ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

பெருந்தன்மை


இப்பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் நன்மை தீமை அறியத்தக்கவர்களாய், நல்ல கெட்ட குணங்களோடேயே பிறக்கிறார்கள். அவரவருடைய வளர்ப்பு, வாழ்கிற சமூகம், கூடுகிற நட்பு, கடைப்பிடிக்கிற மார்க்கம் போன்றனவே அவனை சிறந்த மனிதனாக மாற்றுகிறது. ஒரே தாய் தகப்பனுக்கு பிறந்த இரண்டு சகோரர்களிடையையே மாறுபட்ட குணாதிசயங்கள் செயற்பாடுகளைக் காணக்கூடியதாய் இருக்கிறது. அவை பெரும்பாலும் கெட்ட குணத்தில் மாறுபாடில்லாமல் நன்மை செய்வதிலேயே கூடிக் குறைவதாய் இருக்கிறது. 

வயது அறிவு அனுபவங்கள் போன்றன வளர வளர நற்குணத்தில் வளர்ந்து கெட்ட குணங்களை புறந்தள்ளுகிறான் உலகத்து மனிதன். உலகத்து மனிதன் ஜென்ம சுபாவங்களுக்கு மரித்தவனல்ல. 

இயேசுக்கிறிஸ்துவுக்குள் மறுபடியும் பிறந்த பிள்ளைகள் ஜென்ம சுபாவங்களுக்கு மரித்து இயேசுக்கிறிஸ்துவுக்கு பிரியமான அல்லது அவரைப் போன்ற நற்குணத்தோடு ஆவிக்குரிய மனிதர்களாக ஜீவிக்கிறார்கள். மாம்சம், ஆவி ஆகிய இரண்டின் குணவியல்புகள் பற்றி பவுலடிகளார் கலாத்தியர் 5:17-26 ல் விரிவாக எழுதியுள்ளார். கிறிஸ்தவர்களாய் இருந்தாலும், அவரவர் கனிகளை (செயலை) வைத்தே, ஆவிக்குரியவர்களா மாம்சத்துக்குரியவர்களா என தீர்மானிக்கமுடியும். 

அதிக கனிகளைக் கொடுத்து, ஆவிக்குரிய வாழ்வில் முதிர்ச்சியடைந்த ஒருவரிடம் பெருந்தன்மை எனும் சுபாவமும் குடிகொண்டிருக்கும். 

ஒரு மனிதனின் தாராள மனப்பான்மையையே பெருந்தன்மை என சொல்லப்படுகிறது. 

தன்னை முன்னிலைப்படுத்தாது, தன்னைக் குறைத்து மற்றவரை உயர்த்தும் பெருந்தன்மை.

தனக்கு கிடைக்காவிட்டாலும் பறுவாயில்லை மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டும் என வாஞ்சிக்கும் பெருந்தன்மை.

பிறருடைய குற்றங் குறைகளை பெரிது படுத்தாது, எதற்கும் விட்டுக்கொடுத்து தாராள மனப்பான்மையோடு நடக்கவைக்கும் பெருந்தன்மை.

குற்றஞ் செய்த ஒருத்தருக்கு தண்டனை வழங்காது மன்னித்துவிட்டால், பொருந்தன்மையாய் மன்னித்ததாக சொல்லுவார்கள். பண நெருக்கடியில் இருக்கும் ஒருத்தருக்கு பண உதவி செய்தால், பெருந்தன்மையாய் கொடுத்துதவினார் என சொல்லுவார்கள். பதவி போட்டியில் இருக்கும் ஒருத்ததுக்கு அப்பதவியை விட்டுக் கொடுத்தால், பெருந்தன்மையாய் விட்டுக்கொடுத்தார் என்று சொல்வதை அன்றாட வாழ்க்கையில் கேள்விப்படுகிறோம்.

ஆனால் உச்ச நிலையில் இருக்கும் ஒருத்தார் தன்னைக் குறைத்து மற்றவரை உயர்த்துவது அரிதே. வாழ்நாள் பூராய் தன்னை தாழ்த்தி மற்றவர்களை உயர்த்திப் பார்ப்பதும் அரிதே.

பரிசுத்த வேதாகமத்தில் அதியுச்ச நிலையில் இருந்த பரிசுத்தவான்கள் இருவர் தங்களை மேன்மைப்படுத்தாது. ஒருவரை ஒருவர் தாழ்த்தி பெருந்தன்மையாக ஒருவரை ஒருவர் புகழ்ந்த உண்மைச் சம்பவத்தை தியானிக்கலாமா? 

வனாந்தரத்தில் யோவான் ஸ்நானன் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்கச்சையைக் கட்டிக்கொண்டவராயும், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவராயும் இருந்தார். அவர் சொன்னார் என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்லவென்று. (மத்3:11, மாற்1:7, லூக்3:16, யோவ1:27) யோவான் ஸ்நானன் இயேசுக்கிறிஸ்துவைக் குறித்தே இவ்வாறு சொன்னார். இப்பொழுது கிறிஸ்துவானவர் யோவானிடம் ஞானஸ்நானம் பெற வந்தார். அப்பொழுது யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றார். யோவான் ஸ்நானனின் பெருந்தன்மையை புரிந்து கொள்ள வேண்டுமாயின் அவரின் பின்னனி அன்றைய சூழலையும் ஆராய வேண்டும். 

இயேசுக்கிறிஸ்து தச்சனின் மகன். யோவானை ஸ்நானகனை சந்திக்க முன்னர் அவர் வீட்டிலிருந்து தந்தையின் வேலையை செய்தவர். அவர் ஒரு பிரசங்கத்தையோ அற்புத அடையாளங்களையோ செய்யவில்லை. அவருக்கென பெரிய கூட்டமோ சீஷர்களோ இல்லை. 

ஆனால் யோவான் ஸ்நானகனின் நிலை வேறு விதமாக இருந்தது.

யோவானின் தந்தை சகரியா ஆரோனின் வழிவந்த ஆசாரிய வம்சத்தை சார்ந்தவர். 

பக்திமானாயும் உத்தமனாயிருந்தபடியால் எருசலேம் தேவாலயத்தில் பணிசெய்தார். பழைய ஏற்பாட்டின் கடைசி தீர்க்கதரிசியாகிய மல்கியாவின் பின்னர், கர்த்தர் 400 வருடங்களாக எந்த தீர்க்கதரிசியையும் எழுப்பவில்லை. 400 ஆண்டுகளின் பின்னர் யோவான் ஸ்நானகனையே தேவன் முதல் எழுப்பினார். யூதேயா மற்றும் புற தேசத்து மக்கள் ஆன்மீகவாதிகள் என பலர் அவரைத் தேடிச் சென்றார்கள். அவர்களுக்கு வல்லமையாக பிரசங்கித்து அவர்கள் கேள்விகளுக்கு பதில் கொடுத்ததோடு, அவர்களை உரிமையோடு பாவத்தை சுட்டிக்காட்டி கடிந்து கொண்டு, ஞானஸ்தானம் கொடுத்தார். இப்பொழுது அவருக்கு சீஷர்களும் இருந்தார்கள். அதுதவிர இயேசுக்கிறிஸ்துவை விட ஆறு மாதங்களால் மூத்தவராயிருந்தார். இப்படிப்பட்ட உயர்நிலையில் இருந்த பொழுதும் இயேசுக்கிறிஸ்துவின் பாதரட்சையை அவிழ்க்கிறதுக்கு தான் தகுயற்றவன் என்றார். பண்டைய நாட்களில் வசதிபடைத்தவர்கள் பாதரட்சைகளை அணிவித்துவிடவும் கழற்றிவிடவும் அவற்றை பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கும் அடிமைகளை வேலைக்கு அமர்த்தியிருப்பார்கள். யோவானின் கருத்தென்னவேனில் அடிமைகளை விட தான் தகுதி குறைந்தவன் என்பதேடு, இயேசுக்கிறிஸ்து உன்னதமானவர் அவரின் அழுக்கான பாதரட்சையை தொடுவதற்கு கூட தனக்கு தகுதியில்லை என்பதேயாகும். ஆகமங்கள் தீர்க்கதரிசனங்களை கற்று அறிந்திருந்தபடியால் இயேசுக்கிறிஸ்து பூமிக்கு வந்ததன் நோக்கம் அவருடைய வாழ்வு, முடிவு என்பதை முன்கூட்டியே அறிந்தும் வைத்திருந்தார். 

பெரிய கூட்ட மக்கள் சூழ்ந்திருக்கும் பொழுது இயேசப்பா ஞானஸ்தானம் பெற யோவானை நெருங்கிய போது, அவரை தடுத்து உம்மால் நான் ஞானஸ்தானம் பெற வேண்டியிருக்க நீர் என்னிடமா? என தயக்கத்தோடு உத்தமமாக உண்மையை பேசினார். அதே யேவானே (யோவான் 3:30) அவர் பெருகவும் நான் சிறுகவும் எனச் சொன்னவர். யோவானின் பெருந்தன்மைக்கு இதைவிட பெரிய உதாரணம் தேவையில்லை. தன்னையே உயர்த்தாத தான் பிரபல்யமாக வேண்டும், தனக்கு கூட்டம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் சிறு துழிகூட அவரிடமிருந்ததில்லை. 

ஞானஸ்தானம் பெற்ற பின்னர் இயேசுக்கிறிஸ்து வல்லமையாக ஊழியம் செய்தார். அந்த நாட்களில் யோவான் ஸ்நானகன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது இயேசுக்கிறிஸ்து இஸ்ரவேல் மக்களைப் பார்த்து யோவானைக்குறித்து சொன்னார். (மத்தேயு 11:7-11) 

யோவான் ஸ்நானகன் தீர்க்கத்தரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவர், ஸ்தீரிகளிடத்திலே பிறந்தவர்களில் அவரைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனுமில்லையென்றார். சாதாரண மனிதனால் இவ்வாறு புகழப்படவில்லை. திரித்துவ தேவனால் புகழப்பட்டார். இஸ்ரவேல் மக்கள் தீர்க்கதரிசிகளையே மேன்மையாக கருதினர். அப்படிப்பட்ட தீர்க்கதரிசிகளைக்காட்டில் சிறப்பானவர் எனப் புகழாரம் சூட்டியதோடு, பெண்களில் பிறந்தவர்களில் அவரை விட பெரியவர் ஒருவனுமில்லை என பெருமிதம் கொண்டார். இதற்கு மேல் பெருந்தன்மையோடு புகழ்வதற்கு வேறு வார்த்தையில்லை. 

இயேசுக்கிறிஸ்துவுக்கு முற்கூட்டியே தெரிந்திருந்தது யோவான் சிரைச்சேதம் செய்யப்படப் போகிறார் என. யோவான் ஸ்நானகன் தனக்காக வாழாது, சுயத்துக்கு மரித்தவராய், ஒரு துறவி போன்றே வாழ்ந்தார். வயதான பெற்றொருக்கு பிள்ளையாய் பிறந்தபடியால். பெற்றோரின் பாசமும் பராமரிப்பும் அதிக காலம் இருந்திருக்காதென நான் கருதுகிறேன். ஆகவே சிறுவயதிலிருந்தே தியாகம் அர்ப்பணிப்பு பாடுகள் நிறைந்த வாழ்க்கையையே யோவான் அனுபவித்திருப்பார். இயேசுக்கிறிஸ்துவின் வ்ரவுக்காக அவரின் ஊழியத்துக்கான ஆயத்த பணி செய்து, இறுதியில் இரத்த சாட்சியாய் மரித்தார். யோவான் தேவ சித்தம் நிறைவேற்ற தன்னை முழுமையாக அற்பணித்தார். கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணிய யோவானை நன்றியுணர்வோடு இயேசுக்கிறிஸ்து நினைவுகூர்ந்தார். 

இயேசுக்கிறிஸ்துவும் சரி யோவான் ஸ்நானகனும்சரி தங்களை தாழ்த்தி மற்றவர்களை உயர்த்திப் பேசினார்கள். மாய்மால மனதோடு, வஞ்சப் புகழ்ச்சி பேசியவர்களல்ல. இரண்டு இரத்தசாட்சிகளும், இரண்டு பரிசுத்தவான்களும், இரண்டு சிகரங்களும் மனப்பூர்வமாக உண்மையை பெருந்தன்மையாய் பேசி, செயல்பட்டு தெய்வீக சுபாவத்தை வெளிப்படுத்தி வாழ்ந்து காட்டினார்கள்.

பிரியமானவர்களே!

உங்கள் வாழ்நாளில் யாரையாவது பெருந்தன்மையாக பாராட்டியதுண்டா? விட்டுக்கொடுத்ததுண்டா? மன்னித்ததுண்டா? கொடுத்துதவியதுண்டா?

எரிச்சல், பொறாமை, போட்டி, சுயநல மனப்பான்மை கொண்டோரிடம் பெருந்தன்மை காணப்படாது.

நான் சாதித்தேன், நான் கட்டினேன், என்னுடைய உழைப்பு, எனக்கே சொந்தம் என தற்பெருமை பேசி தங்களுக்கு தாங்களே புகழாராம் சூட்டி, சுயநலமாய் வாழ்பவர்களே இன்று நிறைந்து காணப்படுகிறார்கள். 

இப்படிப்பட்டவர்களிடமிருந்து சகோதர அன்பையோ, பெருந்தன்மையெனும் நற்குணத்தையோ எதிர்பார்க்க முடியாது. 

யோவான் ஸ்நானகன் இயேசுக்கிறிஸ்துவிடம் மட்டுமல்ல, வேதத்தில் உள்ள அத்தனை பரிசுத்தவான்களிடமும் பெருந்தன்மை எனும் நற்குணம் குடிகொண்டிருந்தது.

பேதுரு புறஜாதியனாகிய கொர்நேலியு வீட்டுக்கு போனதைக் குறித்து எருசலேமில் இருந்த யூதர்கள் விசாரித்த நேரம். (அப் 11ம் அதிகாரம்). நீங்கள் யார் அதைக் கேட்க? என்னை ஆண்டவர் அனுப்பினார் நான் போனேன் என திமிராய் பதில் சொல்லவில்லை. அல்லது நான் இயேசுக்கிறிஸ்துவால் ஊழியத்துக்கு அழைப்பு பெற்றவன், மூன்றரை ஆண்டு அவரோடு கூட இருந்தவன் எனச் சொல்லவுமில்லை.

பெருந்தன்மையாக அவர்களை மதித்து ஆரம்பம் முதல் முடிவு வரை ஒன்றும் விடாமல் சொன்னார். 

பவுலடிகளாரின் நிருபங்களை வாசிக்கும் பொழுது அவரின் பெருந்தன்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அவர் நிருபங்களை எழுதத் தொடங்கும் போது எழுதப்படும் சபைக்கு அல்லது தனிநபருக்கு வாழ்துதல் சொல்லி கர்த்தரின் நாமத்தில் ஆசீர்வதிப்பார். முடிக்கும் பொழுது தன்கூட இருப்பவர்களின் பெயர்களை எல்லாம் குறிப்பிட்டு அவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள் என எழுதி முடிப்பார்.

இயேசுக்கிறிஸ்து, யோவான் ஸ்நானகன், பேதுரு, பவுல் போன்றோரைக்காட்டில் நாங்களோன்றும் மேன்மையானவர்கள் அல்ல.

வயது, பால்வேறுபாடு காட்டாமல் எல்லோரையும் மனமார புகழ்ந்து, உதவி, மன்னித்து, விட்டுக்கொடுத்து தாராள மனப்பான்மையோடு (பெருந்தன்மை) ஜீவிப்போமாக. 

இயேசுக்கிறிஸ்து, யோவான் ஸ்நானகன் போன்றோரின் பாதச்சுவட்டை பின்பற்றி பயணிப்போமாக. மற்றவர்களை உயர்த்தி எங்களை தாழ்த்தி தெய்வீக சுபாவத்தை வெளிப்படுத்துவோமாக. ஆமென்.

தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். கலாத்தியர் 6:8

நன்றி கர்த்தாவே

த.பிரபா.

(அற்பமாக எண்ணாமல் இந்த சகோதரனூடாகவும் கர்த்தர் எதையாவாது பேசக் கூடும் என்றெண்ணி பெருந்தன்மையாக இச் செய்தியை வாசித்த உங்களை கர்த்தர் கனப்படுத்துவாராக.)

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved