ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

ரூத்தின் பாசம்.


 

தாயை அதிகமாக நேசிக்கும் நண்பன் ஒருவர் எனக்கிருக்கிறார். அவரும் நானும் இருபது வருடங்களுக்கு முன் இணைந்தே லண்டன் வந்தோம். ஆரம்பத்தில் காதலித்த பெண்ணை இலங்கையில் விட்டுவிட்டே அவர் இங்கிலாந்து வந்திருந்தார். அவருக்கு குடியுரிமை கிடைக்க முன்னரே தனது காதலியை லண்டன் கூப்பிட்டு திருமணமும் செய்து கொண்டார். அவருக்கு காலதாமதமாகவே இங்கிலாந்து குடியுரிமை கிடைத்தது. இங்கிலாந்து கடவுச்சீட்டு கிடைத்த பின்னரும் தாயை சென்று பார்க்கவில்லை. அத்தாயார் திடீர் என ஒருநாள் மரித்துவிட்டார். இப்பொழுது அத்தாயாரின் இறுதிக் கிரியைக்கு போக மனைவி இடையூறாயிருந்தார். இலங்கை பயணத்துக்கு பணமில்லை என சொன்ன வேளை, அச்செலவுக்கு கடனாக நான் பண உதவி செய்து, அவரை அனுப்பி வைத்தோம். 

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் மாமியை மருமகளும், மருமகளை மாமியாரும் வில்லியாக பார்க்கும் நிலையிருக்கிறது.

அவரவர் ஆண் பிள்ளைகளுக்கு பெண் பார்க்கும் நேரத்தில் சீதன (வரதட்சணை) பேச்சின் போதே பகைக்கு வித்திடுகிறார்கள். சீதன கொடுமையால் பாதிக்கப்படுகிற ஒரு பெண், நாளை அவளே தாயாகி தனது பிள்ளைக்கு சீதனம் கேட்கும் அவலநிலைக்குள் நமது சமூகம் உள்ளது. சீதனம், பெண் அடிமைத்தனம், சாதியம், மூடநம்பிக்கைகள் ஆகியனவற்றை இந்துமதமே பிரசவித்தது. தனி மனித சுதந்திரத்தை பறித்த, மனிதநேயமற்ற மார்க்கத்தை பின்பற்றி, கட்டுக்குள் ஜீவிக்கும் பேதையான மக்களின் மனக்கண் திறக்கப்பட ஜெபிப்போமாக.

வயோதிப பெற்றோரை புறக்கணிப்பதும், முதியோர் இல்லங்களுக்கு பராமரிப்புக்கு அனுப்பும் புதிய கலாச்சாரம் இன்று உருவாகியுள்ளது. என் பெற்றோரை நான் முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் போது, இதை அவதானித்துக் கொண்டிருக்கும் என் பிள்ளை நாளை என்னை முதியோர் இல்லத்துக்கு அனுப்புவான். பிள்ளைகள் வயோதிப பெற்றோரை பராமரிப்பது அவசியமான கடமை என்று நினைக்க வேண்டும். சரீரத்தில் பெலவீனப்பட்டவுடன் இனிமேல் கூட வைத்திருப்பதால் உபயோகம் இல்லை என நினைபவர்களே வீட்டைவிட்டு துரத்திவிடுவார்கள் அல்லது முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவார்கள். கடைசிவரையும் தாய் தகப்பனை பராமரித்து பாதுகாப்பதை சுகமெனக் கருத வேண்டும். சுமையாக கருதக்கூடாது. ஒருவன் தன் சொந்த தாய் தகப்பனையே உறவினரையோ நேசிக்கவில்லை என்றால், பரமதகப்பனை எப்படி நேசிப்பான்? அயலானை எப்படி நேசிப்பான்?

பரிசுத்த வேதாகமத்தில் விதவை மாமியாரை பாசத்தோடு பராமரித்த இளம் விதவை ரூத்தின் சரித்திரத்தை வாசிக்கிறோம்.

பெத்லெகேமில் பஞ்சமுண்டான போது எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரராகிய மக்லோன், மற்றும் கிலியோனும் மோவாப் தேசத்துக்கு இடம்பெயர்ந்து சென்றார்கள். அன்றைய நாட்களில் பஞ்சம் உண்டாகும் போது ஒர் இடத்திலிருந்து, இன்னொரு இடத்துக்கு இடம்பெயர்வது சகஜமானதாக இருந்தது. (இப்படியானதொரு சூழ்நிலை ஏற்பட்டபொழுதே ஆபிரகாம் எகிப்துக்கு சென்றிருந்தார்.) காலம் சரியாக தெரியாத பட்சத்திலும் அனுமானுக்க முடிகிறது. மத்தேயு 1:5 ல் சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான் என்றெழுதப்பட்டுள்ளது. ராகாப் யோசுவாவின் காலத்தில் வாழ்ந்த பெண்மணி, அவளின் மகனே ரூத் புத்தகத்தில் வரும் போவாஸாகும். ஆகவே யோசுவாவின் இறப்புக்கு பின் நியாயாதிபதிகளின் ஆரம்ப நாட்களிலேயே ரூத் வாழ்ந்ததாக அனுமானிக்கலாம்.

லோத்துவின் மூத்த மகளின் தகாத உறவின் மூலம் பிறந்த பிள்ளையின் சந்ததியே மோவாபிய இனமாகும். (ஆதி 19:37). இந்த இனத்தார் வாழ்ந்த இடத்தையே மோவாப் தேசம் என வேதாகமம் குறிப்பிடுகிறது. இவர்கள் கோமேஷை முதன்மை கடவுளாக வணங்கி வந்தார்கள். (எண் 21:29). கோமேஷ் ஒரு ஆண் தெய்வமாகும் இதற்கு உயிர்ப்பலி செலுத்தும் வழக்கம் மோவாபியரிடம் இருந்தது. மோவாபியர் விக்கிரக, பாகால் என பல தெய்வ வணக்கங்களை கொண்டவர்களாயிருந்தார்கள். பிலேயாம் தீக்கதரிசியும் இத்தேசத்தை சார்ந்தவரே. மோசே மரித்த நோபோ மலையும் இங்குதான் உள்ளது. அது எரிகோவுக்கு எதிரேயிருக்கிறது. இன்றைக்கு மோவாப் யோர்டன் நாட்டுக்கு சொந்தமாக பட்டணமாக இருக்கிறது. சவக்கடலை உள்ளடக்கிய உயர்ந்த மலைகளையும், குன்றுகளையும் கொண்ட நாடாகும்.

பஞ்சத்திலிருந்து தப்பிக்க சென்ற எலிமெலேக்கு மோவாபிலே மரித்துப் போகிறார். அவருக்கிருந்த இரண்டு பிள்ளைகளும் ரூத், ஓர்பாள் என்ற மோவாபிய பொண்களை திருமணம் செய்து கொள்ளுகிறார்கள். துரதிஷ்டவசமாக நகோமியின் இரண்டு ஆண் பிள்ளைகளும் மோவாபில் மரித்துப் போகிறார்கள். 

செந்த மண்ணுக்கு திரும்பிப்போக காத்திருந்த நகோமிக்கு,பெத்லெகேமில் மக்கள் இயல்பாக வாழ்கிறார்கள் என்ற நல்ல செய்தி வந்தடைந்தது. நகோமி பிறந்த மண்ணுக்கு திரும்பி போக தீர்மானித்து புறப்பட்டாள்.

நகோமி

நகோமி தனது இரண்டு மருமகள்மாரையும் உண்மையாக நேசித்தாள். கணவனை பிள்ளைகளை இழந்த வலியிருந்த போதும். ஒரு போதும் மருமகள்மாரை திட்டவில்லை, வெறுக்கவில்லை. நம்மூர் மாமிமார் என்றால் ராசியில்லாதவள், குடும்பத்தை அழிக்கவந்தவள் எனச் சொல்லி திட்டி வீட்டை விட்டே விரட்டியிருப்பார்கள். நகோமி ஊருக்கு புறப்பட முன்னே, இரண்டு பேரிடமும் அவரவர் வீட்டுக்கு போகும்படி கேட்டிருப்பார். அவர்கள் மறுத்த பட்சத்தில், மூவரும் கூடி புறப்பட்டார்கள். குறிப்பிட்டளவு தூரம் சென்றதுமே மீண்டும் இரண்டு பேரையும் பார்த்து என்னுடன் வந்து எந்த பிரயோசனமும் இல்லை. நான் வாழ்ந்து கெட்டவள். நீங்களோ வாழவேண்டியவர்கள். உங்கள் இருவருக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. பிள்ளைகள் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டுமென அன்போடு கனிவாக எடுத்துரைத்தாள். கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார் எனத் திடப்படுத்தி இருவரையும் முத்தமிட்டாள். இருவரும் தாய் வீட்டுக்கு போய்விட்டால் தன்னையும் தன் பிள்ளைகளையும் மறந்து அவர்கள் புது வாழ்க்கை தொடங்க கூடிய மனநிலைக்கு வருவார்கள் என்றென்னினாள். அத்தோடு இரண்டு அன்னிய (மோவாபிய) பெண்களையும் பார்க்கும் பெத்லேகேமில் உள்ள ஊர்க்காரர்கள் உறவுகள் பரிகாசிப்பார்கள், புறக்கணிப்பார்கள் என்ற அச்சமும் இருந்திருக்கலாம்.

ஓர்பாள்

நகோமி மீண்டும் மீண்டும் திரும்பி போங்கள் என்று சொல்ல சொல்ல ஓர்பாளுக்குள் சலனம் ஏற்பட்டுவிட்டது. இவ்விருவருக்குப் பின்னால் போனால் தனது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என நினைத்தாள். பெத்லெகேமுக்கு போகத்தான் எத்தனை நாள் எடுக்கப்போகிறதோ தெரியவில்லை, ஒரு வேளை பெத்லெகேம் போய்விட்டால் தனது பெற்றோர் உறவினரை மீண்டும் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுவிடக் கூடும் எனக் கலங்கி திரும்புவதற்கு உத்தேசித்தாள். நகோமியை விட்டுப்பிரிய மனதில்லாமல் கட்டித்தழுவி சத்தமிட்டு அழுது முத்தமிட்டு தன் தாய் வீட்டுக்கு திரும்பி போனாள். அவள் தனது தெய்வங்களிடம் திரும்பி போனாள். அவள் தனது எதிர்கால நலன்கருதி திரும்பி போனாள். பரிசுத்த வேதாகமத்தில் ஓர்பாளின் சரித்திரம் போனாள் என்பதோடே முடிகிறது. 

அதற்கு பின் அவளை வேதப்புத்தகத்தில் காண முடியாது.

ரூத்

ஓர்பாள் போனதும், மூவர் இருவர் ஆகிவிட்டார்கள். ஓர்பாள் போனது போல ரூத்தையும் போய்விடுமாறு நகோமி கேட்டுக்கொண்டாள்.

ரூத் முடியவே முடியாது. இனி திரும்பி போகிற பேச்சுக்கே இடமில்லை என்றாள். நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன் என்றதோடு. நீங்க மரணமடையும் இடத்திலேயே நானும் மரித்து அடக்கம் பண்ண வேண்டும் என்றாள். இருவரையும் மரணம் மட்டுமே பிரிக்க முடியுமென உறுதியாக கூறினாள் ரூத். இந்த சம்பாஷனையையும், இருவருக்குள் இருக்கும் வலிமையான அன்பையும் பரலோகத்தில் இருந்து பார்த்தும், கேட்டும் கொண்டிருந்த கர்த்தரின் உள்ளம் மகிழ்ச்சியடைந்திருக்கும். ரூத்தின் தன்னலமற்ற தீர்மானமே அவள் வேதத்தில் இடம்பிடிக்க வழிவகுத்தது.

மாமியார் மீது ரூத் இவ்வளவு அக்கறைப்பட என்ன காரணம்? அவள் கருணையுள்ளம் கொண்டவளாய் இருந்தாள். இருதய சுத்தமுள்ளவளாயும், தெளிந்த புத்தியுள்ள பெண்ணாயிருந்தாள். தன் கணவன் மரித்தாலும், அவன் உயிரோடு இருந்திருந்தால் எப்படி தன் மாமியாரை பாசத்தோடு பராமரித்திருப்பாளோ. அதேயளவு பாசத்தோடு அவன் மரித்த பின்னும் பராமரிக்க திடசங்கற்பம் பூண்டாள். தூய அன்புள்ளம் கொண்ட ரூத், மோவாபிய வீதியில் மாமியாரை விட்டுத் தாய் வீடு போகவில்லை. அவள் வயதான மாமியின் இடத்திலிருந்து சிந்தித்தாள். இன்றுபோல் வாகன வாகனவசதிகள் அற்ற அன்றைய நாட்களில், மிருகங்களின் உதவியோடு அல்லது கால்நடையாகவே பயணங்கள் செய்ய முடியும். பெத்லெகேமுக்கு நகோமி கால் நடையாகவே பயணத்தை தொடங்கினார். கால் நடையாக பல நாட்கள் பயணிக்கும் வயோதிபத் தாய் வழியில் உணவு தண்ணீர் இல்லாமல் மயங்கி விழக்கூடும். கொள்ளையர்களால் மிருகங்களால் நகோமி தாக்கப்பட்டு மரிக்கலாமெனவும் அஞ்சினாள் ரூத். அத்தோடு நீண்ட கால இடைவெளிக்கு பின் (குறைந்தது 10 வருடங்களாக இருக்கும்) பெத்லெகேம் போகும் பட்சத்தில், வாழுவதற்கு வீடோ வருமானமோ இல்லாமல் கஷ்ரப்படக்கூடும் எனவும் நினைத்திருப்பாள். ஆகவே உதவியாக மாமியாருடன் கூடப் பயணப்படுவதில் உறுதியாக இருந்தாள்.

ஒருவேளை அந்த இடத்தில் நான் (இக்கட்டுரை எழுதுபவன்) இருந்திருந்தால். நாகோமியை பார்த்துச் சொல்லியிருப்பேன். "பாட்டி வயசான காலத்தில் ஊருக்கு போய் என்ன சாதிக்கப் போகிறாய், அங்கு யார் தான் உனக்கிருக்கிறார்கள், இங்கிருக்கும் இரண்டு மருமகளுக்கும் மறுதிருமணம் செய்து வைத்து, அவர்களோடு கடைசிவரை வசிக்கலாமே, கணவனதும் பிள்ளைகளதும் கல்லறையும் இங்கு தானே உள்ளது, மீண்டும் பஞ்சம் வந்தால் எங்கு போவாய் எனக் கேட்டிருப்பேன்".

ரூத்தோ மாமியாரின் விருப்புக்கு இசைவாக நடந்து, இருவரும் பெத்லெகேம் வந்து சேர்ந்தார்கள். ஊர்க்காரர் ஆச்சரியமாக நகோமியை பார்த்து, உருவமே மாறிவிட்டதென வியந்து, அவளின் இடப்பெயர்வின் போது நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார்கள். நகோமி நடந்த சம்பவங்களை எல்லம் எடுத்துச் சொன்னாள். குறிப்பாக ரூத்தை குறித்து புகழ்ந்து பேசியிருப்பாள். ஊர்க்காரர் மத்தியில் ரூத்துக்கு அதிக மதிப்பு உண்டாயிருந்திருக்கும்.

வயிற்றுப் பிழைப்புக்கு யாரிடம் உதவி கேட்கலாம் என்று யோசிக்காமல், வயல்வெளிக்கு போய் தானியம் பொறுக்க ரூத் மாமியரிடம் அனுமதி கேட்டு, தானியம் பெறுக்கச் சென்றாள். வயல் வெளியில் வேலைபார்ப்பவர்களிடம் அனுமதி பெற்று காலை முதல் மாலைவரை தானியங்களை சேகரித்து வீடுவந்து சேர்வாள்.

கடின உழைப்பாளியான ரூத், ஏழை எளியவர்களுக்கேன வயலில் சிதறவிடும் கதிர்களை சேகரிக்கும் போது, அவள் கற்பனை கூட பண்ணியிருக்கமாட்டாள் தனது கொள்ளுப் பேரன் (தாவீது) இந்த தேசத்தை ராஜாவாக ஆளுவான் எனவும், அவ்வயலின் சொந்தக்காரனை மறுமணம் செய்வேனெனவும். (ஆதரவற்றவர்களாய் அற்பமாக எண்ணப்படுவோர், கர்த்தருக்கு முன்னால் உண்மையும் உத்தமமாக வாழும் பட்சத்தில், அவர்கள் சந்ததியை கர்த்தர் கனப்படுத்துவார்.)

ஒருதடவை வயல்வெளியில் தானியங்களைச் சேகரித்துக் கொண்டிருந்த ரூத்தை, அவ்வயலின் சொந்தக்காறன் போவாஸ் மதிய உணவு சாப்பிட அழைத்து, வறுத்த கோதுமையை கொடுத்தான். பெற்றுக்கொண்ட வறுத்த கோதுமையை சாப்பிட்டுவிட்டு மீதியானதை தனது மாமியாருக்கென எடுத்துவைத்தாள் ரூத். 

ரூத் மாமியாரை சொந்த அவையம் போலவே நேசித்தாள்.

பிரியமானவர்களே!

நகோமி, ஓர்பாள், ரூத் இம்மூவரில் நீங்கள் எந்தப் பாத்திரம்?

லூக்கா 15ம் அதிகாரத்தில் வரும் இளைய குமாரன் கதையில், இளையகுமாரன் மனந்திரும்பி சொந்த தகப்பன் வீட்டுக்கு வந்த கதையைப் போன்றதே, நகோமியும் சொந்த தேசமாகிய பெத்லெகேமுக்கு வந்தது. அவள் பாவமும் சாபமும் உள்ள மோவாபிய தேசத்தை விட்டு பரிசுத்த பூமிக்கு திரும்பினாள். மருமகள்மாரை அதிகமாக நேசித்தாள், அவர்களின் நலனில் அக்கறைப்பட்டாள்.

ஓர்பாளுக்கு முன்பாக இரண்டுவழியிருந்தது.

1. பிறர்நலமா? அல்லது சுயநலமா?

2. ஜீவனுள்ள தேவனா? அல்லது ஜீவனற்ற விக்கிரகமா?

3. பரலோகமா? அல்லது நரகமா?

4. ஜீவனுக்கேற்ற வழியா? அல்லது கேட்டுக்கு போகும்வழியா என்பதேயாகும். 

அவள் இரண்டாவது வழியையே தெரிவு செய்து போனாள்.

மறுமணம் செய்வதற்கு ரூத்துக்கு உரிமையிருந்தும், அதை தியாகம் செய்தாள். தனது சரீர இச்சை, குடும்ப வாழ்வு போன்றனவற்றை, அநாதையாக நின்ற தன் மாமியின் வாழ்வுக்காக அர்ப்பணித்தாள். அதற்கு மேல் உம்முடைய தேவன் என்னுடைய தேவன் என்று அறிக்கையிட்டதானது. ஜீவனுள்ள தேவனை தனது செந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டமையாகும். பாக்கியவதியான ரூத் சொல்லெண்ணா பாடுகளை அனுபவித்திருப்பாள். அவற்றை அறிந்த கர்த்தர், அவளை மறுமணம் செய்ய வைத்து, அவளின் சந்ததியூடாக தாவீதும் உலக இரட்சகரும் பிறக்க வாய்ப்பளித்தார்.

நான்கு அதிகாரத்துக்குள் உள்ளடக்கப்பட்ட இந்த சரித்திரத்தை முறையாக கற்று, நமது வாழ்க்கையில் அப்பியாசப்படுத்துவோம். 

இன்றைய நாட்களில் மாமியாரை மட்டுமல்ல வயது சென்ற செந்த பெற்றோரையே நேசிக்காத, வீட்டில் வைத்து பராமரிக்காத பிள்ளைகளைப் பார்க்கிறோம். 

பக்தியை பற்றி அதிகம் பேசாது, பாசத்தை முன்னிலைப்படுத்தி

தன்னலமற்று வழ்ந்த ரூத் வரலாறாக எழுந்து நிற்கிறாள்.

பக்தி (ஆன்மீகம்) வாழ்க்கை வாழ்ந்து, பாசம் காட்டுவது போல் வேஷம் போடும் உறவுகளே!

நாளை நீங்களும் ஒரு நகோமியாக, ரூத்தாக வாழ்ந்து காட்டுவீர்களாக. 

கர்த்தர் உங்களைக் குறித்து மகிழ்ச்சியடையட்டும். 

சரித்திரம் உங்களைக் குறித்தும் பேசட்டும். ஆமென்.

உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான். ரூத் 2:12

நன்றி கர்த்தாவே.

த.பிரபா

 

 

 

 

 

 

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved