ஆங்கிலம் | தமிழ் | சிங்களம்

 
 
  முகப்பு பக்கம்
  எங்களை பற்றி
  எங்கள் சேவைகள்
  தற்போதைய தேவைகள்
    ஜீவ வார்த்தைகள்
  கட்டுரைகள்
  வேதாகம வரைபடங்கள்
  ஜெப வேண்டுகோள்
  ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
  சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா
  கருத்துக்கள்
  ஒளிப்பதிவுகள்
  எங்களை தொடர்புகொள்ள

 தினசரி தியானம்
  ஆரம்ப நிலை
  இடை நிலை
    மேல்நிலை
  வேதாகம விளக்கம்

  ஜீவ வார்த்தைகள்

 பயனுள்ள இணைப்புகள்
  இணைய தளங்கள்
  www.tamilchristian.com
  www.tamilchristianworship.org
  வானொலி
  www.tamilchurchvos.org
  www.tamilchristianprayer.org
    தொலைக்காட்சி
  www.tamilchristianonline.net
    வேதாகமம்
  இணைய வேதாகமம்
    இணைய வேதாகமம் 2
    ஒலி வேதாகமம்
   


   

எனக்காக அழவேண்டாம்.


துன்பத்தை தாங்க முடியாத மனிதர்கள், கண்ணீர்விட்டுக் கதறி (சத்தமிட்டு) விம்மி வெளிப்படுத்தும் ஓர் உணர்வே அழுகையாகும். குழந்தைகள் பிறக்கும் போதே அழுது கொண்டே பிறக்கின்றன. பத்துமாதங்கள் வாழ்ந்ததொரு சூழலில் இருந்து, மிகப்பெரிய போராட்டத்தின் பின் புதியதோர் சூழலுக்குள் பிரசவிப்பதானதே அவ்வழுகைக்கு காரணம். குழந்தைகள் பேசமுடியாமலிருக்கும் காலத்தில் பசி, தாகம், வியாதியின் நிமிர்த்தம் அழுவார்கள்.
வளர்ந்து வரும்பொழுது ஆசைப்பட்டனவற்றை பெற்றுக் கொள்வதற்காக அழுவார்கள். தொடர்ச்சியாக வளர்ந்து தோல்விகள், துன்பங்கள், இயலாமையில் நின்று அழுவார்கள். மகிழ்ச்சியில் கூட அழுவார்கள், காரணம் எதிர்பார்க்காததொன்று, அல்லது தகுதிக்கு மிஞ்சிய நன்மையை பெற்றமையாலெயாகும். ஒருசிலர் அழுபவர்களைக் கண்டாலே அழுவார்கள். இன்னொருசிலர் சினிமா காட்சியில் வரும் சேக காட்சிகளை கண்டு அழுவார்கள். தப்பு செய்துவிட்டு அதிலிருந்து தப்புவதற்காக அழுகையை ஆயுதமாக பாவிப்போருமுண்டு. போலியாக அழுது காரியம் சாதிப்போரும் உண்டு. இவ்வுணர்விலிருந்து ஒருத்தரும் தப்பமுடியாது.

சரித்திரத்திலேயே, தாங்கமுடியாத பாடுகள், துன்பத்திலிருந்த ஒரே ஒருவர் தனக்காக அழாமல், தான்னைப் பார்த்து அழுதமக்களை நோக்கி, எனக்காக அழாமல் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்களெனச் சொன்னவரைக் குறித்தே சுருக்கமாக தியானிக்கப்போகிறோம்.

இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
லூக்கா 23:28ல் இதை நாங்கள் வாசிக்கலாம்.

1. எப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசுக்கிறிஸ்து சொன்னார்?
2. யாருக்கு சொல்லப்பட்டது?
3. ஏன் சொல்லப்பட்டது?

சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னான, கடைசி 24 மணிநேரத்திற்குள் இயேசுக்கிறிஸ்துவுக்கு நடந்த சம்பவங்களுக்குள்ளேயே லூக்கா 23:28ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட சம்பவமும் உள்ளடங்குகிறது. இயேசுக்கிறிஸ்து கெத்சமனே தோட்டத்தில் ஜெபித்துக்கொண்டிருந்த பொழுது இரத்தம் வியர்வையாக வெளியேறியதினால், அவருடைய சரீரம் பெலவீனப்பட்டிருந்தது. அதற்கு பின் காட்டிக்கொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு எருசலேமுக்கு கொண்டு வரப்படுகிறார். 5 கி.மீ மேலான தூரத்தை கால் நடையாகவே நடந்து வருகிறார். முதலாவதாக அன்னாவிடம் கொண்டுபோகிறார்கள், அங்கே விசாரிக்கப்படுகிறார். (யோவான் 18:12-24). அன்றிரவே இயேசுவை பரியாசம்பண்ணி, அடித்து, கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து, தூஷணவார்த்தைகளைச் சொன்னார்கள். (லுக்கா 22: 63-65). அன்றிரவு முழுவதும் இயேசுக்கிறிஸ்து நித்திரை செய்ய வாய்ப்பே இல்லை. அதிகாலை நியாய சங்கத்தில் வைத்து விசாரிக்கிறார்கள். அதன் பின்னர் பிலாத்துவிடம் கொண்டு போகிறார்கள். பிலாத்து ஏரோதுவிடம் கொண்டு போகச் சொல்லுகிறார். ஏரோதுவும் நிந்தித்து பரியாசம்பண்ணி மீண்டும் பிலாத்துவிடம் அனுப்பி வைக்கிறான். (லூக்கா 23: 1-11). மீண்டும் பிலாத்து விசாரிக்கிறார். மக்களைப்பார்த்து யாரை விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்கிறார். அதற்கு மக்கள் பரபாசை விடுதலை செய்யும்படி கேட்டுக்கொண்டார்கள். இயேசுவை வாரினால் அடிப்பித்து சிலுவையில் அறையும்படி ஒப்புவித்தான். (மத்தேயு 27:26).
போர்ச்சேவகர் அவரைத் தேசாதிபதியின் அரண்மனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அவ்விடத்தில் போர்ச்சேவகருடைய கூட்டமுழுவதையும் கூடிவரச்செய்து, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள். அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள். (மாற்கு 15:16-20).
அறையப்போகும் சிலுவையை, அவரைக் கொண்டே தூக்கிவர வைத்தார்கள். இயேசுக்கிறிஸ்துவை அடித்து கொடுமைப்படுத்தியதன் மூலம், அவரது சரீரமானது கலப்பையைக் கொண்டு உழுதது போல காட்சி தந்தது.

நடக்கவோ, எழுந்து நிற்கவோ சக்தியற்று விழுந்து, எழும்பி, தள்ளாடி தள்ளாடி சிலுவையை சுமந்து மெதுவாக நடந்தார். இதைக் கவனித்துக் கொண்டிருந்த பேர்ச்சேவகர்க்கு, இயேசுக்கிறிஸ்து கொல்கொத மலைவரை உயிரோடு போவாரா என்ற பெரிய கேள்வி எழுந்தது. எனவே அவ்வழியால் சென்ற ஒருவரை சிலுவை சுமக்க நிர்ப்பந்தித்தார்கள்.
இந்த வேளையில் இயேசுக்கிறிஸ்துவின் பாடுகளையும், பரிதாப நிலையையும் கண்டு பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்கள். அழுதுகொண்டிருப்பவர்களை நோக்கியே இயேசுக்கிறிஸ்து எனக்காக அழாதீர்கள் உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்களெனச் சொன்னார்.

2. யாருக்குச் சொல்லப்பட்டது?

பஸ்கா பண்டிகையை அனுசரிக்க உலகத்தின் அநேக பாகங்களிலிருந்து பல லட்சம் மக்கள் எருசலேம் தேவாலயத்துக்கு வருவார்கள். அவ்வாறு வந்திருந்த பிற தேசத்து பெண்களும், இஸ்ரவேல் நாட்டுப் பெண்களுமே அழுதார்கள். உண்மையாக அழுதார்களா? உணர்ச்சிவசப்பட்டு அழுதார்களா? அன்பினால் அழுதார்களா? என்பதையெல்லம் இயேசுக்கிறிஸ்து ஆராயாமல், அழுவதை கனப்படுத்தி அவர்களை அழ வேண்டாமெனச் சொன்னார். அது அவரின் பெருந்தன்மையாகும். உதாரணத்துக்கு இயேசுக்கிறிஸ்துவை சிக்கவைக்க வேதபாரகர்கள், பரிசேயர் கேள்விகளை உள்நோக்கத்தோடு கேட்க்கும் போது, அக்கேள்விகள் அனைத்துக்கும் பதில் கொடுத்தார். பெண்கள் மென்மையான சுபாவம் கொண்டவர்கள். அவர்கள் எளிதில் மனமுடைந்து போவார்கள். தாய்மாரே பிள்ளைகளைக்குறித்து அதிக அக்கறை கொண்டவர்களாயிருப்பார்கள். அவர்களை நோக்கியே, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள்வருமென்றார். (லூக்கா 23:29)
இப்படிப்பட்ட ஜனக்கூட்டமே ஒருவாரத்துக்கு முன்னர் கழுதையில் உக்கார்ந்து வந்தவரை, தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். (மத்தேயு 21:9). குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். (யோவான் 12:13). இதே ஜனங்களே அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள்.
(லூக்கா 23:21). மக்களின் மனங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். ஆனால் எப்பொழுதும் மாறாத அன்பு கொண்ட கர்த்தர் பாடுகளின் மத்தியிலும் அவர்கள் நலனில் அக்கறைப்பட்டு பேசினார்.

3. ஏன் அவ்வாறு சொல்லப்பட்டது?

இயேசுக்கிறிஸ்துவுக்கு அவரின் எதிர்காலம் குறித்து நன்றாகவே அறிந்திருந்தார். அவர் காலங்களுக்கு முந்தியவர், ஆதியும் அந்தமும் இல்லாதாவர், தொடக்கமும் முடிவுமற்றவர். ஆகவே சிலுவை மரணம் முடிவல்ல என்பதை அறிந்து வைத்திருந்ததோடு, மக்களின் எதிர்காலத்தையும் அறிந்துவைத்திருந்தார்.
சாதாரண மனிதர்களைப் போல சுய அனுதாபம் தேடாதவராய், அழும் மக்களின் நிலையுணர்ந்து அவர்கள் மீதே அனுதாபப்பட்டார்.
ரோமத்தளபதியான தீத்து, கி.பி 70 காலப்பகுதியில் எருசலேமை முற்றுகையிட்டு, தேவாலயத்தை தீயிட்டு பல லட்சம் மக்களைக் கொன்று, பல்லாயிரக்கணக்கானோரை சிலுவையில் அறைந்தான். யூதர்களை அடிமைகளாக விற்று, பலலட்சம் பேரை நாடுகடத்தினார். எருசலேமுக்கு யூதர்கள் திரும்பி வரக்கூடாதெனக் கட்டளையிட்டார். இந்த சம்பவத்தை மனதில் வைத்தே இயேசுக்கிறிஸ்து உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்களெனச் சொன்னதாக வேதவல்லுனர்கள் சொல்லுகிறார்கள். இக்கருத்தும் உண்மையே,
லூக்கா 19: 41-45 இலும், யோவான் 11:35 இலும் எருசலேம் நகரத்தை பார்த்து கண்ணீர்விட்டு தீர்க்கதரிசனமாக ஒரு கல்லின் மேல் ஒரு கல்லில்லாமல் போகுமெனச் சொன்னார்.
அதே வேளை லூக்கா 23:31ல் பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார். இது எக்காலத்துக்கும் பொருந்தக் கூடியது. பச்சை மரத்துக்கும், பட்டமரத்துக்குமுரிய வேறுபாடுதான் என்ன? உயிருயுள்ள பச்சை மரம் சுயநலமின்றி பலருக்கு நிழல் கொடுத்து, கனிகொடுத்து, ஜிவராசிகள் சுவாசிக்கும் ஒக்சிசனை வெளியேற்றுகிறது. ஜீவராசிகளின் உயிர் மூச்சுக்கு அவசியமானதொன்றை பிறப்பிக்கிறது. இவ்வாறு அநேக பலன்கள் பச்சை மரத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். இப்பச்சை மரத்தைக்காட்டில் மேலான காரியங்களை இயேசுக்கிறிஸ்து செய்து காட்டினார். மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார், பிணியாளிகளை சுகமாக்கினார், உணவுகொடுத்தார், ஜீவ வார்த்தயை சீஷர்களுக்கு கொடுத்தார், முன்னுதாரணமான வாழ்க்கை வாழ்ந்துகாட்டியதோடு, கடைசியாக தனது ஜீவனைக் கொடுத்து, முழு உலகத்துக்கும் இரட்சிப்பை பெற்றுக் கொடுத்தார். முழு வாழ்க்கையையுமே பிறருக்காக வாழ்ந்தவரையே அடித்து, துப்பி, நிந்தித்து, கொலை செய்யதார்கள். இப்படிப்பட்ட அநீதியான சமூகத்தில் சாதாரண மனிதர்கள் எப்படி வாழ்வதென்பதே பட்டமரத்துகான ஒப்பீடாகும். ஆகவே இப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து தப்பிக்கொள்வதற்காக உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுது ஜெபியுங்களெனச் சொன்னார்.

பிரியமானவர்களே!
ஒவ்வொரு ஆண்டும் இயேசுக்கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் நினைவுகூருகிறோம். பெரும்பாலான தேவப்பிள்ளைகள் இதையொரு சடங்காகவே அனுஷ்டிக்கிறார்கள். குறிப்பிட்ட அந்த நாட்கள் கடந்ததும், தனக்கானதை தேடும் பழைய வாழ்க்கைக்குள் பிரவேசித்துவிடுகிறார்கள்.
இயேசுக்கிறிஸ்து அடிக்கப்பட்டு நிந்திக்கப்பட்டு உயிர் உசாலாடிக்கொண்டிருந்த போதும், தன்னைப் பார்த்து அழும் மக்கள் மீதே கரிசனை கொண்டார்.
மதவாதிகளின் விசாரணையின்போதும், போர்ச்சேவகர்களால், மக்களால் பரிகாசம் பண்ணப்பட்டு, கேலி சொய்து கேள்விகள் பல கேட்கப்பட்ட போதும், அவர்களை தூசிக்காது, திட்டாது, கோபிக்காது, பதிலொன்றும் சொல்லாது தாழ்மையாக இருந்தார்.
எப்பொழுதும் தனது பிள்ளைகள் மகிழ்ச்சியானதும், சுபீட்சமான வாழ்க்கை வாழ வேண்டுமென பிரயாசைப்படும் தேவன், அப்பிள்ளைகள் கவலைப்படுவதையோ கண்ணீர்விட்டு அழுவதையோ ஏற்றுக்கொள்ளவோ அனுமதிக்கவோ மாட்டார்.
கஷ்ட துன்பங்களுக்கு கவலையோ, கண்ணீரோ தீர்வல்ல. கர்த்தரின் பதாத்தில் அமர்வதே தீர்வாகும்.
மரண விழிம்பில் நின்றபோதும் மற்றவர்கள் (பிறன்) குறித்து சிந்தித்த கிறிஸ்துவின் சிந்தை கொண்டவர்களாக நாமிருப்போம்.
பிறர் கவலையை, கண்ணீரை துடைக்கும் கரங்களாய் மாறுவோம்.
கண்ணீரற்ற சமூகமாகத்தை உருவாக்க, கண்ணீரோடு நாங்கள் ஜெபிப்போமாக.
ஆமென்.

நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். வெளி 5:5

நன்றி கர்த்தாவே

த.பிரபா.

 

 

   
   
 
எங்களை தொடர்புகொள்ள
T.Pirabagaran
89 Laurel crescent
Romford
Essex
Rm7 0ru
England
  TP:-
Email:- info@thehandofjesus.com
சமூக வலைத்தளங்களில் எங்களுடன் தொடர்பு கொள்ள

        
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105
Copyright © 2015 The hand of jesus.com All Rights Reserved