ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

பேசும் தெய்வம்.


வார்த்தையாகிய தேவன், பேரண்டத்தையும் உலகத்தையும் உண்டாக்கிய பின் நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக என தங்களுக்குள் பேசி மனுஷனை உண்டாக்கினார்கள். நம்முடைய ஆண்டவர் ஓரவஞ்சகம் பண்ணுபவர் அல்ல, பாகுபாடு, பாரபட்சம் காட்டுபவருமல்ல. 

தன்னைப் போல் தன்னுடைய பிள்ளைகள் இருக்க வேண்டும் என ஆசைப்படுபவர். அதற்கு ஏற்றால் போலவே, மனுசனை தேவசாயலில் உண்டாக்கி, தன்னோடு உறவாட, ஐக்கியம் கொள்ள, அவன் பேச வேண்டும் என காத்திருக்கிறார். 

சராசரி மனிதைப் போல் நம்மோடு பேசுகிறார். நாம் பேசுவதை அல்லது கேட்பதை அறிந்து, அதற்கு பதில் தருகிறார். தேவன் ஆவியாய் இருப்பதால் அவரை பார்க்க முடியாது, அவரைப் பார்ப்பதற்கு நமக்கு தகுதியும் இல்லை. 

ஆனால் அவர் எங்கள் ஒவ்வொருத்தரோடும் அனுதினமும் பேசுகிறார். 

ஆதாமோடு, காயீனோடு, ஆபேலோடு, ஏனோக்கோடு, நோவாவோடு, ஆபிரகாமோடு, யோபுவோடு, மோசேயோடென தேவன் பேசியவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். 

பேசுவதாலேயே ஒருமனிதனின் உள்ளக்கிடக்கையை, அவனின் உணர்ச்சியை, எண்ணங்களை, தேவைகளை வெளிப்படுத்தக் கூடியதாய் உள்ளது. 

ஒருத்தரோடு ஒருத்தர் பேசாதிருந்தால் மூச்சு நின்று போய்விடும் என்று சொல்லுமளவுக்கு பேச்சு அவசியமானதொன்றாயிருக்கிறது. 

தொலை தூரம் போன கணவன் எப்பொழுது தொலைபேசியில் உரையாடுவார் என காத்திருக்கும் மனைவி. வெளியில் சென்ற மகன் உரிய நேரத்துக்கு வரவில்லை என்றால், அழைப்பெடுத்து மகனே எங்கு நிற்கிறாய் என தவிப்போடு கேட்கும் தாய். உரிய நேரத்தில் பேசவில்லை என்ற காரணமே, அநேக கதலர்களுக்குள் சண்டையை உருவாக்குகிறது. பேசுவதற்கு ஒருதரும் இல்லாத பட்சத்தில், தங்களோடு தாங்கள் பேசிக்கொள்பவர்களுமுண்டு. 

மனிதனோடு மனிதன் பேசுவதொன்றும் பெரிய காரியமல்ல. ஆனால் அதரிசனமான தெய்வம், அனைத்தையும் உண்டாக்கியவர், ஆரம்பமும் முடிவுமற்றவர், சர்வவல்லவர், உன்னதமானவர் அற்பமான பாவியான மனுஷனோடு பேசுவதே பெரிய காரியம். மனுஷனை தனது பிள்ளையாய் நேசிப்பதாலும், தன்னோடு தனது பிள்ளைகள் அப்பா என உரிமை பாராட்டி உறவாடி வாளவேண்டும் என்பதே அவரின் பேரவா. சிறுவர் முதல் பெரியோர் வரை, வயது வேறுபாடின்றி எல்லோரோடும் ஆசையாக பேசுபவர் கர்த்தர். அவ்வாறு பேசிய ஒருநபரின் உண்மைச் சம்பவத்தை வேதத்திலிருந்து தியானிக்கலாமா?

கர்த்தரின் அற்புதத்தால் பிறந்த பிள்ளை சாமுவேல். அன்னாளின் மூத்தமகன் சாமுவேல். அவள் மனங்கசந்து, அழுது, ஜெபித்து, பெருத்தனை செய்து பெற்ற பிள்ளை சாமுவேல். அன்னாள் கர்த்தரோடு பேசினாள், கர்த்தாவே எனக்கொரு ஆண்மகனைத் தாரும், அதை உமது பணிக்கே தந்துவிடுவேனென்றாள். 

லேவி கோத்திரத்தைச் சேர்ந்த அன்னாள், ஆண்பிள்ளையை பெற்றால் அப்பிள்ளையை ஆலயத்தில் தொண்டாற்ற விடலாம் என்ற நல்ல நோக்கத்தில் உண்மையாக பொருத்தனை பண்ணினாள். 

ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தர் ஜெபங்களை கேட்கிறார் அதற்கு பதில்தந்து மனங்களை ஆற்றுகிறார். அன்னாளுக்குள் இருந்த விசுவாசம் என்னவென்றால், என் தேவன் உயிரோடு இருக்கிறார், அவர் தன் ஜெபத்தைக் கேட்பார் என்பதாகும். அன்னாள் மனிதர்களையோ, வைத்தியரையோ, அல்லது விக்கிரகங்களையோ, அன்னிய தெய்வங்களையோ, மந்திரவாதிகளையோ நாடிப் போகவில்லை. தன்னுடைய தேவையை கர்த்தரால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்றென்னியபடியாலேயே கர்த்தரைத் தேடி ஆலயம் வந்து தனது தேவையை கேட்டாள்.

பொருத்தனை பண்ணியபடி அன்னாள் சாமுவேலை ஆலயத்தில் கொண்டுவந்து விட்டாள். ஆலயம் என்றதும் இன்றிருப்பது போல் சீமெந்து கட்டடம் அல்ல, ஆசாரிப்பு கூடாரத்தை உள்ளடக்கிய ஒரு கூடார மறைவிலினிலேயே ஆசாரியனாகிய ஏலியும் அவர் பிள்ளைகளும் வசித்திருப்பார்கள். சாமுவேலுக்கு குறைந்தது மூன்று வயதுள்ளவனாய் இருந்திருக்கலாம், சரியாக பேசவோ, சுயமாக சாப்பிடவோ முடியாத நிலையில் பிள்ளை சாமுவேல் இருந்திருக்ககூடும். ஏலியின் பிள்ளைகள் தேவனுக்கு பிரியமற்று வாழ்ந்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அன்னாள் தேவனுக்கு சொன்னபடி, வாக்கு மாறாதவளாய் பிள்ளையை ஆலயத்தில் கொண்டுவந்து விட்டாள். அன்னாளும் அழுதிருப்பாள், சாமுவேலும் அழுதிருப்பார். (நான் நம்புகிறேன் கர்த்தரும் மனவேதனைப்பட்டிருப்பார்). இவற்றையெல்லாம் கண்ணோக்கிபார்த்துக் கொண்டிருந்த கர்த்தர் எப்பொழுது சாமுவேலுக்கு புத்தி வரும் அவரோடு பேசி, ஆற்றி, தனது அன்பை வெளிப்படுத்தவெனக்காத்திருந்தார். 

இப்பொழுது சாமுவேலுக்கு பத்துவயது தாண்டியிருக்கும் என நினைக்கிறேன். ஒரு இரவு சிறுவன் சாமுவேல் உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,

ஏலியினிடத்தில் ஓடி, இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்; அவன் போய்ப்படுத்துக்கொண்டான். மறுபடியும் கர்த்தர் சாமுவேலே என்று கூப்பிட்டார்; அப்பொழுது சாமுவேல் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய்: இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை. திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான். சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான்; கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை. கர்த்தர் மறுபடியும் மூன்றாம்விசை: சாமுவேலே என்று கூப்பிட்டார். அவன் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய், இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரோ என்றான். அப்பொழுது கர்த்தர் பிள்ளையாண்டானைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து, சாமுவேலை நோக்கி: நீ போய்ப்படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்; சாமுவேல் போய், தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டான். அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான். (1 சாமுவேல் 3:3-10)

இந்த சந்தர்ப்பத்தில் ஆசாரியனாகிய ஏலியின் கண்கள் இருளடைந்திருந்தது. வழமையாக உதவிக்கு சாமுவேலை ஏலியழைப்பார். அது போலவே இன்றும் அவசர உதவிக்காக ஏலியழைக்கிறார் என நினைத்து, சாமுவேல் தூக்கத்திலிருந்து விழித்து ஏலியண்டை போய் இதோ வந்திட்டேன், ஏன் கூப்பிட்டீங்கள்? என்ன உதவி வேண்டும் எனக் கேட்கிறார். அதற்கு ஏலி நான் அழைக்கவில்லை நீ போய் தூங்கு என்றார். ஒருதடவையல்ல இரண்டுதடவையல்ல மூன்று தடவைகள் ஆண்டவர் சாமுவேலே என அழைத்தார். மூன்று தடவையும் சாமுவேல் ஏலிதான் கூப்பிடுகிறார் என நினைத்து அவரிடம் என்னைக் கூப்பிட்டீரோ எனக் கேட்டுப் போவதை வாசிக்கிறோம். மூன்றாவது தடவை ஏலி கர்த்தர் தான் கூப்பிடுகிறார் என்பதை உணர்ந்து, அடுத்தமுறை கூப்பிட்டால் கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன் என்று சொல்லும்படி கற்றுக்கொடுக்கிறார். இப்பொழுது நான்காவது தடவையாக கர்த்தர் சாமுவேலே எனக் கூப்பிட்டார். பதிலுக்கு சாமுவேல் சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்றார். 

சாமுவேலின் இடத்தில் நானிருந்திருப்பேனாகில் முறுமுறுத்திருப்பேன். பகல் முழுவதும் வேலை செய்து கொடுத்தது போதாதென்று, இரவிலும் கூப்பிடுகிறார் கிழவர் என்று சொல்லியிருப்பேன். அவரது பிள்ளைகளைக் கூப்பிடவேண்டியது தானேயென எனக்குள் முனுமுனுத்திருப்பேன். கூப்பிடுவது கேட்டதும் ஆழ்ந்த தூக்கம் போல் நடித்திருப்பேன். தொடர்ந்து கூப்பிடுவதால், பதிலுக்கு படுத்திருந்தே என்ன வேண்டும் என எரிச்சலோடு கேட்டிருப்பேன். 

மேல் சொல்லப்பட்டது போல் எதையும் சாமுவேல் பேசவுமில்லை, செய்யவுமில்லை

மிகவும் தாழ்மையாக தாத்தாவுக்கு என்னாச்சோ, ஏதாச்சோ எனக் கருசனையோடு பதட்டத்தோடு ஓடிச் சென்று விசாரிக்கின்றான்.

ஏலியும் சாமுவேலிடம் நானழைக்கவில்லை என எரிந்து விழவுமில்லை, திட்டவுமில்லை. மாறாக சூழ்நிலையை அறிந்து, சரியாக சிறுவன் சாமுவேலை கர்த்தரண்டை வழிநடத்தினார். ஏலி தான் ஆசாரியன் என்ற தலைக்கனத்தோடு செயல்படவில்லை. சாமுவேலை அற்பமாக எண்ணவுமில்லை. 

வயது முதிர்ச்சியான அனுபவமிக்க ஆசாரியனாகிய ஏலியிடம் பேசாமல் சிறுவன் சாமுவேலை நான்கு தடவை அழைத்து கர்த்தர் பேசுவதற்கான காரணம் தான் என்ன? 

சிறுபிள்ளையின் வயதுக்குரிய காரியங்களை சின்ன சாமுவேல் செய்திருக்க மாட்டார் என்றே நான் நம்புகிறேன். குறும்புத்தனம் செய்து சகோதரங்களோடு ஆடிப்பாடி சண்டைபிடித்து விளையாடிய அனுபம் சாமுவேலுக்கிருந்திருக்காது. 

சிறுவயதிலேயே பெற்றோரை விட்டு அநாதையாக வேலைக்காறனாக ஆசாரிப்பு கூடாரத்தில் வாழ்ந்த சாமுவேலின் கீழ்படிவுள்ள உண்மையான உழைப்பை, உத்தமமான இருதயத்தை அறிந்த கர்த்தர், சாமுவேலுக்கு தான் தந்தையாக, தாயாக அன்பு செலுத்தி கரிசனைப்பட கூட இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தவே அவரோடு பேசினார். இதுவே முதன்மையான நோக்கமாகும். 

கடின பாதையை கடந்து சென்ற சாமுவேலுக்கு கர்த்தர் பேசியதானது மிகுந்த சந்தோசத்தையும் மன ஆறுதலையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கும். சாமுவேல் முதிர் வயதாகி மரிக்கும் வரை கர்த்தர் தொடர்ந்து பேசியதை வேதத்தில் வாசிக்கிறோம்.

சில இடங்களில் உடனுக்குடன் பதில் கொடுத்தார். 

1) 1 சாமு 7:9 வேண்டுதலுக்கு உடனடியாக பதில் கிடைத்தது.

2) 1 சாமு 8:7 கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்

என்றார்.

3) 1 சாமு 8:21 நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்.

4) 1 சாமு 9: 15, 16, 17 கர்த்தர் சாமுவேல் காது கேட்க சவுலைக் குறித்து பேசினார்.

5) 1 சாமு 10:22 சவுல் இருப்பிடத்தை சொன்ன கர்த்தர்.

6) 1 சாமு 12:18 இடிமுழக்கத்துக்கும் மழைக்கும் விண்ணப்பம் பண்ணினார் சாமுவேல் உடனடியாக பதில் கொடுத்தார் கர்த்தர்.

7) 1 சாமு 15:10, 11 சவுலை ராஜாவாக்கியதற்காக மனஸ்தாபப்படுவதாக சாமுவேலிடம் கர்த்தர் சொன்னார்.

8) 1 சாமு 16:1-3 அடுத்த ராஜாவை ஆயர்த்தம் பண்ணும்படி கட்டளையிட்டார்.

9) 1 சாமு 16:7 கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.

10) 1 சாமு 16:12 தாவீதை அபிஷேகம் பண்ணச் சொன்னார்.

1 சாமு 25:1ல் சாமுவேல் மரித்துப் போவதை வாசிக்கலாம்.

இதை வாசிக்கும் நீங்கள் சாமுவேல் தீர்க்கதரிசியாகவும் ஆசாரியராயும் இருந்தபடியால். கர்த்தர் அவரோடு பேசுவதொல்லாம் சாதாரணமானதே என்று சொல்லக் கூடும். இக் கருத்தில் உண்மையிருந்தாலும். 

சாமுவேல் சிறுவனாய் இருந்த பொழுது ஆசாரியனாகவோ தீர்க்கதரிசியாகவோ இல்லை. முதல் முதல் சாமுவேலோடு பேசிய பொழுது, ஏலி குடும்பத்துக்கு நேர இருந்த தண்டனையை ஆண்டவர் சொன்னார். அது ஒரு காட்டமான செய்தியாகும். 

தற்புகழ்ச்சியை விரும்பாத சாமுவேல். 1 சாமுவேல் புத்தகத்தின் அதிக பகுதிகளை சாமுவேல் எழுதியபடியால், தன்னைக் குறித்தோ, அல்லது அவர்களிருவருக்கிடையில் நடந்த முழு சம்பாசனையும் விபரிக்காமல் தவித்திருக்கலாம்.

இரண்டு நண்பர்கள் மனம்விட்டுப் பேசுவது போலவே சாமுவேலும் கர்த்தரும் பல தடவை பேசினார்கள். மக்கள் ராஜா வேண்டும் எனக் கேட்ட பொழுது, சாமுவேலுக்கு அவர்களின் கோரிக்கை சரியாகப்படவில்லை, ஆகவே அவர் கர்த்தரை நோக்கி ஜெபித்தார். அதற்கு கர்த்தர் சாமுவேலே உன்னையொன்றும் மக்கள் புறக்கணிக்கவில்லை என்னைத்தான் புறக்கணித்தார்கள் அவர்கள் சொல்பட நடப்பா என்ற தொனியில் பேசினார். சவுலை ராஜாவாக்கியதற்காக கர்த்தர் மனஸ்தாபப்படுவதாக விரக்தியில் சொன்ன போது, கர்த்தர் மனஸ்தாபப்படுமளவுக்கு சவுல் நடந்துவிட்டானே என்ற மனவேதனையில் இரவிரவாய் சவுலுக்காக மன்றாடி பரிந்து பேசி ஜெபித்தார் சாமுவேல். 

இவ்வாறு கர்த்தர் சாமுவேலோடு நெருங்கி பேசுவதற்கு இன்னும் சில காரணங்கள் இருந்தன அவற்றை 1சாமுவேல் 12 ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். 

சவுலை ராஜாவாக்கிய பின்னர் இஸ்ரவேல் ஜனங்களுக்கான தனது பணி நிறைவு செய்யப்பட்டு விட்டது என்ற நிலையிலிருந்து, ஜனங்கள் மத்தியில் சாமுவேல் உரையாற்றினார். அவ்வுரையில் சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து, கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண்செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான்.

அதற்கு ஜனங்கள்: நீர் எங்களுக்கு அநியாயஞ் செய்யவும் இல்லை; எங்களுக்கு இடுக்கண் செய்யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள்.

பிரியமானவர்களே!

சாமுவேல் கர்த்தரைச் சார்ந்து எளிமையாக வாழ்ந்தவர். சவுல் கழுதையை தொலைத்துவிட்டு சாமுவேலைத் தேடிவந்து, அவரிடமே சாமுவேலின் வீடு எங்கே என வினாவினார். சவுலால் சாமுவேலை தீர்க்கதரிசி என அடையாளம் கண்டு கொள்ளாத அளவுக்கு மிகவும் எளிமையாக தோற்றமளித்தார். விலைஉயர்ந்த உடையையோ, பகட்டுக்கு இரண்டு உதவிக்காரரோ இல்லாமல் சாதாரணமாய் ஜீவித்திருப்பார். அன்றைய நாட்களில் கழுதையின் உதவியோடு பயணம் செய்வார்கள். சாமுவேலோ தாண் முதல் பெயெர்செபா மட்டும் அறியப்பட்ட நபர். முழு இஸ்ரவேலுக்கும் பிரபல்யமான நபர், ஒருவருடைய கழுதையையும் இச்சிக்காது, நாடு பூராய் கால்நடையாய் நடந்து திரிந்தார். அவரிடம் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தனது பணிக்கான ஊதியத்தை, கனத்தை, மகிமையை எதிர்பார்க்காது, கர்த்தருக்கு உண்மையான பணிவிடைக்காறனாய் ஜீவித்தார் சாமுவேல். ஆகவே தான் கர்த்தர் சாமுவேலோடு பேசி உறவாடினார். 

கர்த்தர் பேச வேண்டும், உறவாட வேண்டும், அவர் எங்களை வழிநடத்த வேண்டும் என ஆசைப்படும் தேவப்பிள்ளையே! ஊழியக்காறனே!

சாமுவேலின் முன்மாதிரியான வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்டதை நாமும் நம் வாழ்வில் அப்பியாசப்படுத்துவோமா?   

கர்த்தர் எங்களது பெயரைச் சொல்லி கூப்பிடுவாராக. ஆமென்

கர்த்தர் நல்ல நண்பனைப் போல எங்களோடு பேசுவாராக. ஆமென்

புதிய உடன்படிக்கையின் பிள்ளைகளுக்குள் தேவ ஆவியானவர் வாசம் செய்வதால். அவர் என்னோடும், உங்களோடும் அனுதினமும் பேசி உறவாடி வழிநடத்தி, மகிழ்விப்பாராக. ஆமென்.

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. மத்தேயு 5:3 

நன்றி கர்த்தாவே.

த. பிரபா

 

 

 

 

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved