ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்.


பவுலடிகளாரின் மூன்றாவது நற்செய்திப் பயணமானது கி.பி 53-58 வரையான காலப்பகுதியை உள்ளடக்கியதாகும். இந்தக் காலப்பகுதிகளிலேயே 1கொரிந்தியர், 2 கொரிந்தியர், ரோமர் நிருபங்களை அவர் எழுதினார்.
மூன்றாண்டுகளுக்கு மேலான (கி.பி 54-56) காலப்பகுதியை எபேசுவில் செலவு செய்தார். மசிடோனியா, கொரிந்துவரை சென்று, எருசலேமுக்கு திரும்பிப் போகும் வழியில் பல பட்டணங்களில் தங்கி உபதேசித்துச் சென்றார். அதிலொன்று மிலேத்து எனும் துருக்கிய கரையோரப் பட்டணமாகும்.  அங்கிருந்து எபேசு சபை மூப்பரை அழைப்பித்து, அவர்களுக்கு அவர் செய்தவற்றை நினைவுபடுத்தி, தன்னுடைய ஊழிய அனுபவங்களையும், தான்பட்ட கஷ்ரங்களைக் குறித்துச் சொன்னதோடு, எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களை எதிர்வுகூறி, மனம்விட்டு பேசியதை
அப்போஸ்தலர் 20: 17-38 வரையான வேதப்பகுதியில் வாசிக்கலாம்.
பவுலடிகளாரின் ஊழியத்தை, அவரின் தனித்துவத்தைக் குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்ள வேண்டுமாயின், இப்பகுதிகளைத் தியானித்தாலே போதுமானதாகும்.
அநேக விஷேச காரியங்களை உள்ளடக்கிய இந்தப் பகுதியிலிருந்து, அப் 20: 33, 34, 35 வசங்களில், அவர் மனுஷ தயவில் வாழாததை எடுத்துக்காட்டுகின்றது.

ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. 20:33
நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது. 20:34
இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான். 20:35

1. பிறனுடையதொன்றையும் இச்சிக்கவில்லை
2. வேலை செய்து, கூட இருந்தவர்களையும் போஷித்தார்.
3. பலவீனரைத் தாங்கினார்.

நிலையான குடியிருப்பற்றவர், சொந்த குடும்பமற்றவர், ஐம்பது வயதை தாண்டியவர், ஆத்தும பாரம் கொண்டவரான பவுலடிகளார், பரதேசி போன்று பல தேசங்களுக்கு பயணித்து, இயேசுக்கிறிஸ்துவின் நற்செய்தியை கொண்டு சென்றதோடு, மனசளவில் கூட பிறருடைய பொருளையோ, பணத்தையோ, உதவியையோ பெற்றுக்கொள்ள முயற்சித்ததோ விரும்பியதோ இல்லை.
பாடுகள் துன்புறுத்தல்கள் மத்தியில், இரவு பகல் பாராது பிரயோஜமான அனைத்தையும் பிறருக்கு போதித்து வந்தார்.

அப்போஸ்தலர் நடபடிக்கையை எழுதிய லூக்கா இந்த பயணத்தில் கூடவே இருந்தார். பவுலடிகளார் தனக்கு மட்டுமல்ல கூட இருந்தவர்களுக்கு சேர்த்தே வேலை செய்ததை நினைவுபடுத்தியதை, கூட இருந்த லூக்காவே சாட்சியாக அதை எழுதியிருக்கிறார்.

பலவீனரைத் தாங்கவும், வாங்குவதைக் காட்டில் கொடுப்பது பாக்கியம் என்று இயேசுக்கிறிஸ்து சொன்னதை, பவுலடிகளார் நடைமுறைப்படுத்திக் காட்டியவர்.
வேதப்புத்தகத்தில் வாங்குவதைக் காட்டில் கொடுப்பது பாக்கியம் என்பதை வேறெங்கும் வாசிக்க முடியாது. இயேசுக்கிறிஸ்து போதித்த, மற்றும் செயல்பட்ட அனைத்துக் காரியங்களும் வேதத்தில் எழுதிவைக்கப்படவில்லை. வாய்வழியாக வந்த செய்திகள் பலவற்றை பவுலடிகளார் கேட்டிருப்பார்.
இயேசுக்கிறிஸ்துவும் பிறரிடமிருந்து வாங்கி வாழாது, பிறருக்கு கொடுத்தே வாழ்ந்தார்.
வாங்குவதென்பது தன்னலம் சார்ந்தது. தனக்கானதொன்றை பணம் கொடுத்தோ, இலவசமாகவோ, அல்லது பண்ட மாற்றாகவோ, சேவையாகவோ பெற்றுக் கொள்வதையே வாங்குவதென்று சொல்லுகிறோம்.
பவுலடிகளாரும், இயேசுக்கிறிஸ்துவும் இலவசமாக பெற்றுக்கொள்வதை (வாங்குவதை) மையப்படுத்தியே சொல்லியிருக்கிறார்கள்.
அதுபோலவே கொடுப்பதென்பதையும் இலவசமாக கொடுப்பதையே மையப்படுத்தியும் சொல்லியிருக்கிறார்கள். இன்று கொடுப்பதென்றால், பணத்தையே கொடுப்பதாக அநேகர் கருதுகிறார்கள். பணம் ஒருபகுதி மட்டுமேயாகும்.

இயேசுக்கிறிஸ்து என்னவெல்லாம் கொடுத்தார்?
பாகுபாடற்று எல்லோரையும் அன்பாக நேசித்தார், பல மணிநேரமாக போதித்தார், குறைகளை நீக்கினார், பாவத்தில் இருந்தவர்களுக்கு விடுதலை கொடுத்தார், இப்படி அவர் எங்களுக்கு கொடுத்த அநேக காரியங்களை எழுதிக் கொண்டே போகலாம்.
கடைசியாக, எங்களுடைய தண்டனைக்காக, அவர் தனது உயிரையே கொடுத்தார்.

ஆபிரகாம் என்ன கொடுத்தார்? தன்னுடைய சுதேச நில வாழ்க்கையை தியாகம் செய்தார். லேத்துவுக்கு தனது உரிமைகளை விட்டுக்கொடுத்தார், மகனை பலியிடக் கொடுத்தார், தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் கர்த்தருக்காக கொடுத்தார்.
பவுல் என்ன கொடுத்தார்? தனிப்பட்ட சுகபோக வாழ்க்கையை துறந்து, நற் செய்தியை உலகத்து மக்களுக்கு எடுத்துச் சென்றார். பாடுகளைச் சகித்து உபதேசித்தார், ஜெபித்தார், நிருபாங்களை எழுதி, முழு நேரத்தையும் கர்த்தரின் பணிக்காக தன்னையே கொடுத்தார்.
பவுலடிகளாரும் முழு வாழ்க்கையையும் கர்த்தருக்காக கொடுத்தார்.
இப்படியே ஒவ்வொரு பரிசுத்தவான்களும், அவர்களது வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் கர்த்தருக்கு கொடுத்தார்கள்.
விஷேசமாக பவுலடிகளார் தனது கையின் பிரயாசை மூலம் பலவீனரைத் தாங்கினார். இது குறித்தே சுருக்கமாக தியானிக்கப்போகிறோம்.

கொடுக்கிறது பாக்கியமென்று இயேசுக்கிறிஸ்து சொல்லியிருக்கிறார், அப்படியே வாழ்ந்துமிருக்கிறார். பவுலடிகளாரும் அப்படியே சொல்லியும் வாழ்ந்துமிருக்கிறார். இவற்றை வாசிக்கும் நாங்களும் அப்படியே வாழ வேண்டும்.
கொடுப்பதானது தெய்வீக சுபாவம். தன்னுயிரைக் கொடுத்து எங்களை மீட்டுக்கொண்ட இயேசப்பாவுக்கு, அவர் இராஜ்ஜிய விரிவாக்கத்துக்கு, எங்களை முழுமையாக ஒப்புக்கொடுக்க வேண்டும். ஜெபிப்பதன் மூலம், சத்தியத்தை சொல்வதன் மூலம், பிரசங்கிப்பதன் மூலம், பிறருடைய இரட்சிப்புக்காக, ஆவிக்குரிய வளர்ச்சிக்காக நேரத்தை ஒதுக்கி செயற்படுவதோடு, தேவையுள்ள, குறைவுகள் உள்ளோரை போஷிக்க பிரயாசப்பட வேண்டும்.
வெறும் வார்த்தைகளால் ஆறுதல் படுத்துவதோடு, ஆலோசனை சொல்வதோடு நின்றுவிடாமல், செயலில் காண்பிக்க வேண்டும்.
இன்று நாங்கள் எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கக் கூடிய சமூகக் கட்டமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆகவே பணம் கொடுப்பதும் அவசியமானதொன்றே.
அப்பணத்தை தேவையறிந்து, ஆளறிந்து கொடுக்க வேண்டும்.
கொடுப்பதென்றாலே வாங்குவதற்கு ஒருத்தர் இருக்க வேண்டும், அவர் யார்?
பவுலடிகளாரே சொல்லுகிறார் பலவீனரென்று.

தேவைகள், குறைகள், இயலாமையுள்ளவர்களே பலவீனர் ஆவார்கள். கொடுப்பவரின் வாழ்நிலையைக் காட்டில் தாழ்நிலையில் இருக்கும் பலவீனரையே தாங்க வேண்டும்.
பரிசுத்த வேதாகமத்தில் 1 இராஜாக்கள் 17ம் அதிகாரத்தில் சாறிபாத் ஊர் விதவையின் கதையை படிக்கலாம்.
கேரீத் ஆற்றண்டையிருந்த எலிசாவை சாறிபாத் ஊர் விதவையிடம் போகும்படி கர்த்தர் சொன்னார். கேரீத்திலிருந்து 130 km தூரத்திலிருக்கும் சாறிபாத் ஊருக்கு கால்நடையாக எலிசா சென்றிருப்பார். பயணத்திற்கு பல நாட்கள் எடுத்திருக்கும். பசியோடும் களைப்போடும் சென்ற எலியாவுக்கு விதவையிடம் எப்படி உதவி கேட்பதென்ற தயக்கம் நிச்சயமாக இருந்திருக்கும். ஆகவே தான் அவளைக் கண்டதும் முதலில் தண்ணீர் கொண்டுவரும்படி கேட்டுக் கொண்டார். அங்கு நடந்த அனைத்து சம்பாஷனையும் வேதத்தில் ஆவியானவர் எழுதி வைக்கவில்லை.
நான் நினைக்கிறேன் எலியா தான் தூர தேசத்திலிருந்து வருவதாகவும், தானொரு தேவதாசனென்றும் தன்னை அறிமுகம் செய்து வைத்திருப்பார்.
அதின் பின்னரே தண்ணீர் கேட்டிருப்பார். இந்த இடத்தில் சாறிபாத் ஊர்விதவை எலியாவின் பரிதாபமான சூழ்நிலையை கருதி தண்ணீர் எடுக்க புறப்பட்டிருப்பாள்.
கொண்டுவர அவள் போகிறபோது அவர் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான்.
அதற்கு அவள்: பானையில் ஒரு பிடிமாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள். அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம்.

இந்த சம்பாஷனையிலிருந்து எலியாவின் மனப்பான்மையை புரிந்து கொள்ளலாம். வறுமையின் விழிம்பில் வாழ்ந்து கொண்டிருந்த விதவையிடமிருந்து பசியாற உணவு கேட்காமல், முதலில் சுடும் சிறிய அடையைக் கொண்டுவரும்படி கேட்டுக் கொள்ளுகிறார். விதவையின் இரக்க குணத்தை வெளிப்படுத்த, உதவி செய்ய வாய்ப்பளிப்பதே எலியாவின் நோக்கமாயிருக்கிறது. அதுவே அவளுக்கு தேவ தயவை கொண்டுவரும் கிருபையை கொண்டுவரும், அற்புதம் நிகழும் என எலியா விசுவாசித்தார். எலியா கேட்டுக்கொண்டபடி விதவை செயல்பட்டாள். அந்த வீட்டுக் குறை தீர்ந்தது, இல்லாமையும் அகன்றது. கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பஞ்ச காலம்வரை பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை.

இந்த சூழ்நிலையில் விதவையைக் காட்டில் எலியா குறைவுள்ளவராயிருந்தார். விதவைக்கு வசிப்பதற்கு ஒரு வீடிருந்தது. உறவெண்டு சொல்லிக் கொள்ள ஒரு பிள்ளையிருந்தது. ஒரு நேரமாவது சாப்பிடுவதற்கு உணவிருந்தது. இவை எதுவும் எலியாவிடமில்லை. அவர் தேவமனுசன் என்ற போதும், அவருக்கும் குறைவுகள் இருந்தது. இந்த தேவ மனுசனை ஒரு விதவை போஷிப்பது நியாயமே. தன்னைவிட தாழ்நிலையில் இருந்த எலியாவை விதவை பேஷித்தாள். அற்புதத்தை பெற்றுக் கொண்டாள்.

விதவையின் மனதுருக்கத்தை மெச்சியே ஆகவேண்டும். பொதுவாக சிறு பிள்ளை இருப்பவர்கள். தங்கள் பிள்ளைக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். ஆனால் இவளோ தன் பிள்ளையைக் காட்டில் தேவமனுசன் பலநாள் சாப்பிட்டிருக்க மாட்டாரென நினைத்து, முதல் அடைய எலிசாவுக்கு செய்து கொடுத்தாள். எலியாவையோ கர்த்தரையோ பார்த்து அவள் முறுமுறுக்கவில்லை, திட்டவில்லை. தன்னுடைய கடைசியும் முதன்மையுமான உணவை கொடுத்ததால் பிழைத்துக் கொண்டாள். ஒருவேளை எலியாவுக்கு கொடுக்காமல் சாப்பிட்டிருந்தால், அதுவே அவளின் கடைசி உணவாகவும்.
வேதத்தில் அவள் இடம்பிடிக்காமலும் போயிருப்பாள்.

ஒருநாள், அந்த விதவையின் மகன் வியாதிப்பட்டு இறந்து போகிறான். அப்பொழுது அவள் எலியாவிடம் முறையிட்டு அழுகிறாள். எலியா பிள்ளையை வாங்கி மேல் அறையில் கொண்டு போய், அவள் தனக்கு செய்த நன்மைகளைச் சொல்லி கர்த்தரிடம் மன்றாடி ஜெபித்து, அப்பிள்ளையை உயிரோடு எழுப்பப்பண்ணினார்.

மனுஷனாகிய எலியாவே பெற்ற நன்மைகளை மறவாதிருக்கும் போது, பரமபிதா மறப்பாரோ?
நீங்கள் கொடுத்தால் தான் தேவன் ஆசீர்வதிப்பார். கொடுக்காவிட்டால் தேவன் ஆசீர்வதிக்கமாட்டார் என்பதல்ல. கர்த்தர் எல்லோரையும் நேசிக்கிறார், ஆசீர்வதிக்கிறார். அவர் பாரபட்சம் பார்ப்பவரல்ல, ஓரவஞ்சகம் செய்பவருமல்ல. எல்லோரையும் ஓரே மாதிரியே பார்க்கிறார். ஆனால் தேவனுக்காக கொடுப்பவர்கள் மீது அவர் பிரியமாயிருக்கிறார். கொடுப்பவர்களுக்கு தேவதயவும், கிருபையும் பெருகும். கொடுப்பவர்கள் இக்கட்டுக்கள், நெருக்கடிகள், துன்பங்களில் அகப்படும் பொழுது, எலியா விதவையின் உதவியை நினைத்தது போல கர்த்தரும் நினைத்துக் கொள்ளுவார். கிறிஸ்துவோடு ஜீவிக்கிறோமென்பதை கனிகளை வைத்தே அறிந்து கொள்ளலாம்.

பிரியமானவர்களே!
மனுஷமனம் வாங்குவதிலேயே எப்பொழுதும் குறியாயிருக்கும், கொடுப்பதில் பின்னிற்கும், தாமதிக்கும்.
அபிஷேகம் பெற்ற பவுல், அழைக்கப்பட்ட பவுல், கிறிஸ்துவுக்குள் வாழ்ந்த பவுல் கைநீட்டி வாங்கவுமில்லை, யாதோருவரிடமும் கடமைப்படவுமில்லை.
பவுலடிகளார் தவிற்க முடியாத சூழ்நிலையில் சில சந்தர்ப்பங்களில் பிறரால் போஷிக்கப்பட்டதுண்டு.
ஆனால் அவர் ஒருபோதும் பிறனுடையதை இச்சித்ததில்லை. கொடுப்பதிலேயே வாஞ்சையாய் இருந்தார்.
இன்று பவுலை மிஞ்சிய ஊழியப்பளுவுள்ள ஊழியக்காறரைக் காணுகிறோம்.
அவர்கள் தமது ஆடம்பர சுகபோக வாழ்வுக்கு கொடுங்கள் கொடுங்களென வலியுறுத்துவதை காண்கிறோம்.
கேட்பதற்கும் பொற்றுக்கொள்வதற்கும் தகுதி தேவை.
கொடுப்பவர்களின் வாழ்நிலையைக் காட்டில் உயர்நிலையில் இருப்பவர்களுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
உண்மையான பலவீனமானவர்களை இனம்கண்டு அவர்களை தாழ்நிலையிலிருந்து உயர்த்த வேண்டும். அதுவே தேவனுக்கு பிரியமானது.
நாங்களும், எங்களது பிள்ளைகளும் பிறருக்கு உதவும் கரங்களாயிருப்போமாக.
பிறரிடம் கைநீட்டி வாங்காது, மனிதரிடம் கடமைப்படாது ஜீவிப்போம்.
பரத்தை நோக்கி கைகளை நீட்டி எங்கள் தேவைகள் குறைகளைச் சொல்லுவோமாக.
எங்கள் வீட்டு பானையிலே மா செலவழிந்துபோவதுமில்லை, கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதுமில்லை. ஆமென்.

ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. ஏசாயா 49:15

நன்றி கர்த்தாவே.

த. பிரபா

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved