ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

சவுல் ராஜாவின் பின்மாற்ற ஜீவியம்.


அனுதினமும் தேவனோடுள்ள உறவில், ஐக்கியத்தில், விசுவாசத்தில் உறுதியாயிருந்து முன்நோக்கி (அவரை நெருங்கி) பயணிக்க வேண்டும். நம்மை உண்டாக்கிய தேவனை பிரியப்படுத்தி வாழவேண்டும். அவருடைய பிரசன்னத்தில் ஜீவிக்க வேண்டும். மறுவழமாக தேவ பிரசன்னத்தை நாடாது, அவரை பிரியப்படுத்தாது, சுய இச்சையின்பால் இழுப்புண்டு தனக்கானதை தேடி, பாவ வாழ்க்கையில் வாழும் மனுஷன் பின்மாற்றமடைகிறான். என்றோ ஒருநாள் இரட்சிக்கப்பட்டேன், என்றோ ஒருநாள் மனந்திரும்பினேன், என்றோ ஒருநாள் அபிஷேகம் பண்ணப்பட்டேன் என ஜீவிப்போமானால் நிச்சயம் பின்மாற்றத்தில் ஜீவிக்கிறோம். ஒவ்வொரு நாளும் எங்களை நாங்களே ஆராய்ந்து பாவத்தை அறிக்கையிட்டு மனந்திரும்பி உணர்வடைந்து வாழுவோமானால், பின்மாற்றத்திலிருந்து தப்பிக்கலாம்.

இஸ்ரவேல் மக்கள் சாமுவேல் தீர்க்கதரிசியிடம் வந்து நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள். 1. சாமுவேலுக்கு வயசாகிவிட்டது.

2. சாமுவேலின் பிள்ளைகள் நியாயாதிபதியாய் இருப்பதற்கு தகுதியற்றவர்கள்.

3. அண்டைய நாடுகளை ராஜாக்கள் ஆளுகை செய்தார்கள். இம்மூன்று புறக்காரணிகளாலேயே மக்கள் ராஜா தேவையென சாமுவேலிடம் வலியுறுத்தினார்கள். இதுவரை பாதுகாத்து, போஷித்து, வழிநடத்திவந்த கர்த்தரை மறந்து, உலகப்பிரகாரமாக சிந்தித்து மாம்ஷீக முடிவை சாமுவேலிடம் திணித்தார்கள். இந்தக் கோரிக்கை சாமுவேலுக்கு சரியாகப்படவில்லை, ஆகவே இது குறித்து கர்த்தரிடம் ஜெபித்தார். இஸ்ரவேல் மக்கள் சாமுவேலிடம் ஆலோசனை கேட்டிருந்தால் நியாயமானது. மாறாக தங்களே முடிவை தீர்மானித்துவிட்டு அதை நிறைவேற்றும்படி கேட்பதானது, சாமுவேலுக்கும் கர்த்தருக்கும் ஆணையிவதற்கு ஒப்பானது. (இன்றும் அநேகரின் ஜெபம் இவ்வண்ணமாகவே உள்ளது.)

கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள். (1சாமு 8:7) பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் ஒரு தகப்பன் எவ்வாறு மனவேதனைப்படுவாரோ, அவ்வாறே சர்வவல்லமையுள்ள தேவன் மனவேதனையோடு சாமுவேலோடு பேசினார். கீழ்படிவில்லா தனது பிள்ளைகள், மற்றும் ஜனங்களைக் குறித்து சாமுவேலும் மனவருத்தப்பட்டிருக்க கூடும். அவரையும் கர்த்தர் தேற்றி ராஜாவின் மூலம் வரும் நன்மை தீமைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வைத்தார். ராஜாக்கள் மக்களை எவ்வளவு வருத்துவார்கள் என சாமுவேல் எடுத்துச் சொன்ன போதும், ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்: அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டுமென்று அடம்பிடித்தார்கள். கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்.

இதுவரை இஸ்ரவேல் மக்களை தேவதாசர்களால், ஆசாரியர்களால், நியயாதிபதிகளால், தீர்க்கதரிசிகளால் வழிநடத்தப்பட்ட நிலைமாறி, முதல் முதல் இராஜாவின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்படப்போகிறார்கள். ராஜாவின் தெரிவுக்காக கோத்திரத்தலைவர்களிடமிருந்து வாக்கெடுப்பு நடத்தவில்லை, சீட்டுப் போடவில்லை, மாறாக கர்த்தரே ஒரு தாழ்மையுள்ள மனிதனைத் தெரிவு செய்கிறார்.

அத்தேர்வுக்கான வழிநடத்தல் வித்தியாசமானது. 

பென்யமீன் கோத்திரத்தாரில் கீஸ் என்னும் பேருள்ள மனுஷன் இருந்தார். அவருடைய கழுதைகள் காணாமல் போய்விட்டன. கீஸ் தன் குமாரனாகிய சவுலை நோக்கி, நீ வேலைக்காரரில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு, கழுதைகளைத் தேட, புறப்பட்டுப்போ என்றார். 

1. மறு பேச்சில்லாமல் சவுலும் புறப்பட்டுப் போனார். சவுல் பொறுப்புள்ள பிள்ளையாக வாழ்ந்தபடியால், தகப்பன் இப்பொறுப்பை கொடுத்திருப்பார். சவுலும் வேலைக்காறனுமாய் மூன்று நாட்களாக தேடியலைந்தும் கழுதைகள் அகப்படவில்லை. அப்பொழுது சவுல் தனது தகப்பனார் கழுதையைக் குறித்த கவலையை விட்டு தங்களைக் குறித்துக் கவலைப்படக் கூடும் எனச் சொன்னார்.

அதற்கு வேலைக்காறன் இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார், அவர் பெரியவர், அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும், அங்கே போவோம், ஒரு வேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான்.

2. அதற்கு சவுல் தேவமனுஷனுக்கு கொடுப்பதற்க்கு கையில் காணிக்கை ஒன்றுமே இல்லையே என ஆதங்கப்பட்டார். (1சாமு 9:7) சவுல் தேவமனுசரின் வார்த்தையை நம்புபவராக இருந்ததோடு, அவர்களைக் கனப்படுத்துபவராயுமிருந்தார்.

சவுல் சாமுவேலைச் சந்தித்த போது, சாமுவேல் கழுதைகள் கிடைக்கப்பெற்றதாக அறிவித்து, இஸ்ரவேலின் சகல மக்களும் விருப்பத்துக்குரியவராக உன்னையும் உன் வீட்டரையும் நாடுகிறார்கள் எனச் சொன்னார்.

3. அதற்கு சவுல், இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் தான் என்பதோடு, தன் குடும்பம் அற்பமானதேனச் சொன்னார். (1சாமு 9:21)

இப்படிச் சொன்னதற்கு இரண்டு காரணங்களாயிருக்கலாம். 1) யாக்கோபின் பிள்ளைகளில், கடைசி, பன்னிரெண்டாவது பிள்ளையே பென்யமீனாகும்.

கடைசி கோத்திரம் என்ற தாழ்மையில் சொல்லியிருக்கலாம். 2) நியாயாதிபதிகள் 19 ம் அதிகாரத்தில், லேவியனின் மனைவியை பென்யமீன் புத்திரர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதினால், அவர்களை ஏனைய கோத்திரத்தார் ஒதுக்கி வைத்தார்கள். இதனால், தன்னை ஒருத்தரும் அங்கீகரிக்கப் போவதில்லை என்று கருதி செல்லியிருக்கலாம்.

4. சவுல் தீர்க்கதரிசனம் சொன்னார். (1சாமு 10:10) அவர் மேல் ஆவியானவர் இருந்தார்.

5. சவுலின் சிறியதகப்பன், சவுலிடம் சாமுவேல் உங்களுக்குச் சொன்னது என்ன? அதைச் சொல் என்றான். அதற்கு சவுல் கழுதைகள் அகப்பட்டதை உறுதியாக சொன்னார் என்றான். தன்னை அபிஷேகம் பண்ணியதைக் குறித்தோ, ராஜாவாக்க போகிறார் என்பதையோ தெரிவிக்கவில்லை. (1சாமு 10:14-16) இந்த இடத்தில் கூட சவுல் உண்மையை மறைத்து சொல்லி மனத்தாழ்மையை வெளிப்படுத்தினார். 

சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களை மிஸ்பாவுக்கு அழைத்து, அவர்கள் விருப்பப்படி ராஜாவை தெரிவு செய்ய சீட்டுப் போட்டார்கள். சீட்டு பென்யமீன் கோத்திரத்தின் சவுல் பெயருக்கு விழுந்தது. கர்த்தர் ஏற்கனவே சவுலைத் தெரிவு செய்து விட்டார். மக்களின் அங்கீகாரத்துக்காகவே இந்த நடைமுறையைக் கையாண்டார். ராஜாவாக்க சவுலைத் தேடிய போது.

6. சவுல் தளவாடங்களிருக்கிற இடத்திலே ஒளித்துக்கொண்டார். (1சாமு 10:22) சவுல் ராஜாவாக தகுதியற்றவன் என்று கருதியே ஒளித்துக் கொண்டார். கனமான பதவிக்கு வருவதற்க்கு சவுல் ஆசைப்படவில்லை, அதிலிருந்து விடுபடவே விரும்பினார்.

7. பேலியாளின் மக்கள்: இவனா நம்மை ரட்சிக்கப்போகிறவன் என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கை கொண்டு வராமல் அவனை அசட்டைபண்ணினார்கள்; அவனோ காதுகேளாதவன் போல இருந்தான். (1சாமு 10:27) சவுலைப் புறக்கணித்து, அசட்டை பண்ணிய போதும், கோபப்படாமல் நிதானமாக செயலாற்றினார். 

8. ராஜாவாக அங்கீகாரம் கிடைத்த பின்னரும் சவுல் வயலுக்கு சென்று வேலைபார்த்தார். (1சாமு 11:5) ஆரம்பத்தில் அதிகார ஆசையற்றவராய் சவுலிருந்தார். சவுல் முதல் யுத்தத்தில் வெற்றி பெற்றார். (1சாமு 11:11) சவுலை அற்பமாக எண்ணியவர்களை மக்கள் கொலைசெய்ய முயன்றனர்.

9. அதற்குச் சவுல்: இன்றையதினம் ஒருவரும் கொல்லப்படலாகாது; இன்று கர்த்தர் இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அருளினார் என்றான். யுத்தத்தின் முதல் வெற்றியில் சவுல் பெருமையடையவில்லை. வெற்றியை கர்த்தரே தந்தார் என உண்மையைச் சொல்லி அவரை மகிமைப்படுத்தினார்.

இதுவரையும் சவுல் தாழ்மையுள்ளவனாக நிதானமாக செயலாற்றியதை மேலே பார்த்தோம். இப்பொழுது சவுல் ராஜாவாகி ஓராண்டு கடந்து விட்டது. இதற்கு பின்னரே சவுலின் பின்மாற்றம் தொடங்குகிறது. இதுவரையும் இருளில் இருந்து ஒளியை நோக்கி பயணித்தவர், இனி ஒளியில் இருந்து இருளை நோக்கி பயணிக்கப் போகிறார். தொடர்ந்து வீழ்ச்சியின் நேர் கோட்டில் பயணித்த சவுலின் வாழ்வை ஒரு கதையாக அல்லாமல் நமக்கு ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் தொடர்ந்து தியானிப்போமாக.

1. யோனத்தான் பெலிஸ்தரோடு யுத்தம் செய்து வெற்றியடைந்தார். (1சாமு 13:3)

சவுல் எபிரெயரெல்லாரும் இவ்வெற்றிச் செய்தியை அறிந்து கொள்ள வேண்டும் என தேசமெங்கும் எக்காளம் ஊதுவித்தான். யோனத்தனின் வெற்றியை சவுல் உரிமை கொண்டாடும் அளவுக்கு பிரபல்யமாக வேண்டும் என்ற புகழ் ஆசை அவனை ஆட்கொண்டது. இது போன்ற சம்பவம் இன்றைய சபைகளில் காணக்கூடியதாய் இருக்கிறது. அதை நுட்பமாக பார்த்தால் புரியும். சபை மக்களால் பணம் திரட்டி சாதிக்கப்படும் காரியங்களுக்கு, சபை மேய்ப்பர் மட்டும் உரிமை கொண்டாடுவார்.

சபையில் கர்த்தரால் நடத்தப்படும் கிரியைகளை சுயவிளம்பரத்துக்காக ஊடகங்களூடாக விளம்பரப்படுத்தி, சுயமேன்மையில் சுகம் கண்பார்கள்.

2. சாமுவேலுக்கு காத்திராமல் பொறுமையிழந்து, அவசரப்பட்டு சர்வாங்க, சமாதான பலிகளை சவுல் செலுத்தினார். (1 சாமு 13:9) சாமுவேல் சவுலிடம் வந்து தவறைச் சுட்டிக் காட்டிய போதும் அவன் மனந்திரும்பி மன்னிப்பு கேட்கவில்லை. இப்பொழுது உயர்ந்த அந்தஸ்தில் ராஜாவாய் இருப்பதால் மன்னிப்பு கேட்பது அவருக்கு இழுக்காக தெரிந்திருக்க கூடும். இன்றும் ஊழியம் செய்யும் பலர் ஊழியக்காறார் என்ற அந்தஸ்து, அங்கீகாரம் கிடைத்ததும், தாழ்மையற்றவர்களாக மாறிவிடுகிறார்கள். சாமுவேல் சவுலின் ராஜ்ஜியம் நிலைநிற்காதென எச்சரித்தார்.

3. அமலெக்கியரோடான யுத்தத்தில் கைது செய்யப்பட்ட அந்நாட்டு ராஜாவையும் ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போடமனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான மட்டுமே சவுல் அழித்தார். கர்த்தர் அனைத்தையும் அழிக்கும்படி சொல்லியிருந்தார். சாமுவேலிடம் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டதாக சவுல் பொய் சொன்னார். இப்பொழுது சவுலுக்கு பொருளாசை கொண்ட மனிதனாக மாறினார். கர்த்தரின் கட்டளைக்கு கீழ்படியாததோடு, துணிகரமாக பொய்யும் சொன்னர். உண்மை சாமுவேலூடாக வெளிப்பட்டதும், தன்னுடைய தவறை பிறர்மீது சாட்டினார். (1சாமு 15:9-17)

நமக்கு கிடைக்கும் காணிக்கைகளில் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும். தவறெனக் கர்த்தர் சுட்டிக்காட்டினால் அதை ஏற்றுக்கொண்டு, மனம் திரும்பி மன்னிப்பு கேட்க வேண்டும். சவுலுக்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். சாமுவேல் இரவிரவாய் ஜெபித்தார். இச்சம்பவத்திற்கு பின் சவுலை சாமுவேல் சந்திக்கவில்லை. மிகுதி 38 ஆண்டுகளும் தேவனில்லாமல், தேவமனுசனின் ஆலோசனையில்லாமல் ராஜ்ஜியம் செய்தார் சவுல். சவுல் மனந்திரும்பவே மாட்டார் என்ற முடிவுக்கு கர்த்தர் வந்துவிட்டதாக தெரிகிறது. 

4. சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டினான்.  (1சாமு 15:12)

கர்த்தர் கொடுத்த வெற்றியை, அவருடைய நாம மகிமைக்கு, அவருடைய பெயருக்கு தூண் நிறுத்தியிருந்தால், கர்த்தர் சந்தோஷப்பட்டிருப்பார். சவுல் தன்னுடைய பெயரில் தூணை நிறுத்தி சுயமகிமையை நாடினார். இன்றும் அநேக ஊழியர்கள், தேவப்பிள்ளைகள் இந்த சோதனைக்கு பலியாகிவிடுகிறார்கள்.

5. தாவீதுக்கு உதவியதை காரணம் காட்டி ஆசாரியரை கொலை செய்ய சவுல் கட்டளையிட்டார். (1சாமு 22:18) அன்றைய தினம் ஒன்று இரண்டு பேரல்ல எண்பத்தைந்து பேர் கொலை செய்யப்பட்டனர். தேவ பயமற்ற மனிதனாய் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட தேவப்பிள்ளைகள் மீது துணிகரமாக கைவைத்தார் சவுல். தலைக்கனம் மிக்க மனிதனாக மாறிய சவுலைப் போலவே, இன்றும் ஆவிக்குரிய தலைவர்கள் மற்றும் அதிகாரங்களில் இருக்கும் விசுவாசிகள் செயலாற்றுகிறார்கள். இன்று சரீரப்பிரகாரமாக கொலைசெய்வதில்லை, பேச்சால், செயலால், சிந்தையால் சகோதர்களை, ஊழியக்காறரை கொலை செய்கிறோம். 

6. அஞ்சனம் பார்க்கும் ஸ்திரியை பார்க்கச் சென்றார் சவுல். (1சாமு 28:8)

சவுல் தனக்கேற்பட்ட வீழ்ச்சிக்கு என்ன காரணம், அதற்கு என்ன பரிகாரம் என ஆராயாமல். ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தரிடம் போகாமல். அசுத்த ஆவிகளிடம் உறவு வைத்திருப்பவர்களை நோக்கிச் சென்றதானது, பிசாசின் ஆளுகையின் கீழ் சவுல் சென்றுவிட்டதை எடுத்துக் காட்டுகிறது. விசுவாசத்தில் உறுதியாய் இருத்தல் அவசியமானது. ஒருசில தேவப்பிள்ளைகளும் மனந்திரும்பிய பிற்பாடும் நாட்பார்த்தல், குறிசொல்லும் மனிதர்களை தேடிப் போவதை பார்க்கிறோம். இதை கர்த்தர் ஆரம்பத்திலிருந்தே அருவருக்கிறார், வெறுக்கிறார்.

7. தாவீதை பலதடவை கொலை செய்ய முயற்சித்தார் சவுல். தாவீதோ திருப்பித்தாக்காது, ஓடித்தப்பினார். சவுல் தனது ஆட்சிக்காலத்தின் பெரும்பகுதி நேரத்தை தாவீதை கொலை செய்வதிலேயே செலவிட்டார். தாவீதை வேட்டையாட ஓயாமல் துரத்தினார். சவுலை கோலியாத்திடமிருந்து காப்பாற்றியவர் தாவீது. சவுலுக்குள் இருந்த பொல்லாத ஆவியை துரத்திவிடுவதற்காக, தாவீது சுரமண்டலத்தை வாசித்து அவனுக்கு விடுதலை கொடுத்தார். கர்த்தர் தாவீதை இராஜாவாக்க போகிறார் என்றறிந்தும் அவரைக் கொல்ல துணிந்து சொன்றார் சவுல். சவுல் நன்றியுணர்வற்றவராய், அதிகார வெறிபிடித்தவராய், தலைக்கனம் கொண்டவராய், கோபம், எரிச்சல், பெறாமை, அகத்தை, இருதய மேட்டிமை என்ற தீய சுபாவங்களை உடைய மனிதனாக கடைசிவரை வாழ்ந்து, முடிவில் தற்கொலை செய்து மரணித்தார்.

பிரியமானவர்களே!

தேவனுக்கு பிரியமாக தாழ்மையாக தொடங்கிய சவுலின் ஆரம்பம், ராஜாவகிய பிற்பாடு அந்த அதிகாரத்தை மையப்படுத்தி அதிகார வெறிபிடித்து, தற்புகழ்ச்சி, பெருமை, பொருளாசை போன்ற உலக இன்பங்களுக்கு அடிபணிந்து பரிதாபமாக மாண்டுபோனார். 

தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட, அபிஷேகம் பண்ணப்பட்ட முதல் ராஜா தொடர்ந்து தாழ்மையாக இருந்திருப்பாராயின், அந்த அபிஷேகம் கடைசிவரை அவரில் தங்கியிருந்திருக்கும். கர்த்தருக்கு கீழ்படியாமல் அவரது சொந்த புத்தியில் நடந்து அபிஷேகத்தை இழந்தார். 

முப்பத்தியெட்டு ஆண்டுகள் கர்த்தருக்கு பிரியமில்லாமல், அவருடைய உறவில்லாமல் வாழ்ந்த சவுலை, மக்கள் ராஜா என்றழைத்தார்கள், அவருக்கு படையணியிருந்தது, பணிவிடைக்காறர் இருந்தார்கள், அரண்மனை இருந்தது, ராஜா என்ற அந்தஸ்தும் இருந்தது. ஆனால் அவரோடு கர்த்தரில்லை. காரணம் அவர் கர்த்தருடைய இருதயத்துக்கேற்றவராயிருக்கவில்லை.

சவுல் ராஜாவாகமல் இருந்திருந்தால் ஒருவேளை கர்த்தருக்கு பிரியமாயிருந்திருக்க கூடும். கர்த்தருக்கு வேலைக்காறராய், பொறுப்பில் இருக்கும் சகோதரரே! 

சவுலின் பின்மாற்ற ஜீவியம் போல நமது ஆவிக்குரிய ஜீவியம் தடம்புரளாது உஷாராயிருப்போம்.

தாவீதுக்களை துரத்தாது, கொலை செய்ய முயற்சிக்காது, தேவ சித்தத்துக்கு உதவிபுரிபவர்களாக இருப்போம். இப்படிப்பட்ட சோதனைக்கு தப்பி, ஒளியானவரை நோக்கி ஓடுவோம், அவரோடு நெருங்கி ஜீவிப்போமாக. ஆமென்.

இயேசுக்கிறிஸ்துவே எங்களுக்கு ராஜா, 

அவரே எங்களை ஆளுகை செய்யட்டும். ஆமென். 

மனமேட்டிமையுள்ளவவெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன் கையோடே கைகோர்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான். நீதிமொழிகள் 16:5

நன்றி கர்த்தாவே.

த.பிரபா.

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved