ்வோருக்கு தனது அழகான மனைவி வஸ்தியையும் காண்பிக்க ஆசைப்பட்டார்.

வஸ்தியை அழைத்து வரும்படி மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும் கட்டளையிட்டான். ஒருமுறை ஒரு பிரதானியிடம் கட்டளையிட்டு வஸ்தி வராத பட்சத்தில் மிகுதி ஆறுபேரிடமும் மறுபடி மறுபடி கட்டளையிட்டிருக்கலாம். ராஜாவின் அழைப்பை ஏற்று வஸ்தி ராஜாவின் அரண்மனைக்கு வரவில்லை. வராமைக்கான காரணத்தையும் எடுத்துச் சொல்லவில்லை. (வஸ்தியின் இந்த செயலே பின்னாளில் எஸ்தர் ராஜாத்தியாவதற்கு வாய்ப்பாக அமைந்தது).

வஸ்தியின் அவமதிப்பால் கோபமுற்ற அகஸ்வோரு தனது சமூகத்தில் இருந்த அறிஞர்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் சொன்ன பதில் ராஜாத்தியை தள்ளிவிட்டு இன்னொருத்தியை திருமணம் செய்யும்படியும், அத்தோடு வஸ்த்தியின் செயலை கேள்வியுறும் ஏனைய ராஜாத்திகளும் அவரவர் புருஷனை அற்பமாக எண்ணுவார்கள். ஆகவே எல்ல ஸ்திரீகளும் புருசன் சொல் கேட்க வேண்டும், அவர் கட்டளைப்படி நடக்க வேண்டும் என புதிய கட்டளையை பிறப்பித்தார்கள். 

ராஜாவின் புதிய மனைவிக்கான தெரிவிற்காக அநேக நாடுகளிலிருந்து அழகிய பெண்கள் அழைத்து வரப்பட்டார்கள். அவர்களில் எஸ்தர் எனும் யூதப் பெண்ணும் அடங்கும். தாய் தந்தையர் அற்ற எஸ்தரை அவளின் பெரிய தகப்பனாகிய மொர்தெகாய் வளர்த்து வந்தார். மொர்தெகாயும் எஸ்தரையும் யூத தேசத்திலிருந்து நேபுகாத்நேச்சரால் சிறைப்பிடித்து பாபிலோனுக்கு கொண்டுவரப்பட்டவர்களாவர்கள். எஸ்தரிடம் வளர்ப்புத் தந்தையான மொர்தெகாய் யூத இனத்தை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை யாருக்கும் சொல்லக்கூடாது என்று சொல்லியிருந்தார். மொர்தெகாய் சூசான் அரண்மனையை அண்டிய பிரதேசத்தில் அரச அதிகாரியாக பணிசெய்தார். எஸ்தருக்கு அதிகாரிகள் மத்தியில் தயவு கிடைத்தது, அவளின் சுத்திகரிப்பு காலம் முடிந்ததும், ராஜா அரசாண்ட ஏழாம் வருடம் ஏஸ்தர் ராஜாத்தியாக முடிசூடப்பட்டாள்.

இந்த நாட்களில் அகாஸ்வேரு ராஜா தனக்கு ஆமான் எனும் ஆகாகியனை சகல பிரபுக்களைவிட உயர் பிரதானியாக்கினார். இவரை எல்லோரும் வணங்கி நமஸ்கரிக்க வேண்டுமேன ராஜா கட்டளையிட்டிருந்தார். எல்லோரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்தார்கள், மொர்தெகாய் மாத்திரம் வணங்கவுமில்லை நமஸ்கரிக்கவுமில்லை. மொர்தெகாய் ஏன் வணங்கவில்லை நமஸ்கரிக்கவில்லை?

அதற்கு இவ்விரண்டு காரணங்களாயிருக்கலாம்.

1) நியாயப் பிரமாணத்தை கற்றிருந்த மொர்தெகாயுக்கு, யெகோவா தேவனை மட்டுமே வணங்க வேண்டும், ஏனைய வணக்கமானது பாவம் என்பதாகும்.

2) ஆமான் அமலேக்கிய இனத்தின் ஒருபிரிவான ஆகானியரைச் சார்ந்தவர்கள். இவர்கள் நேர்மையற்றவர்கள் என்பதாலுமாகும்.

ஆமானின் வழித்தோன்றலை ஆராய்வோமாகில். 1சாமுவேல் 15ம் அதிகாரத்தில் சவுலை ராஜாவாக்கிய சாமுவேல் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னார். ஆனால் சவுல் யுத்தம் செய்து அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான்; ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரம்பண்ணினான். சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போடமனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டான்.

இந்த செயலால் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். 

அன்று சவுல் ஆகாகை அழித்திருந்தால் ஏஸ்தர் புத்தகத்தில் ஆமான் எனும் பாத்திரம் வந்திருக்கவும் முடியாது, வேதத்தில் எஸ்தர் புத்தகம் வரவாய்ப்பிருந்திருக்காது. இன்னும் கொஞ்சம் விரிவாக பார்க்கலாம் ஏன் தேவன் அமலேக்கியரை முற்றாக அழிக்க சொன்னார் என்பதன் காரணத்தை ஆகமங்களில் காணலாம்.

அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள். (யாத்திராகமம் 17:8) எகிப்த்திலிருந்து கனான் நோக்கி வந்த இஸ்ரவேலர் சந்தித்த முதல் யுத்தமிது. இஸ்ரவேல் மக்களிடமிருக்கும் உடமைகளை கொள்ளையடிக்கும் நோக்கில் கர்த்தரின் பிள்ளைகள் மீது கைவைத்தார்கள். கர்த்தர் துணை நின்று அவர்களை காப்பாற்றினார். உபாகம புத்தகத்தில் இஸ்ரவேல் மக்களுக்கு நடந்த எல்லாச் சம்பவங்களையும் மோசே மீள நினைவூட்டும் பொழுது. உபாகமம் 25:17-19 ல் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அமலேக்கு தேவனுக்குப் பயப்படாமல் உனக்கு எதிராக வந்து, நீ இளைத்து விடாய்த்திருக்கையில், பின்வருகிற உன் பாளயத்திலுள்ள பலவீனரையெல்லாம் வெட்டினான் என்பதை நினைத்திரு.

உன் தேவனாகிய கர்த்தர் நீ சுதந்தரித்துக்கொள்ள உனக்குக் கொடுக்கும்தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய உன்னுடைய சத்துருக்களையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் விலக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும்போது, நீ அமலேக்கின் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்கு அழியப்பண்ணக்கடவாய்; இதை மறக்கவேண்டாம். தேவன் வாக்குப்பண்ணிய தேசத்துக்கு அழைத்துச் செல்லும் போது அப்பாவி மக்களை, பெலவீனரை, நிராயுதபாணிகளை கொலை செய்த குற்றத்திற்காகவும், எதிர்காலத்தில் யூத மக்களை அழிக்க முற்படுவார்கள் என்பதாலும். முழு இனத்தையும் அழிக்க கர்த்தர் சொன்னார். இந்த இனத்தின் வம்சா வழியினரை ஆதியாகமம் 36:12 ல் காணலாம். ஏசாவின் குமாரனாகிய எலீப்பாசுக்கும் திம்னாளுக்கும் பிறந்த குழந்தையே அமலேக்கு இனமாக உருவானது. 

இந்த வரலாறுகள் எல்லாம் ஆமானுக்கும் தெரியும், மொர்தெகாயுவுக்கும் தெரியும்.    

சவுலின் ராஜ்ஜியத்துக்கும் அகாஸ்வேரின் ராஜ்ஜியத்துக்குமிடைப்பட்ட காலம் கிட்டதட்ட 500 வருடங்களே. ஆகவே இந்த வரலாறு இலகுவாக வாய்வழியாக கடத்தப்பட்டிருக்கும். அது தவிர இருவரும் அறிவாளியாக இருக்கிறார்கள்.    à®ªà®°à®®à¯à®ªà®°à¯ˆà®ªà¯ பழியை மனசில் வைத்திருந்த ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்காததை சாட்டாக வைத்து முழு யூத இனத்தையும் அழிக்க திட்டமிடுகிறான். ஆமான் என்பதைக்காட்டில் ஆமனின் ஆவியில் கிரியை செய்த பிசாசே காரணம்.

ராஜா அகாஸ்வேரிடம் முறையிட சரியான சூழ்நிலைக்காக காத்திருந்து, ராஜா ஆண்ட 12ம் வருஷம் நிசான் மாதம் நன்கு திட்டமிட்டு யூத இனத்தை அழிக்க அனுமதி கேட்கிறான். இதற்கு சம்மதித்தால் பதினாயிரம் வெள்ளியை லஞ்சமாக தருவதாக கூறுகின்றான். ராஜா வெள்ளியை நீயே வைத்துக்கொள் உன் இஷ்ரப்படி செய்யலாம் என்றான். 

ராஜா அரசாண்ட 7ம் வருடம் எஸ்தரை திருமணம் செய்கிறார். அதே காலப்பகுதியில் ஆமான் அதிகாரத்திற்கு வருகிறான், கிட்டத்தட்ட 4 வருடங்களின் பின்னரே (12ம் வருடம்) ராஜாவிடம் அனுமதி கேட்கிறான். பொறுமையாக முழு யூத இனத்தையும் அழிப்பதற்கு நிதானமாக திட்டமிட்டு செயலாற்றினான். 127 நாட்டுக்கும் நாள் மாதம் குறிப்பிடப்பட்டு யூத மக்கள் யாவரும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை கொலை செய்து அவர்கள் உடமைகளை கொள்ளையிட கட்டளை பிறப்பித்தான் ஆமான்.

இதையறிந்த மொர்தெகாய் வஸ்த்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல் போட்டு துயரத்தோடு மகா சத்தமாய் அலறினார். இதைக் கேள்விப்பட்ட எஸ்தர் மொர்தெகாயுக்கு மாற்று வஸ்த்திரங்களைக் கொடுத்தனுப்பினாள். அவனோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மறுபடியும் எஸ்தர் வேறு ஒருவரை அனுப்பி எதற்காக இவ்வாறு நடந்து கொள்ளுகிறார் என்பதை வினாவி வரும்படி அனுப்பினார். அந்நபரிடம் பதிலாக யூதருக்கு நேர்ந்த ஆபத்தை எடுத்துக் கூறி, இதிலிருந்து விடுபடுவதற்காக ராஜாவிடம் போய் மன்றாடி விண்ணப்பம் பண்ணும்படி சொல்லியனுப்புகிறார். 

அதற்கு எஸ்தர் ராஜா கூப்பிட்டால் மட்டுமே அவரை பார்க்க முடியும், அழையாமல் போகும் பொழுது ராஜா பொற்செங்கோலை நீட்டினால் மட்டும் பார்க்கலாம், அவ்வாறு செய்யாதவிடத்து மரிக்க வேண்டிவரும் என்ற செய்தியை சொல்லியனுப்புகிறாள். இதைக் கேட்ட மொர்தெகாய் நீ ராஜாவின் அரண்மனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே. நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான். 

அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது: நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.

இங்கே மொர்தெகாயின் தெய்வீக குணத்தை அவதானிக்ககூடியமாதிரி இருக்கிறது. 

மொர்தெகாய் திருமணமாகாத வயோதிப வயதை ஒத்த மனிதன். இனிவாழ்ந்தால் என்ன மரிந்தால் என்ன என்ற சூழ்நிலை, காலத்தை அண்மித்தவர். தன்னினம் ஓர் ஆபத்தை எதிர் நோக்கப் போகிறது என்றதும், அவர் இதயபூர்வமாய் கலங்கி அழுதார், அந்த இக்கட்டிலிருந்து மீளவேண்டிய வழிகளை பாரத்தோடு சிந்தித்தார். எஸ்தரின் மாற்று வஸ்திரத்தை கூட வாங்க மறுத்து, தனது தேவை முக்கியமல்ல பிறரின் நலனில் கரிசனைப் படுவதே முக்கியம் என்பதை வெளிப்படுத்தினார். எஸ்தர் தனக்கிருக்கும் ஆபத்தை சொன்ன வேளையில், யூதருக்கு உதவியும் விடுதலையும் வேறு ஓரிடத்திலிருந்து வரும் ஆனால் தடுக்க வேண்டிய வாய்ப்பில், பொறுப்பில் இருக்க கூடிய நீ காரியம் செய்யாவிட்டால் அழிய வேண்டிவரும் என்றும் எச்சரித்தார். 

தேவன் நிச்சயம் காப்பாற்றுவார் என்ற விசுவாசம் மொர்தெகாயுக்கிருந்த போதும், வேறு ஒருவனை தேவன் பயன்படுத்தட்டும் என்று பொறுப்பற்ற விதத்தில் நடக்கவில்லை. பிரச்சனைகளின் தீர்வுக்கு வேறு ஒருதனைத் தேடுவதை விட கர்த்தரின் உதவியோடு அந்த பிரச்சனையை தீர்க்க நாமொருவரும் உற்சாகமாக செயலாற்ற வேண்டும்.  à®¨à®®à¯à®®à¯ˆ உயர்த்தி உயர்பதவில் வைத்திருப்பது தேவனின் நாம மகிமைக்காக செயலாற்றவே.

தேசமெங்கும் யூத மக்கள் ஜெபித்தார்கள். எஸ்தரின் உதவியாளர்களும் மொர்தெகாயின் நண்பர்களும் சூசனில் இருந்த யூதர்களும் எஸ்தருக்காக ஜெபித்தார்கள். மூன்றுநாளைக்கு பின் ராஜாவைப் பார்க்க எஸ்தர் அரண்மனைக்குள் போன பொழுது ராஜா செங்கோலை நீட்டி எஸ்தர் ராஜாத்தியே உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டார். அதற்கு எஸ்தர் தானளிக்கும் விருந்துக்கு ராஜாவும் ஆமானும் வரவேண்டும் எனக்கேட்டாள். அதற்கு ராஜா சம்மதித்தார். இவற்றையெல்லம் பார்த்த ஆமான். ராஜாத்தியும் தன்னை கௌரவப்படுத்துவதாக உணர்ந்து மகிழ்ச்சியடைந்தான். அன்றைய தினம் ஆமான் மொர்தெகாயை சந்திக்க நேர்ந்தது, அப்பொழுது அவன் ஆமானை அசட்டை பண்ணினான். உக்கிர கோபமடைந்த ஆமான் இவைகுறித்து தனது மனைவி நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டான். அப்பொழுது அவன் மனைவியும் நண்பர்களும் மொர்தெகாயை கொலை செய்வதற்கு ஐம்பதுமுழ உயரமான தூக்குமரம் செய்யப்பட வேண்டும் என ஆலோசனை சொன்னதோடு, நாளை தூக்கிலிடுவதற்கான அனுமதியையும் ராஜாவிடம் பெற்று வரும்படி கேட்டுக்கொண்டார்கள். 

ஆமானைச் சுற்றியிருந்தவர்களில் நிதானமாக சிந்தித்து நேர்மையான அறத்தின் வழியில் ஆலோசனை புத்திமதி சொல்லக்கூடிய எவரும் இருந்ததில்லை.  à®µà¯†à®±à¯à®ªà¯à®ªà¯ˆ பகையுணர்வை அதிகரிக்கும்படியே அவர்களின் ஆலோசனையிருந்தது.

ஒரு பக்கம் மொர்தெகாயை அழிப்பதற்கு சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருக்க, மறுபக்கம் ஆண்டவர் மொர்தெகாயை கனப்படுத்த திட்டமிட்டார்.

அதே இரவு அகஸ்வோரு ராஜாவுக்கு நித்திரை வராமையால் நாட்டின் தினசரி குறிப்பேட்டை எடுத்து வந்து வாசிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவர்கள் வாசித்த பகுதியில் ராஜாவை இருவர் கொலை செய்ய திட்டமிட்டதை அறிந்த மொர்தெகாய் அதை ராஜாவுக்கு தெரியப்படுத்தி ஆபத்திலிருந்து பாதுகாத்த சம்பவத்தை வாசித்தார்கள். இதைக் கேட்டவுடன் அகஸ்வோரு தன்னை காப்பாற்றிய மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ஊழியக்காரர் அவனுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று கூறினார்கள். 

இப்பகுதியை தியானிக்கும் பொழுது சர்வவல்லமையுள்ள தேவனின் ஆச்சரியமான வழிகள் புலப்படுகிறது. ராஜாவுக்கு தூக்கம் வராமல் பண்ணிய தேவன், தினசரி குறிப்பேட்டில் எத்தனையோ கரியங்கள் இருந்த போதும் மொர்தெகாய் சம்பந்தப்பட்ட பகுதியை வாசிக்க வைத்தமையும் கர்த்தரின் கிரியையே.

மறுநாள் காலையில் ஆமான் மொர்தெகாய்யை தூக்கிலிடுவதற்கான அனுமதியைப் பெறுவதற்கு அரண்மைக்கு வந்தான். ராஜா அவனை அழைத்து ராஜா கனம் பண்ண நினைக்கிறவனுக்கு என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டார். தன்னையன்றி ராஜா யாரைக் கனம் பண்ணப் போகிறார் என்ற தற்பெருமையில், ராஜா உடுத்திக்கொள்ளுகிற ராஜவஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும். அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்; ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின், அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான். 

அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரமனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்பிரகாரம் செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான். ஆமான் எதிரியாக கருதியவனுக்கே, தானே கனம் பண்ணி அழகுபார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டான். ராஜாவிடமிருந்து பிரதியுபகாரம் எதிர்பார்க்காமல் கடமையைச் செய்த மொர்தெகாயை கர்த்தர் கனப்படுத்தினார். கடமையில் கருத்தாயிருப்பதும், எதிர்பார்ப்பு உள்நோக்கமில்லாமல் உதவி செய்வதிலும் கர்த்தர் பிரியமாய் இருக்கிறார். மொர்தெகாய் துக்குமரத்தில் தொங்கி மாண்டுபோவான் என்று எண்ணியிருந்த ஆமானுக்கு, ராஜா வஸ்திரம் தரித்து கம்பீரமாக வீதி வலம் வந்ததை பார்த்து சகிக்கமுடியாது முக்காடிட்டு வீடுசென்று தனது எரிச்சலை, மனவேதனையை நண்பர் மனைவியாரோடு பகிர்ந்து கொண்டான். 

சூழ்நிலை மாறுவதைப் புரிந்து கொண்ட அவர்கள் இனி மொர்தெகாய் முன் தாழ்ந்து போகவேண்டியது தான் என்று சொன்னார்கள். அவர்களுடைய எதிர்பார்பெல்லாம் மொர்தெகாயை அழிப்பதாக இருந்தது. அது நிறைவேறாமல் போனதின் நிமிர்த்தம் விரக்தியின் வெளிப்பாட்டில் அவ்வாறு சொன்னார்கள். ஆனால் அதுவே நிஜமானது.

எஸ்தரின் முதல் நாள் விருந்து கடந்தது, இரண்டாம் நாள் விருந்தின் போது ராஜா எஸ்தர் ராணியைப் பார்த்து உன் வேண்டுதல் தான் என்ன? நீ ராஜ்ஜியத்தின் பாதியைக் கேட்டாலும் தருவேன் என்றான். இதுவே சரியான சந்தர்ப்பம் என எண்ணிய எஸ்தர் ராஜ்ஜியம் எல்லாம் தேவையில்லை என்னுயிரும் என் இன மக்களின் உயிரும் காக்கும்படி வேண்டுவதோடு, எங்களை அழித்து கொன்று நிர்மூலமாக்கும்படி விற்க்கப்பட்டோம். இது கூட பறுவாயில்லை இப்பொழுது அகஸ்வோரு ராஜாவுக்கும் நஷ்டம் உண்டாக அந்த சத்துரு திட்டமிட்டுள்ளான் எனச் சொன்னாள். அதற்கு ராஜா இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? என்றான்.

அதற்கு எஸ்தர்: சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான். ராஜா உக்கிர கோபத்தோடு என்ன செய்வது என்றறியாது பந்தியை விட்டெழுந்து தேட்டத்துக்கு சென்றார். ஆமான் எஸ்தரிடம் தன்னை காப்பாற்றும்படி கேட்க எழுந்தான் ஆனால் கேட்கவில்லை வேதத்தில் அவ்வாறு சொல்லப்படவில்லை. ராஜா திரும்பி விருந்து நடந்த இடத்துக்கு வந்த வேளை ஆமான் எஸ்தர் அமர்ந்திருந்த இருக்கையின் மேல் விழுந்து கிடப்பதை கண்டவன் கோபம் கொண்டு என் கண் முன்னே எஸ்தரை பலவந்தம் பண்ணப் பார்த்தாயோ என சொன்னான். காவலர்கள் அவனை கைது செய்தார்கள். அப்பொழுது அற்போனா எனும் பிரதானி ஆமானின் வீட்டில் செய்யப்பட்டிருந்த ஐம்பது முழ உயரமான தூக்கு மேடையைக் குறித்து சொன்னான். அந்த தூக்குமரத்திலே ஆமானை தூக்கிப் போடும்படி கட்டளையிட்டான். 

எந்த தீங்கும் செய்யாத மொர்தெகாயை தூக்கிலிட சதித்திட்டம் தீட்டிய ஆமான் கடைசியில் அவனே அந்த சதிக்கு இரையானான். 

அதுமட்டுமல்ல அவன் பிள்ளைகள் குடும்பமும் அழிக்கப்பட்டது.

ஆமானின் மறைவுக்கு பின் எஸ்தர் மௌனமாக இருக்கவில்லை. யூதரை அழிப்பதற்காக அனுப்பிய கட்டளையை ராஜாவுக்கு நினைவுபடுத்தி அதற்கு மாற்றீடாக பிறிதொரு கட்டளையை 127 நாடுகளுக்கும் வேகமாக அனுப்பி வைத்தார்கள். அந்த கட்டளையில் பட்டணத்திலிருக்கிற யூதர் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமான எல்லாரையும், அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதருக்குக் கட்டளையிட்டார் என்று எழுதியிருந்தது. 

அந்த நாள் வந்த போது சூசான் அரண்மனை தொடங்கி 127 நாட்டிலும் யூதருக்கும் அவர்கள் பகைவருக்கும் யுத்தம் நடந்து முடிந்தது. யுத்ததில் பகைவர் எல்லாம் அழிந்து போனார்கள். யூதர்கள் உடமைகளை கொள்ளையடிக்கவில்லை. அவர்கள் சத்துருக்களை மட்டும் அழித்தார்கள். மிகப்பெரிய அழிவிலிருந்து யூதமக்கள் காப்பாற்றப்பட்டார்கள். 

பிரியமானவர்களே!

சவுல் அன்று அமலேக்கியரை முற்றாக அழித்திருந்தால், ஆமான் பிறந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. பொருளாசை எனும் இச்சைக்கு சவுல் கட்டப்பட்டிருந்ததால் அந்த தவறை செய்தான். அந்த தவறானது யூதர்களை மிகப்பெரிய அழிவுக்கு இட்டுச் சென்றது. கர்த்தர் நமக்குள் இருக்கும் சின்ன சின்ன பாவங்களை அழிக்கச் சொல்லும் பொழுது நாங்கள் உடனடியாக அழித்துப் போடவேண்டும். விட்டுவைத்தோமாயின் காலப்போக்கில் பேரிழப்பை கொண்டுவந்துவிடும். படகில் சிறு துவாரம் தானே இருக்கிறது என்று அசால்டாக இருப்போமாயின். சில மணி துளிகளில் முழு படகும் கடலில் மூழ்க வாய்ப்பாகிவிடும்.

ஆமானுக்குள் இருந்த பெருமை, கோபம், பகை, கொலையுணர்வு போன்ற குணாதிசயங்கள் எங்களை ஆளுகை செய்யாது பார்த்துக்கொள்ளுவோம். இப்படிப்பட்ட துர்க்குணங்களை மேற்கொள்ள கர்த்தரிடம் உதவி கேட்போமாக.

எஸ்தர் ராணி அழகுள்ளவள், ராஜாத்தி எனும் அந்தஸ்த்தில் இருந்தவள். இறுதிவரை தனது பழையவாழ்க்கையை, வளர்ப்பு தந்தையை, தனது இனத்தை மறக்காது வாழ்ந்து கட்டியவள். உலகப் பிரகாரமாக எவ்வளவு உயரத்துக்கு போனாலும் அதில் ஒரு மேன்மையுமில்லை. எஸ்தர் தனது ராஜாத்தி என்ற அந்தஸ்தை நேசிக்கவில்லை. உயிர் போனாலும் பறுவாயில்லை யூத மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என செயலாற்றினாள். தேவனைச் சார்ந்து ஜெபித்து உபவாசித்து பெரியோர் வார்த்தைக்கு கட்டுப்பட்டு வழ்ந்தாள். 

மொர்தெகாய் அநாதையாயிருந்த ஒரு பிள்ளையை வளர்த்தார். அந்த பிள்ளையைக் கொண்டு பல லட்சம் தேவப்பிள்ளையை காத்துக் கொண்டார். அகஸ்வோரு ராஜாவுக்கு உண்மையாக சேவகம் செய்தது மட்டுமல்ல. யூத ராஜ சிங்கமாகிய இயேசுக்கிறிஸ்துவுக்கும் உண்மையாக வாழ்ந்து காட்டினார். உன்னைப் போல் பிறரை நேசி என்ற பிரமாணத்துக்கு கட்டுப்பட்டவராய். எல்லா மக்களையும் தனக்கு நிகராக நேசித்ததலேயே முழுமனதோடு மக்களைக் காக்க அக்கறையெடுத்தார். கர்த்தர் அவர் கூட இருந்தபடியால் இறுதியில் வெற்றியும் கண்டார்.  

ஆமானைப் போல் வாழாது. மொர்தெகாய் எஸ்தர் போல் பிறர் வாழ்வில் அக்கறை கொள்வோம். பாடுகள் நெருக்கடியில் இருக்கும் மக்களின் மீட்புக்காக உபவாசித்து ஜெபித்து உதவிகள் செய்வோமாக.

தேவப்பிள்ளையே ஒருத்தருக்கும் தீங்கு செய்ய நினையாதே. தீங்குக்கு கூட தீங்கு செய்யாதே. 

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். மத்தேயு 5:44

நன்றி கர்த்தாவே

த.பிரபா.

 

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved