ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

மக்கெதோனியா விசுவாசிகளின் கிரியை.


மகா அலெக்சாண்டர் யார் என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவீர்கள்? அவர் ஒரு பேரரசன், சிறந்த போர்வீரன், ஐரோப்பா ஆபிரிக்க ஆசிய நாடுகள் பலவற்றை அக்கிரமித்து தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தவர் என சொல்லிவிடுவீர்கள்.

அவர் எந்த நாட்டில் பிறந்தவர் என்று கேட்டால் அதற்கு பதில் சொல்வது கடினமான காரியமாக இருக்கும். 

கிறிஸ்தவர்களிடம் மக்கெதோனியா எந்த நாடு என்று கேட்டால்? வேதத்தை வாசிப்பவர்களாயின் அது ஒரு ஐரோப்பிய நாடு என்று மட்டும் சொல்லக்கூடும். அல்லது வேதப்புத்தகத்தின் கடைசிப்பக்கத்தை புரட்டி வரைபடத்தை பார்த்து ஆராய்வார்கள்.

 

மகா அலெக்சாண்டர் பிறந்த இடம் இன்றைக்கு மசிடோனியா என அழைக்கப்படும் நாடாகும். இந்த நாட்டையே பவுலடிகளார் பரிசுத்த வேதாகமத்தில் மக்கெதோனியா என்றெழுதியுள்ளார். (ஆங்கில வேதாகாமத்தில் மசிடோனியா என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) முதலாம் இரண்டாம் உலகப் போர்களின் பின்னரே அநேக புதிய நாடுகள் உதயமாகின. அவை இன மத மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டன. தற்காலத்தில் கிறீஸ், அல்பேனியா, கொசோவா, பல்கேரியா போன்ற நாடுகளை அண்டைநாடக கொண்ட தேசமாக மசிடோனியா இருக்கிறது. பவுலடிகளாரின் நாட்களில் இன்றிருப்பது போல் இல்லாமல், அகண்ட தேசமாகவே இருந்தது. அன்றைய மசிடோனியாவின் எல்லை நிலப்பரப்பு போன்றன பரந்து விரிந்ததாகவும், ரோம சாம்ராஜ்யத்தின் காலாணித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. வேதத்தை ஆராயும் பொழுது அதன் பூகோள அமைப்பை அறிந்து வைத்து வாசிப்பதால் வரலாற்றையும், வேதத்தின் உண்மைத் தன்மையையும் எளிதாக புரிந்து கொள்ளலாம். விசுவாச ஜீவியத்தில் உறுதியோடு வாழவும் உதவுபுரியும்.

 

பவுலடிகளார் தனது இரண்டாவது மிஷனரிப் பயணத்தின் போது மீசியா தேசம் வரை வந்து, பிந்தினியா நாட்டுக்கு போக முயற்சிக்கிறார் (வரைபடத்தை பார்க்க, இவை துருக்கி நாட்டிற்குள் இருக்கிறது). ஆவியானவர் அதற்கு தடை போட்டு மக்கெதோனியாவுக்கு போகும்படி தரிசனம் கொடுக்கிறார். (அப் 16:6-10)

பவுலடிகளார் ஆசிய பிராந்தியத்துக்குள்ளேயே நற்செய்தியை கொண்டு சொல்ல முயற்சித்த போது, ஆவியானவர் ஐரோப்பிய கண்டத்துக்குள் நற்செய்தி போகும் நோக்கத்தோடு  அவர்களை வழிநடத்தினார். அப்பொழுதே மசிடோனியா, கிறீஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு நற்செய்தியறிவித்து எருசலேமுக்கு திரும்பினார். இரண்டாவது பயணமானது கி.பி 49-52 வரையான காலப்பகுதியாகும். இந்த காலப்பகுதியிலேயே 

1, 2 தெசலோனிக்கேய நிருபங்களை எழுதினார். 

பவுலடிகளார் மூன்றாவது நற்செய்திப் பயணத்தின் போது (கி.பி 53-58) ல் மீண்டும் இரண்டாம் தடவையாக மசிடோனியா மற்றும் கிறீஸ் வரை சென்றார். பிலிப்பியர் தெசலோனிக்கே பெரேயா போன்ற பட்டணங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பையே மசிடோனியா என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெசலோனிக்கேயாவே மசிடோனியாவின் தலைநகராயிருந்தது. இந்த காலப்பகுதியிலேயே 1கொரிந்தியர் மற்றும் 2கொரிந்தியர் நிருபாங்கள் எழுதப்பட்டது. பவுலடிகளார் பிரயாணத்தின் ஆரம்ப பகுதியில் எபேசுவில் மூண்றுவருடம் தங்கியிருந்த போது 1 கொரிந்தியரையும், மக்கெதோனியாவில் இருந்த போது 2 கொரிந்தியரையும் எழுதியதாக நம்பப்படுகிறது. 

2 கொரிந்தியர் 8, 9 ஆம் அதிகாரங்களில் மக்கெதோனிய விசுவாசிகளின் தெய்வீக சுபாவத்தை காணலாம். அவர்கள் எருசலேம் விசுவாசிகள், பரிசுத்தவான்கள் மீது அக்கறைகொண்டு உதவிகள் செய்ததை பவுலடிகள் விபரித்து எழுதுகிறார். 

அவற்றையே இன்று சுருக்கமாக தியானிக்கலாம்.

அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள். மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன். தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்மஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள். மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல், தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள். (2 கொரி 8: 2-5).

இங்கே பவுலடிகளாரின் உள்ளத்தை, அவரின் சொல்நடையின் புலமையையும் காணக்கூடியதாக இருக்கிறது. மக்கெதோனிய விசுவாசிகள் அதிகமான துன்பம் துயரங்களோடு (மிகுந்த உபத்திரம்) மிகப் பெரியளாவான, கடுமையான வறுமையோடு வெறுமையாக (கொடிய தரித்திரம்) வாழ்ந்தார்கள். அவர்களிருந்த நிலையில் அவர்களின் சக்திக்கு மிஞ்சி உதாரத்தோடு கொடுத்தார்கள். இந்த நற்குணத்தை கவனித்த பவுலடிகளார். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களின் நன்கொடைகளை வாங்க பவுலடிகளார் மறுத்திருப்பார் என்றே நான் கருதுகிறேன். காரணம் பவுலடிகளார் உதவிகளை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொண்டதாக குறிப்பிடுகிறார். பவுலடிகளார் ஏற்க மறுத்ததாலேயே வேண்டியிருக்க (வற்புறுத்தி) வேண்டும். அத்தோடு அம்மக்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதே அவரின் வாஞ்சையாக இருந்திருக்கும். மிகுந்த உபத்திரவம், கொடிய தரித்திரத்தில் இருக்கும் மக்களிடமிருந்து உதவி பெறுவதை அவர் மனம் ஏற்க மறுத்திருக்கும். ஆனாலும் அவர்கள் கொடுத்தார்கள். கர்த்தருக்கு கொடுப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியளித்தது. அதை அவர் கண்களே கண்டது, அதற்கு அவரே (பவுலே) சாட்சி.

இவ்வாறு அவர்கள் கிரியை செய்ய தூண்டியது தான் என்ன? இதற்கான பதிலை 2 கொரி 8:5 ல் வாசிக்கலாம். தங்களை தாங்களே கர்த்தரிடம் ஒப்புக்கொடுத்துவிட்டார்கள். தம்மை சிருஷ்டித்த கர்த்தரின் சித்தம் நிறைவேற்ற ஆவி, ஆத்துமா, சரீரத்தை ஒப்புக்கொடுத்தார்கள். அவர்களின் பணமும், நேரமும், ஆற்றலும், சிந்தனையும், செயலும் கர்த்தரின் விருப்பம் நிறைவேற்ற அர்ப்பணித்தார்கள். ஜீவனை தந்த கிறிஸ்துவுக்கு சிறந்தனவற்றை கொடுத்தார்கள். சிருஷ்டி கர்த்தாவுக்கு நன்றியுள்ளவர்களாக வாழ்ந்தார்கள். தங்களுடைய வாழ்வு எதிர்காலம் கர்த்தரின் கையில் இருப்பதால், அவர்களுக்கு நாளையைக்குறித்து அதிகம் கவலைப்படவில்லை. தேவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுவார் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தார்கள். அவர்கள் உலக இன்பங்களில் பற்றுக்கொண்டு சுகபோகமாய் வாழவோ, பொருள் சேர்கவோ ஆசைப்படவில்லை. பரலோகத்தில் சொத்துச் சேர்ப்பதே அவர்களின் முக்கிய குறிக்கோளாயிருந்தது.

அத்தோடு பவுல் அம்மக்களுக்கு முன்னுதாரணமாய் வாழ்ந்து காட்டினார். பவுலடிகளார் செல்வந்த குடும்பத்தில் பிறந்து, உயர் கல்வி கற்று ஞானவானாய் பிரபல்யமான நபராயிருந்த போதும் அவற்றையேல்லம் உதறித்தள்ளிவிட்டு சாதாரண மனிதர்கள் போல் கர்த்தருக்கு பணிவிடை செய்ததை மக்கள் அவதானித்தார்கள். பவுலடிகளாரின் இரண்டாவது நற்செய்திப் பயணத்தின் போதே கொரிந்துவில் இருந்து தெசலோனிக்கேயருக்கு நிருபங்களை எழுதி அனுப்பினார். 

அவையே 1, 2 தெசலோனிக்கேய நிருபங்களாகும். இந்த நூல்களிலேயே இரண்டாம் வருகை மற்றும் இரகசிய வருகை குறித்து எழுதப்பட்டுள்ளது. ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம். உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம். (2தெச 3:8-9). இவை இரண்டாவது தடவை மக்கெதோனியா போவதற்கு 5 அல்லது 6 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டனவையாகும். பவுலடிகளார் யாரிடமும் கடமைப்படாமல், சரீரத்தில் பெலவீனமாய் இருந்த போதும் அவர் இரவு பகலாக உழைத்தே சாப்பிட்டார். பின்னாட்களில் பிலிப்பியரிடமிருந்து உதவி பெற்றதையும் வேதத்தில் வாசிக்கிறோம். அவை தவிர்க்க முடியாத அல்லது உழைப்பதற்கு வாய்ப்பே இல்லாத சூழ்நிலைகளில் அவ்வுதவிகளை ஏற்றிருக்க கூடும். மற்றப்படி அவரின் மன வாஞ்சை தன்னுடைய பிரயாசத்தால் தான் பிழைப்பதேயாகும். 

பவுலின் எடுத்துக்காட்டான வாழ்க்கையை அவதானித்த மக்கள் தங்களால் அவரைப் போல ஊழியம் செய்ய முடியாவிட்டாலும், தங்களிடமிருந்த பணம் பொருட்கள் மூலம் பிறரை தாங்க, ஊழியம் செய்வோருக்கு உதவியாக இருக்க முன்வர்ந்தார்கள். உதவிகளை கேட்போர், சேகரிப்போர், பெற்றுக்கொள்வேர் முன்மாதிரியாக வாழ்வதே தகுதிநிலையாக உள்ளது.

இன்றைக்கு சபைகளில் பிறரை நேசித்து, பிறர் மீது கரிசனை கொள்ளுங்கள் என போதித்து, உதவி கேட்போரின் சாட்சியற்ற வாழ்க்கையே அனேகர் உதவி செய்ய முன்வராமைக்கான காரணமாகும். ஐரோப்பாவில் நான் பார்த்த ஒரு சில சபைகளில் தமது சபைகளில் சேரும் காணிக்கைகளை. தமது சபை நிர்வாகத்துக்கு மட்டும் செலவு செய்து மிகுதிப்பணத்தை சேமிப்பில் வைத்துவிடுவார்கள். சுவிஷேசத்திற்கு, தேவையில் இருக்கும் மக்களுக்கு கஷ்ரப்படும் ஊழியருக்கு உதவி செய்வதற்கு பிறிதொரு காணிக்கை எடுக்கும் நிலை காணப்படுகிறது. இதை அவதானிக்கிற விசுவாசி தனது உழைப்பிலிருந்து வரும் வருமானத்தை தனது குடும்பத்துக்கு மட்டும் செலவு செய்து, மீதியை அவனும் தனது குடும்ப நலனுக்காக சேமிப்பில் வைக்கிறான். எதிர்கால நலன் கருதி சேமிப்பில் வைப்பதொன்றும் தப்பில்லை. ஆனால் ஏழ்மையில் வறுமையில் இருக்கும் சகோதரர்களை போஷிப்பது தலையாய கடமையாக எண்ண வேண்டும். காணிக்கை போதியளவு மக்கள் போடுகிறார்கள் இல்லை என கவலைப்படும் மேய்ப்பர்கள் தங்களை தற்பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பவுலின் நிரூபங்களை பிரசங்கிப்பது போல பவுலைப் போல வாழப்பழகிக் கொள்வது சாலச் சிறந்தது.

இன்னும் ஒருசில ஆன்மீகவாதிகள் பக்தி சம்பந்தப்பட்ட காரியங்களில் மட்டும் ஈடுபட்டால் போதும் என சொல்பவர்களும் உண்டு. இதற்குரிய சரியான பதிலை 

2 கொரிந்தியர் 8:7,8ல் வாசிக்கலாம். அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும். இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய ஜாக்கிரதையைக்கொண்டு, உங்கள் அன்பின் உண்மையைச் சோதிக்கும்பொருட்டே சொல்லுகிறேன்.

பிரியமானவர்களே!

உங்கள் அன்பின் உண்மையை சோதிக்கும்படியே கர்த்தர் வேதத்தில் மக்கெதோனியரின் அன்பின் பிரயாசத்தை குறித்து எழுதி வைத்துள்ளார். பவுலடிகளார் கொரிந்தியர் மக்கெதோனியர் போல உபயோகமாக வாழவேண்டும் என்ற நோக்கத்தோடே அன்று நிரூபத்தில் அவர்கள் கிரியைகளை நினைவுபடுத்தினார். இன்று நாங்கள் அவற்றை கற்று அதை விட அதிகமாக கிரியை செய்ய வேண்டும் என்பதற்காகவே நமக்கு பரிசுத்த வேதாககமத்தில் மக்கெதோனியர் குறித்து நினைவூட்டப்பட்டுள்ளது. 

இன்று நம்மைச் சுற்றியிருக்கிற எவரொனும் மிகுந்த உபத்திரவத்திலேயோ, கொடிய தரித்திரத்திலேயோ வாழவில்லை. 

தேவன் நம்மை ஆசீர்வதித்து வைத்துள்ளார். காரணம் பிறரை ஆசீர்வாதமாக வாழவைப்பதற்காகவே.

நமது ஜெபம், ஆராதனை, ஆவிக்குரிய பிரயாசமெல்லாம் நம்மை செழிப்பாக்குவதற்காக இல்லாமல். தேவனுடைய சித்தம், அவரின் திட்டாம், அவரின் இரஜ்ஜியம் விரிவாக்க உதவி புரிய வேண்டுமென்பதாயிருக்க வேண்டும். 

அன்னிய பாஷை பேசும் பலர், தங்களது கரத்தை, இருதயத்தை இறுக பற்றிப்பிடித்தவர்களாக தமக்கானவற்றை தேடி வாழுகிறவர்களாயிருக்கிறார்கள். 

தேவ ஆவியை பெற்ற, தேவனோடு வாழுகிற மனுஷன். அவரைப் போல அவர் பிறருக்காக வாழ்ந்தது போலவே நாமும் பிறர் நலனில் அக்கறைப்பட்டு பிறருக்கு ஆசீர்வாதமாய் வாழுவோம். பரிபூரண சந்தோஷத்தோடு கொடுப்போம். மக்கெதோனியர் தேவனின் இருதயத்தில் இடம்பிடித்தது போல, நீங்களும் நானும் அவர் இருதயத்தில் இடம்பிடிப்போமாக. ஆமென்

சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள். 

2 தெசலோனிக்கேயர் 3:13

நன்றி கர்த்தாவே

த.பிரபா

 

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved