ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

பந்தி விசாரிப்புகாரனாகிய பிலிப்பு.


இப்பூமியில் உள்ள ஒவ்வொரு மானிடனின் மனமும், வளமான வாழ்வு, உயர்வான நிலை, மேன்மையான அந்தஸ்து போன்றனவற்றையே நாடி அதை நோக்கியே நகரும். தாழ்ந்து போகவோ, இழப்புக்கள் பாடுகளைச் சந்திக்கவோ, ஏழ்மையான வாழ்க்கைக்குள் பயணிக்கவோ யாரும் விரும்புவதில்லை. பள்ளியில் படிக்கும் மாணவன் தான் வகுப்பில் எல்லாக் காரியங்களிலும் முதன்மையான இடத்தை வகிக்கவே ஆசைப்படுவான். வேலைத்தளத்தில் பணியாற்றும் ஒருவர் தனது பணியுயர்வு சம்பள உயர்வைக் குறித்தே சிந்திப்பார். ஒரு அரசியில் கட்சியில் தொண்டனாக அல்லது அங்கத்தினராக இருக்கும் ஒருவர் படிப்படியாய் வளர்ந்து தலைமை பொறுப்பை பிடிக்கவே ஆசைப்படுவான். புதிதாக திருமணம் செய்த ஒரு குடும்பமானது ஏனைய குடும்பத்தினரைக் காட்டில் செழிப்பாக வாழ்ந்து காட்ட திட்டமிடுவார்கள். 

வளமான வாழ்க்கை வாழுவதென்பது பேராசையாக அமைந்துவிடக்கூடாது. தேவைக்கு ஏற்றால் போல் வாழுவதே சிறந்தது. ஒருவர் தனது திறமையை ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு உயர்வை எதிர்பார்ப்பதொன்றும் தவறில்லை. ஆனால் அதுவே விக்கிரகமாக மாறிவிடக்கூடாது. யதார்த்தமானது, சராசரி ஒவ்வொருதருடைய மனித மனமும் அவர் அவர் சக்திக்கு வல்லமைக்கு ஏற்ப உயர்வை மேன்மையான அந்தஸ்தை செழிப்பை நோக்கியே நகருவதாகவுள்ளது.

மேற்குறிப்பிட்ட மனநிலையோட்டத்தோடு வாழ்பவர்களை வேதத்தில் மாம்சீகமாக வாழ்பவர்கள், உலக சினேகிதம் கொண்டவர்கள், இப் பிரபஞ்சத்துக்குரியவர்கள் என சுட்டிக்காட்டுகிறதது. 

இயேசுக்கிறிஸ்துவின் பிள்ளையாக மறுபடியும் பிறந்த ஆவிக்குரிய பிள்ளைகள்,

பூமிக்குரியதை சிந்திக்காது பரத்துக்குரியதையே சிந்தித்து செயல்படுவார்கள். இப்பூமிக்குரிய காரியங்களை வெறுத்து பரத்துக்குரியனவற்றை நேசிப்பார்கள். பூமிக்குரிய ஆசை இச்சைகள் இழுத்துக்கொண்டாலும், அவர்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு அவற்றை மேற்கொண்டு, பரலோக தேவனின் ஆசை, விருப்பை நிறைவேற்றுவார்கள். பூமிக்குரியன அநித்தியமானவை அழிந்து போவன. பரலோக வாழ்வோ நித்தியமானது என்ற தெளிவோடு இப்பூமியில் வாழ்வார்கள். இயேசுக்கிறிஸ்துவானவர் தனது உயிரை விலைக்கிரயம் செலுத்தியே ஒவ்வொருவரையும் மீட்டுக்கொண்டார். அவர் வழிவந்தவர்கள் அவருடைய தியாகம், அர்ப்பணிப்பு, பாடுகளை மறக்காது அவருடைய பாதச் சுவட்டை பின்பற்றுபவர்களாயிருப்பார்கள். அவ்வாறு வாழ்ந்த பந்திவிசாரணைக்காரனாகிய பிலிப்புவைக் குறித்தே சுருக்கமாக தியானிக்கப் போகிறோம்.

ஆதி சபையின் ஆரம்பநாட்களில் சீஷர்கள் பெருகிய போது கிரேக்க விதவைகள் தங்களை சரியாக விசாரிக்கவில்லை என முறுமுறுத்ததை அப்போஸ்தலர் 6:1ல் வாசிக்கிறோம். இதற்கு தீர்வாக பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள் என சீஷர்களிடம் அப்போஸ்தலர்கள் கேட்டுக்கொண்டார்கள். சீஷர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஏற்பட்ட குழப்பத்தை புரிந்து கொண்ட அப்போஸ்தலர்கள் அதற்கு தீர்வாக ஏழு பேரை தெரிவு செய்ய அனுமதியும் உரிமையும் குடுத்தார்கள். சபைகளுக்குள் குழப்பங்கள் பிரச்சனைகள் வருவது இயல்பு. அவற்றை அன்போடு எதிர்கொண்டு தேவனுக்கு பிரியமான வழியில் தீர்வு காண்பதே முக்கியமானது. சீஷர்கள் ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டார்கள். இங்கே குறிப்பிடப்பட்ட பெயர்கள் அனைத்தும் எபிரெயப் பெயர்கள் அல்ல கிரேக்க மற்றும் பிற நாட்டைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் உள்ளடங்கியுள்ளது. பல நாட்டு விதவைகள் விசுவாசிகளாக இருந்திருப்பார்கள் என நம்பப்படுகிறது. அத்தோடு அந்தியோகியா என்ற பட்டணத்தின் பெயரும் முதல் தடவையாக இந்த இடத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. பந்திவிசாரிப்பு என்றதும் சாதாரண பணியல்ல வேலைக்கு போகாதிருந்த அனேக விதவைகளினதும் அவர்களது பிள்ளைகளினதும் தேவைகளைப் பூர்த்தி செய்து அவர்களை திருப்திப்படுத்த வேண்டியதாய் இருந்தது. கிறிஸ்துவின் அன்பை செயலில் காண்பிப்பதற்கும், சபை ஐக்கியத்துக்கும், வளர்ச்சிக்கும் பந்திவிசாரிப்பானது அவசியமானதொன்றாக காணப்பட்டது.

அவர்கள் பணியை தொடங்க முன் அப்போஸ்தலருக்கு முன்பாக நிறுத்தி அவர்களுக்கு ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து பிரதிஷ்டை பண்ணினார்கள். 

இவர்களுள் ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்.

எருசலேமில் ஆசாரியர் முதல் சாதாரண ஜனங்களும் இயேசுக்கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு போனதால். அதை தடை செய்வதற்காக கிறிஸ்தவ விரோதிகளான மதத்தலைவர்கள் வல்லமையாக பயன்படுத்தப்பட்ட ஸ்தேவான் மீது பொய் குற்றம் சாட்டி கல்லெறிந்து கொலை செய்தார்கள். ஸ்தேவானோ அவர்களிடம் மண்டியிடாமல் ஆபிரகாம் முதல் இயேசுக்கிறிஸ்துவரை நடந்த சம்பவங்களை நினைவுபடுத்தி, உங்கள் பிதாக்கள் தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தார்கள். இப்பொழுது நீங்கள் இயேசுக்கிறிஸ்துவை கொலை செய்த பாதகராயிருக்கிறீர்கள் என தவறைச் சுட்டிக்காட்டி பேசினார். ஸ்தேவானை பொய்க் குற்றம் சாட்டி கொலை செய்ய முயற்சி செய்தவர்களிடமிருந்து இரக்கத்துக்காக கெஞ்சாது அவர்களோடு சமரசம் செய்து கொள்ளாது, தேவனிடமிருந்து தான் தப்பிப்பதற்கான வழியை கேட்காது, முழங்கால்படியிட்டு ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொல்லி ஸ்தாவன் ஆவியை விட்டார். சத்துருக்களை சினேகித்து இயேசுவின் வழியில் மரித்த சபையின் முதல் இரத்த சாட்சி ஸ்தேவானாகும்.

சமாரியாவுக்கு சென்ற பிலிப்பி

ஸ்தேவானின் மரணத்துக்கு பின் எருசலேமில் இருந்த சபைக்கும் விசுவாசிகளுக்கும் அதிக துன்பம் ஏற்பட்டது. இந்த நெருக்கடியான சூழலில் இருந்து தப்புவதற்காகவும் குடும்பங்களை காப்பாற்றுவதற்காகவும் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள்.

அவ்வாறு பல தேசங்களுக்கு சிதறிப்போன மக்களோடு பிலிப்புவும் சமாரிய எல்லையை நோக்கி சென்றார். இயேசுக்கிறிஸ்துவின் உயிர்தெழுதலின் பின் புறஜாதியரிடம் சென்ற முதல் சுவிஷேசகன் பிலிப்பு ஆவார்.

ஜீவனைக் காப்பற்றிக் கொள்ளும் நோக்கில் பிலிப்பு பயணித்திருக்க மாட்டார்.

1. இடம்பெயர்ந்த மக்களை தேவனுக்குள் வழிநடத்தும் நோக்கில் சென்றிருப்பார்.

2. ஸ்தேவானின் அர்ப்பணிப்பை பார்த்து இயேசுக்கிறிஸ்துவே எழுந்து நின்று கனப்படுத்தியதை பிலிப்பு அறிந்திருந்தார். ஆகவே மரண அச்சம் இருந்திருக்காது.

3. புற ஜாதியாருக்கு சுவிஷேசம் போய்ச் சேர வேண்டும் என்ற திட்டத்தை தேவன் இவ்வாறே நிறைவேற்றினார். 

(அப்போஸ்தலர் 1:8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.)

சமாரியாவில் இருந்த பிலிப்பு அந்த மக்களுக்கு இயேசுக்கிறிஸ்துவின் பிறப்பு இறப்பு உயித்தெழுதலைச் சொல்லி, மனந்திரும்பி பாவமன்னிப்பை பெற்று இரட்சிப்பு அடைவதைக்குறித்து பிரசங்கித்தார். அம்மக்களுக்குள் இருக்கும் அசுத்த ஆவிகளைத்துரத்தி பிணியாளிகளை குணப்படுத்தி விடுதலையழித்து அற்புதங்கள் பல செய்தார். சமாரியர் பெருந்திரளாக மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள். 

சமாரியர்கள் அற்புத அடையாளங்களை மட்டும் கண்டு இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை. இதுவரை யூதர்கள் சமாரியர்களை புறக்கணித்து தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைத்திருந்தார்கள். ஆனால் பிலிப்பே எந்த வேற்றுமையும் காட்டாமல் சமாரியர் மீது அன்பு செலுத்தி அவர்கள் மீது அக்கறைப்பட்டமையாலும், அவரையும் அவர் சொன்ன இயேசுவையும் ஏற்றுக்கொண்டார்கள். அதுதவிர சமாரியருக்கு இயேசு ஒன்றும் புதிதல்ல ஏற்கனவே இயேசு பூமியில் இருந்த பொழுது சமாரியா வழியாக பலதடவை பயணித்துள்ளார். சமாரிய ஸ்திரியை (யோவான் 4ம் அதிகாரம்) சந்தித்து உரையாடியுள்ளார், அந்த சம்பவத்தையும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். 

இயேசுக்கிறிஸ்து யூதா தேசத்தில் செய்த அற்புத அடையாளங்கள் பிரசங்கங்கள் குறித்தும் சமாரியர் அறிந்து வைத்திருந்தார்கள். சமாரியாவில் இருந்த மாயவித்தைக் காரணாகிய சீமோனும் இயேசுவை ஏற்றுக் கொண்டான். இவர்கள் எல்லோருக்கும் பிலிப்பு முழுக்கு ஞானஸ்தானம் கொடுத்தார். 

சமாரியாவில் ஏற்பட்ட எழுப்புதை எருசலேமில் இருந்த அப்போஸ்தலர் அறிந்து பேதுருவையும் யோவானையும் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் வந்ததன் முக்கிய நோக்கம் மனந்திரும்பியவர்களை இன்னும் ஆழமாக சத்தியத்துக்குள் வழிநடத்தி கர்த்தருக்குள் நிலையாக நிறுத்துவதே நோக்கமாக இருந்தது. அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்கள் மீது கைகளை வைத்து ஜெபித்தார்கள். குழந்தையை போல் இருக்கும் இரட்சிப்பின் ஆரம்ப நிலையானது படிப்படியாக வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கும், உலகத்தை எதிர்த்து ஜீவிப்பதற்கும் ஆவியானவரின் உதவி தேவை. தொடர்ந்தும் சமாரியாவின் பல கிராமத்து மக்கள் இயேசுக்கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்கள்.

எதியோப்பிய மந்திரியை கர்த்தருக்குள் வழிநடத்திய பிலிப்பு.

பிலிப்பு சமாரியாவின் எழுப்புதலின் மகிழ்ச்சியில் இருந்த பொழுது. கர்த்தருடைய தூதன் நீ எழுந்து, தெற்கு முகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ என்றான். பிலிப்புவுக்கு இது அதைவிட மகிழ்ச்சியாய் இருந்தது. திரள்கூட்ட மக்களோடு வாழ்வது பெரிதல்ல ஒரு தேவப்பிள்ளைக்கு. பிலிப்புவோடு தேவன் அனுதினமும் பேசுகிறதையே (தேவன் வழிநடத்துகிறதையே) பெரிதான காரியமாக கருதியிருப்பார், அடுத்து பிலிப்புவை நம்பி ஒரு பணியை பொறுப்பை கர்த்தர் கொடுக்கிறார் என்பதையிட்டும் சந்தோசப்பட்டிருப்பார். மக்களோடு இருந்த பிலிப்பு இப்பொழுது பாலைவனமான வனாந்தரத்திற்கு பயணப்பட்டார்.

வனாந்திரவழியில் எதியோப்பிய ராணியின் நிதிமந்திரி இரதத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். நிதிமந்திரி எருசலேம் தேவாலயம் சென்றுவிட்டு, அங்குவிற்ற தேற்சுருள் ஒன்றை வாங்கி வாசித்துக் கொண்டுவந்தார். அவர் கையில் வைத்திருந்த தோற்சுருளானது ஏசாயா தீர்க்கதரிசியினது புத்தகமாகும். அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான்.

அதற்கு அவன்: ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி; பிலிப்பு ஏறி, தன்னோடே உட்காரும்படி அவனை வேண்டிக்கொண்டான். அவன் வாசித்த பகுதியை பிலிப்பு விளக்கி இயேசுக்கிறிஸ்துவைக்குறித்து பிரசங்கித்தான். பிலிப்புவின் நற்செய்தியினால் மனந்திரும்பிய மந்திரி, தனக்கு ஞானஸ்தானம் கொடுக்கும்படி கேட்கிறார். புத்திசாலியாயிருந்த மந்திரியின் கேள்விகள் சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுக்குமளவுக்கு பிலிப்பு ஞானவானாய் இருந்தார். முழு இருதயத்தோடு விசுவாசித்தால் ஞானஸ்தானம் பெறலாம் என பிலிப்பு செல்ல அதை மந்திரி உறுதிப்படுத்தினார். பிலிப்புவும் மந்திரியும் தாண்ணீரில் இறங்கினார்கள். பிலிப்பு அவனுக்கு முழுக்கு ஞானஸ்தானம் கொடுத்தார். அதன் பின் ஆவியானவர் பிலிப்பை பிரித்துச் சென்றார். பின்பு மந்திரி பிலிப்பைக் காணவில்லை. எதியோப்பியருக்கும் இஸ்ரவேலருக்குமிடையில் பல யுத்தங்கள் நடந்ததை வேதத்தில் பார்க்கிறோம். மோசே எதியோப்பிய பெண்ணை திருமணம் செய்ததையும் வாசிக்கிறோம். இஸ்ரவேலின் தேவன் ஜீவனுள்ள தேவன் என்பதை ஏதியோப்பியர் அறிந்து வைத்திருந்தார்கள். ஒரு மனிதனின் தேடலையும் அவனின் இருதயத்தின் வாஞ்சையும் கர்த்தர் பார்க்கிறார். எதியோப்பிய மந்திரி கர்த்தரைத் தேடினான் எருசலேம் தேவாலயம் வரை சென்றான் அவரை அறிய ஆசைப்பட்டான் முடிவில் அவன் வாஞ்சை தாகம் தீர்க்கப்பட்டது. 

நித்திய ஜீவனைப் பெற்று பரலோக வாழ்வை சுதந்தரித்தவனானான்.

பிலிப்பு ஆசோத்திலிருந்து செசரியாவரை சென்றார்.

பிலிப்பு ஆசோத்திலிருந்து பிரயாணம் பண்ணி செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தார். ஆசோத்துக்கும் செசரியாவுக்குமிடையிலான தூரம் 93 km ஆகும். இவ்வளவு தூரம் கால்நடையாக சுவுசேஷத்தைச் சொல்லி செசரியா சென்றடைந்திருப்பார் பிலிப்பு. செசரியா ஒரு கடற்கரை கிராமமாகும், இங்கு ரோமர்களுக்கு ஒரு துறைமுகமுமுண்டு. கிரேக்க மொழி பேசக்கூடிய பிலிப்பு இங்கு தங்கியிருந்து கர்த்தருக்காக பணிசெய்தார். இச்சம்பவங்கள் நடந்து இருபது ஆண்டுகளின் பின் பவுல் பிலிப்புவின் வீட்டுக்கு சென்று தங்கியதை அப்போஸ்தலர் 21:8-10 ல் படிக்கலாம். பிலிப்புவுக்கு நான்கு பெண் பிள்ளைகள் இருந்ததாகவும், அவர்கள் தீர்க்கதரிசனம் செல்லுபவர்களாக இருந்தார்கள் என்பதையும் வாசிக்கக்கூடியதாயுள்ளது. இதற்கு பின் வேதத்தில் பிலிப்புவைக்குறித்த தகவல்கள் இல்லை.

பிரியமானவர்களே!

பிலிப்புவின் வாழ்வில் எருசலேமில் பந்திவிசாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதும் சரி, சமாரியாவில் பல கிராமத்து மக்களை, மற்றும் எதியோப்பிய மந்திரியை இரட்சிப்புக்குள் வழிநடத்திய போதும் சரி, தேவன் பணித்த வேலையை மட்டும் செய்தார். சுய ஆதாயம் தேடவில்லை வளமான வாழ்வையோ, உயர்ந்த நிலையையோ, மனித கனத்தையோ, மேன்மையான அந்தஸ்தையோ அவர் நாடவில்லை. சமாரியாவில் ஏற்பட்ட எழுப்புதலை வைத்து வளமாக வாழ ஆசைப்படவுமில்லை. அதை விட்டுவிட்டு போ என்ற போது அக்கோரிக்கையை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டார். 

எதியோப்பிய மந்திரியைச் சந்தித்த போது அவனின் ரதத்தையோ செல்வதிரட்சியையோ அதிகார அந்தஸ்தயோ கவனிக்காது, அதன் பின் இழுப்புண்டு போகாது. மந்திரியின் தேவையை தேடலை மட்டும் கேட்டு பூர்த்தி செய்துவிட்டு அடுத்த பணிக்கு பயணமானார். 

தொடர்ந்து தன் குடும்பத்தை, தனது பிள்ளைகளை கர்த்தருக்கு உகந்த பாத்திரமாக வளர்த்தெடுத்தார். பிள்ளைகள் மூலமாக தேவ ராஜ்ஜியம் கட்டப்பட அவர்களை வழிநடத்தினார். ஒரு தேவமனிதனை அவன் பிள்ளைகளை வைத்தே அளவிட முடியும்.

பிலிப்பு ஒரு போதும் சுயராஜ்ஜியம் கட்டவோ வளமான வாழ்வுக்காவோ இயேசுவின் நாமத்தை பயன்படுத்தவில்லை. இந்த நல்ல முன்மாதிரியை கற்றுக்கொண்ட நாங்களும் தேவ வழிநடத்தலுடன், அவரின் இரஜ்ஜிய விரிவாக்கத்துக்காக உழைப்போம் வழுவோமாக. ஆமென்.

நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். 1கொரிந்தியர் 3:6

நன்றி கர்த்தாவே

த. பிரபா.

 

 

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved